
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 13 June 2019
British Summer Time uploaded in London – 8-47 am
Post No. 6539
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.co
நடைச்சித்திரம்
தினம் நான் எட்டு ரவுண்ட் அடிக்கிறேன், நீங்கள் எத்தனை ரவுண்டு அடிக்கிறீர்கள் ஸார்?!
ச.நாகராஜன்

தலைப்பைப் பார்த்தவுடன் ‘அட, பாவி! இத்தனை நாள் இவனைப் பற்றிக் கொஞ்சம் நல்ல எண்ணம் வைத்திருந்தோமே, இவன் இவ்வளவு மோசமா’ என்று நீங்கள் எண்ணி விட்டால் அதற்கு நான் பொறுப்பில்லை.
சில பேர் ராத்திரியில் ‘அடிக்கும்’ ‘அந்த ரவுண்டைப்’ பற்றி நான் சொல்லவில்லை; நான் காலையில் தினமும் வெறுங்காலுடன் புல்வெளியில் அடிக்கும் நடைப்பயிற்சி ரவுண்டைப் பற்றித் தான் சொல்கிறேன்.
இவன் என்னடா, ஹெல்த்கேர் கட்டுரையாக எழுதுகிறான், எழுதியபடி கொஞ்சமாவது எதையாவது பின் பற்றுகிறானா என்று நீங்கள் எண்ணி விடக் கூடாது பாருங்கள், அதற்காகத் தான் இதைச் சொல்கிறேன்.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
தினம் நான் எட்டு ரவுண்ட் அடிக்கிறேன் – காலையில்!
புல்வெளி சில இடங்களில் ஏற்ற இறக்கமாக இருப்பதால் கலோரி பர்னிங் (Calorie Burning) சற்று அதிகமாக இருக்கும்; சம பரப்பில் நடக்கும் போது தேவையான அளவு இருக்கும்.
ஒரு ரவுண்டுக்கு 350 ஸ்டெப்ஸ்! எட்டு ரவுண்டுக்கு 2800 ஸ்டெப்ஸ். சுமார் 20 நிமிடங்கள்.
இந்த ரவுண்டுகளுக்கு நான் பெயரும் வைத்திருக்கிறேன்.
முதல் ரவுண்ட் சுவாச ரவுண்ட். ஆயிரத்தி தொள்ளாயிரத்து எண்பதுகளில் மதுரையில் பிரபல ஹோமியோபதி டாக்டரான ( இவர் அல்லோபதி டாக்டர்; ஆனால் ஹோமியோபதி ப்ராக்டீஸ் செய்தார்) அனந்தநாராயணன் வீட்டு மாடியில் மனவளப்பயிற்சி அருளிய வேதாத்ரி மஹரிஷியின் காய கல்ப (அதாவது ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழும் கலை) கோர்ஸை (ஏழு வாரம் கொண்டது; ஞாயிறு மட்டும் காலையில் நடக்கும்) நடத்தவே அதில் பயிற்சிக்காக சேர்ந்தேன். அற்புதமான டெக்னிக்குகள் சொல்லித் தரப்பட்டன. ஒவ்வொன்றும் சில விநாடிகளே நீடிக்கும் என்பதால் அதிக நேரம் பற்றிக் கவலைப்படாமல் அனைவரும் செய்யலாம். கணுக்காலை ஏழு முறை தேய்த்து விடுவது, சுவாசப் பயிற்சி போன்றவை இதில் அடங்கும்.
இதன் படி முதல் ரவுண்டில் காற்றை ஆழ்ந்து இழுத்து விடுவது போன்ற பயிற்சிகளை செய்வதால் சுத்தமான காற்றின் ஆற்றல் உள்ளே இறங்கும்.
அடுத்த ரவுண்ட் மந்திர ரவுண்ட். இதில் காயத்ரி மந்திரம், மஹா மிருத்யுஞ்சய மந்திரம், துர்கா சப்த சதியில் நடுவில் வரும் சப்த ஸ்லோகத்தில் நடுவில் வரும் ஸர்வ மங்கள மாங்கல்யே ஸ்லோகம், வனமாலி கதி சார்ங்கீ ஸ்லோகம், அபிராமி அந்தாதி, கந்தர் அந்தாதியின் சில முக்கிய செய்யுள்கள் உள்ளிட்டவை மந்திர ரவுண்டில் இடம் பெறும்.
