கட்டுரை எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண். 1077; தேதி:– 1 ஜூன் 2014
பழங்கால இந்தியாவில், இந்துக்களுக்கு இருந்த நினைவாற்றல் பற்றி பல சுவையான கதைகள், சம்பவங்கள் உண்டு. யஜூர் வேதத்தின் ஒரு பிரிவான சுக்ல யஜூர் வேதம் தோன்றியது எப்படி என்று அக்கதை விளக்குகிறது. படிப்பதற்கு கொஞ்சம் அருவருப்பாக இருக்கும். ஆனால் அதன் ஆழமான கருத்தைப் புரிந்து கொண்டால் மூக்கில் விரலை வைத்து வியக்கத் தோன்றும்.
புராதன இந்தியாவின் பெரிய அறிவாளி யாக்ஞவல்கிய மஹரிஷி. இந்த முனிவருடன் மோதிய உலகின் முதல் பெண் அறிவாளி கார்கி பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன். எப்போதுமே சர்ச்சையில் அடிபடும் யாக்ஞவல்கியர், இந்தக் கதையிலும் அப்படித்தான்! வேத வியாசர் என்னும் முனிவர் வேதங்கள் கட்டுக்கடங்காமல் போனதால் அதை நான்காகப் பிரித்து யஜூர் வேதத்தைப் பரப்பும் பொறுப்பை வைசம்பாயனரிடம் ஒப்படைத்தார்.
வைசம்பாயனரிடம் பயின்ற பல மாணவர்களில் யாக்ஞவல்கியரும் ஒருவர். ஒரு நாள் அவருக்கும் ஆசிரியருக்கும் இடையே காரசார விவாதம். நான் வெளியே போகிறேன் என்றார். உடனே குரு வைசம்பாயானர், ஒரு உத்தரவு போட்டார். என்னிடம் கற்றதை எல்லாம் ‘கக்கு’ என்றார். உடனே அவர் கற்றதை எல்லாம் ‘வாந்தி’ எடுத்தார். அங்கிருந்த சக மாணவர்கள் எல்லோரும் தித்திரிப் பறவைகளாக மாறி அந்த ‘’வாந்தியைக் கொத்தித்’’ தின்றனர். பின்னர் யாக்ஞவல்கியர் வெளியேறி சூரிய தேவனை நோக்கித் தவம் இருந்து புதிய –சுக்ல—யஜூர் வேதத்தை உண்டாக்கினார். பழைய வேதத்துக்கு கிருஷ்ண யஜூர் வேதம் என்று பெயர்.
கதையைப் படித்தால் கொஞ்சம் அருவருப்பாகத்தான் இருக்கும். மற்றவரின் வாந்தியைச் சாப்பிடுவதா? ஆனால் உண்மையில் இதன் பொருள் ஆழமானது. இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்தவுடனோ அல்லது யாக்ஞவல்கியர் தவம் செய்ய விரும்பியதாலோ ஆசிரியர் ஒரு உத்தரவு போட்டிருப்பார். அது என்ன? ‘’ யாக்ஞவல்கியரே நீர் போகலாம். ஆனால் சக மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போங்கள்”. அவர் உடனே ‘’சிஷ்யர்களே! எனக்கு அதிக நேரம் கைவசம் இல்லை. ஒரு முறை எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் ( வாந்தி எடுக்கிறேன்) சொல்கிறேன். நினைவிற் கொள்ளுங்கள்’’ என்று சொல்லி இருப்பார். வேதத்தை வாய்மொழியாகவே கற்க வேண்டும் என்ற விதி இன்றுவரை பின்பற்றப் படுவதால் மாணவர்கள் (தித்திரி) கிளிகளாக மாறி முடிந்ததைக் கற்றனர் (வாந்தியைச் சாப்பிட்டனர்).
இதுதான் உண்மையில் நடந்தது. மாணவர்கள் அவர் சொன்னதை அப்படியே கிரகித்துக் கொண்டனர்! ஏன் கிளிகளைச் சொன்னார்கள்? சொன்னதைத் திருப்பிச் சொல்லும் அபூர்வ சக்தி கிளிகளுக்கு உண்டு என்பதால் மாணவர்கள் கிளிகளாக மாறியதாக சங்கேத மொழியில் சொன்னார்கள். கிளிகளுக்கும் பிராமணர்களுக்கும் உள்ள தொடர்பை ஏற்கனவே கட்டுரையாகக் கொடுத்துள்ளேன். பிராமணர் வீட்டில் கிளிகள் இருப்பதை சங்கத் தமிழ் நூல்களும், சம்பந்தர் தேவாரமும், ஆதிசங்கரர்- மண்டன மிஸ்ரர் வாக்குவாத நிகழ்ச்சியும் காட்டுவதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன். ‘தித்திரி’ என்ற சொல் தமிழில் ‘தத்தை’ (கிளி) என்று மருவியது.

Swami Ganapathy Sachidananda with a parrot.
((நல்ல வேளை ! ஆரிய- திராவிட இன வாதம் பேசும் வெளிநாட்டு, வெள்ளைக்கார ‘ அறிஞர்களும்’ அதற்கு ஆமாம்சாமி போடும் நம்மூர்க் கோமாளிகளும் இந்தக் கதையில் இதுவரை ‘’கை வைக்க’’வில்லை. கிருஷ்ண என்றால் கருப்பு, சுக்ல என்றால் வெள்ளை!– “கருப்பு யஜூர் வேதத்தை திராவிடர்கள் உடையது என்றும் வெள்ளை (சுக்ல) யஜூர் வேதத்தை ஆரியர்களுடையது என்றும் இது ஆரியர்-திராவிடர் மோதலின் விளைவே”– என்றும் எழுதி இருப்பார்கள் அந்தக் கோமாளிகள். இது வரை ஏனோ அவர்களின் ‘’தீய பார்வை’’ இதன் மீது விழவில்லை!!))
நியாய சாஸ்திரம் பற்றி ஒரு கதை
வாசுதேவ சர்வபௌமன் என்ற பண்டிதர் நியாய (லாஜிக்) சாஸ்திர நிபுணர். ஆனால் இதைக் கற்க மிகவும் கஷ்டப்பட்டார். காரணம்? அந்தக் காலத்தில் பீஹாரில் உள்ள மிதிலா (சீதையின் ஊர்) நகரத்தில் ஒரே ஒருவர்தான் இதைக் கற்றுக் கொடுத்தார். வாசுதேவ சர்வ பௌமன் அவரிடம் சென்றார். ஆனால் அவர் எந்தப் புத்தகத்தையும் நகல் எடுக்கக் கூடாது என்றும் வேண்டுமானால் தங்கிக் கற்கலாம் என்றும் சொல்லிவிட்டார்.

வாசுதேவர், இதற்காகவே அங்கு தங்கி, முழுப் புத்தகத்தையும் மனப்பாடமாகக் கற்றார். பின்னர் மேற்கு வங்கத்தில் நவத்வீபம் என்னும் இடத்தில் தானே ஒரு கல்லூரி துவங்கி எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்தார்.. அவ்வளவு நினைவாற்றல் அவருக்கு!


You must be logged in to post a comment.