Article No.1972
Date: 4 July 2015
Written by London swaminathan
Uploaded from London at 16-46
சம்ஸ்கிருதம் பழைய மொழி மட்டுமல்ல. உலகிலேயே அறிவியல் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரே மொழி இதுதான். அதுவும், இலக்கணம், இலக்கியம், அகராதி, சொற் பிறப்பியல், சாத்திரங்கள் ஆகிய எல்லாவற்றிலும் முதல் நூல்களைத் தந்த மொழி. 2750 ஆண்டுகளுக்கு முன்னரே இதற்கு பாணினி என்னும் முனிவன் எழுதிய இலக்கணத்தைப் பார்க்கையில் அதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இம்மொழியில் இலக்கியம் தோன்றின என்பதை எண்ணி எண்ணி இறும்பூது எய்தலாம் ஒவ்வொரு இந்தியனும்.
இலக்கியம் இன்றேல் இலக்கணம் இல்லை – என்பது தமிழர் வாக்கு. ஆகையால் பாணினி இலக்கணம் வரும் முன்பு வேதம் தவிர வேறு பல நூல்களும் இருந்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல பாணினிக்கு முன்னர் இருந்த இலக்கண வித்தகர் பெயர்களையும் நாம் அறிவோம். ஆனால் அவர்தம் நூல்கள் நமக்குக் கிடைத்தில.
ஒரு சில எடுத்துக்காட்டுகளைக் காட்டினால் சம்ஸ்கிருத கட்டமைப்பு உங்களுக்கே விளங்கும்.
சம்ஸ்கிருதச் சொற்கள் எல்லாம் வேர்ச் சொல் ஒன்றிலிருந்து பிறந்தவை. இந்த வேர்ச் சொற்கள் எப்படி வளர்ந்து மலரும் என்பதை பாணினி விளக்கியிருக்கிறார். ஒவ்வொரு சொல்லிலும் முன்னொட்டுகளைச் சேர்த்தால் அதன் பொருள் மாறிக் கொண்டே வரும். இதோ பாருங்கள்:-
தமிழில் நாயகன், நாயக்கர், விநாயகர் என்று எவ்வளவோ சம்ஸ்கிருதச் சொற்களைப் பயன்படுத்துகிறோம். இதற்கெல்லாம் மூலச் சொல், வேர்ச்சொல் நீ= தலைமை தாங்கு, வழிகாட்டு
நயதி = அவன் வழிகாட்டுகிறான்
அநயத் = வழி நடத்தினான்
நயது = அவனே வழி காட்டட்டும்
நயேத் = அவன் வழிநடத்தலாம்
நிநாய = அவன் வழிநடத்தியிருந்தான்
அநைசித்= முன்னொரு காலத்தில் வழிநடத்தினான்
நேஸ்யதி = வழிநடத்துவான்
அநேஸ்யத்= அவன் வழிநடத்தியிருப்பான்
நீயதே = அவன் வழிநடத்தப் பட்டான்
நாயயதி= அவன் வழிநடத்த வைப்பான்
அநாயயத் = அவன் வழிநடத்த வைத்தான்
நயயது= அவன் வழிநடத்த வைக்கட்டும்
நனனேத்= அவனை வழிநடத்த வைக்கச் செய்யலாம்
நினாயயிசதி= அவன் வழிநடத்தச் செல்ல வைக்க விரும்புகிறான்
நினீசு = வழிநடத்த விரும்புகிறான்
நினீசா = வழிநத்டதிவைக்க விருப்பம்
நேனீயதே = அவன் அதிரடியாக வழிநடத்துகிறான்
இந்த வேர்ச் சொல்லுக்கு முன், சில முன்னொட்டுகளைச் சேர்த்தவுடன் எப்படி பொருள் மாறுபடுகிறது என்று பாருங்கள்:
அனு நயதி = வேண்ட
அப நயதி = எடுத்துச் செல்ல
அபி நயதி = மேடையில் நடிக்க ( அபிநயம் செய்)
ஆனயதி = அழைத்து வர
உத்நயதி =எழுப்ப
உபநயதி= கொடுக்க
நிர்நயதி = முடிவு செய்ய ( நிர்ணயம் செய்ய)
பரிநயதி = கல்யாணம் செய்ய ( உஷா பரிணயம்)
விநயதி = அகற்ற, நீக்க
சம்நயதி = ஒன்று சேர்க்க
புத்தி, போதி மரம், போதனை, புத்தர் முதலிய சொற்கள் நமக்கு நன்கு தெரியும். புத்=அறிதல் என்னும் வேர்ச் சொல்லிலிருந்து
போத, போதன, புத்தி, போதக, பௌத்த, புத்திமத்(மான்), புத்யதே, போபுத்யதே, போதி தர்ம, போதி சத்வ, புதன் (கிரகம்), புதன் (கிழமை), புத்தர் எல்லாம் வந்தன.