மூன்றாவது ரவுண்ட் யோகா ரவுண்ட். இதில் காலை மடக்கி நடப்பது, கண்களின் தசை வலுவைக் கூட்டும் சின்னச் சின்னப் பயிற்சிகள் — தூரத்தில் இருப்பதை ஏழு விநாடிகள் பார்ப்பது உடனே மிக அருகில் உள்ளதைப் பார்ப்பது – போன்றவை இடம் பெறும். tamilandvedas.com, swamiindology.blogspot.com
நான்காவது ரவுண்ட் ரமண ரவுண்ட். இதில் பகவான் ரமண மஹரிஷியின் போதனையான ‘நான் யார்’ விசாரம் இடம் பெறும். யோக வாசிஷ்டம் வலியுறுத்தும் கொள்கை இது!
ரமணரின் அருள் வேண்டும் இந்த ரவுண்டில் அவரது போதனைகளை நினைவில் கொள்வது உற்சாகத்தை அளிக்கும்.
ஐந்தாவது ரவுண்ட் மௌன ரவுண்ட். மௌனத்தின் மஹிமையை நினைவூட்டும் தக்ஷிணாமூர்த்தி பற்றிய ரவுண்டில் மஹா பெரியவாள் தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் பற்றி விளக்கி உள்ள உரை நினைவுக்கு வரும். பல துவாரங்கள் உள்ள ஒரு பானையில் உள்ளே உள்ள தீபத்தின் ஒளி எப்படிப் பரவுகிறதோ அதே போல உடலில் உள்ள பொறிகளை இணைத்து அவர் தரும் அற்புதமான விளக்கம் உள்ளிட்ட அனைத்து மௌன மஹிமைகளையும் நினைவுக்குக் கொண்டு வருவதானது, உள்ள ஆற்றலை உயரத்தில் தூக்கும்!
ஆறாவது ரவுண்ட் விஞ்ஞான ரவுண்ட். அதாவது நவீன கால உலகில் உள்ள செல்ஃப் இம்ப்ரூவ்மெண்ட் டெக்னிக்ஸை நினைவுக்குக் கொண்டு வரும் ரவுண்ட் இது. அத்துடன் அன்றைய தினம் பற்றிய ப்ளானிங், முதல் நாள் நடந்தவை பற்றிய ரிவியூவிற்கான ரவுண்ட் இது!
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஏழாவது ரவுண்ட் ஞான ரவுண்ட். இது அருள் வேண்டும் ரவுண்ட். ‘அருள் நினைந்து அழும் குழவி போல இருந்தேனே’ என அருளாளர்களே கூறி இருக்கும் போது நாம் அருள் வேண்டும் போது அது கிடைக்கும் மஹிமையே தனி!
கடைசி ரவுண்ட் சரண ரவுண்ட்! உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலை பெறுத்தலும் நீக்கலும் அலகிலா விளையாட்டு. அதைச் செய்பவன் தலைவன்; அன்னவர்க்கே சரண் நாங்களே; கம்பனுடன் சேர்ந்து சரணம் அடைய வேண்டியது தான்!
இந்த நடைப்பயிற்சியின் ஆரம்பத்தில் ஜகஜோதியாக உதிக்கும் சூரியனைத் துதித்து – ஆதித்ய ஹ்ருதயம் போன்ற மந்திரங்களைக் கூறி – ரவுண்டை ஆரம்பித்து, பின்னர் முடிக்கும் போது அவனுக்கு நன்றியைத் தெரிவித்து ரவுண்டை முடித்து விட்டால் அன்றைய பயிற்சி ஓவர்!
சுவாச ரவுண்ட், மந்திர ரவுண்ட், யோகா ரவுண்ட், ரமண ரவுண்ட், மௌன ரவுண்ட், விஞ்ஞான ரவுண்ட்,ஞான ரவுண்ட், சரண ரவுண்ட் – ஆக எட்டு ரவுண்டுகள் கணக்கில் வந்து விட்டதா! tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆக இந்த எட்டு ரவுண்டுகளைத் தான் நான் சொன்னேன்; நீங்கள் விபரீதமாக எண்ணி விடக்கூடாது தலைப்பைப் பார்த்து!
தினமும் நீங்கள் எத்தனை ரவுண்டு அடிக்கிறீர்கள், ஸார்?!
***