இதுவே
அனு போத்யதே
அவ போத்யதே
உத் போத்யதே
ப்ர போத்யதே
ப்ரதி போத்யதே
வி போத்யதே
சம் போத்யதே என்றும் பல பொருள்களைத் தரும்.
சம்ஸ்கிருதத்தை – சம்ஸ்கிருத இலக்கணத்தைப் படிக்கப் படிக்க வியப்பும் ஆர்வமும் அதிகரிக்கும். உலகில் இன்று காணும் செம்மொழிகள் இல்லாத காலத்தே— அம் மொழிகள் வளர்ச்சியடையாத காலத்தே – ஏனைய மொழிகளில் நூல்களே எழுதாத காலத்தே – இவ்வளவு இலக்கண விதிகள் இருந்திருந்தால் — 2750 ஆண்டுகளுக்கு முன் இருந்திருந்தால்— அதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக அம்மொழி இருந்திருக்க வேண்டும் என்று வெளிநாட்டினரும் உள்நாட்டு அறிஞர்களும் மூக்கின் மேல் விரலை வைத்து வியக்கின்றனர். கோல்டுஸ்டக்கர் மற்றும் இந்திய சம்ஸ்கிருத அறிஞர்கள் அனைவரும் பாணினியை கி.மு 750 என்று காலம் கணித்துள்ளனர்.
2000 வேர்ச் சொற்கள் இருக்கின்றன. பாணினி வினை சொற்களை பத்து வகுப்புகளாகப் பிரித்தார். அவைகல்ளுக்கு அவர் கொடுத்த பெயர்களைப் பாருங்கள்:
Sanskrit speakers in Karnataka village
பத்து ‘ல’-காரங்கள்!
லட், லன், லிட், லுன், லுட், ல்ருட், லொட், லின், லெட், ல்ருன்.
இவைகளையும் ‘ட்’ –டில் முடிபவை, ‘ன்’ –னில் முடிபவை என்று பிரிக்கலாம். எவ்வளவு மஹா மேதையாக இருந்தால் இப்படியெல்லாம், எளிமைப் படுத்த முடியும்.. சுருக்கி வரைதல் என்பதற்கு உலகில் ஒரே இலக்கணம் பாணினிதான். இவர் இவ்வளவு சுருக்கியதால் கி.மு.நாலாம் நூற்றாண்டிலேயே வரருசி உரை எழுதினார். அதற்குப் பின் கி.மு.இரண்டாம் நூற்றாண்டில் பதஞ்சலி மஹாபாஷ்யம் என்னும் மிகப் பெரிய விளக்கவுரை எழுதினார். நாம் திருவள்ளுவரை தெய்வப் புலவர் என்பது போல இவர் பகவான் பாணினி என்று போற்றித் துதிக்கிறார்!
யாராவது ஒருவன் சம்ஸ்கிருதத்தையும், தமிழையும் படிக்காமல் வரலாறோ, கலை விமர்சனமோ, பண்பாட்டுக் கட்டுரைகளோ எழுதப் புகுந்தால் ஏதேனும் ஒரு இடத்தில் வாழைப்பழத் தோலியில் வழுக்கி விழுந்தது போல, சறுக்கியிருப்பதை காணலாம்— நமக்கும்
இலக்கியத்தில் நகைச் சுவை வேண்டுமல்லவா!!!.
நான் முன்னர் எழுதிய “பாணினி மாஜிக்” என்ற கட்டுரையையும் (ஏப்ரல் 7, 2015) படிக்கவும்.




You must be logged in to post a comment.