தமிழ்ப் புலவர்கள் மீது நம்மாழ்வார் கடும் தாக்குதல்! (Post No 4282)

Written by London Swaminathan

 

Date: 8 October 2017

 

Time uploaded in London- 11-40 am

 

Post No. 4282

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

நம்மாழ்வாரின் திருவாய் மொழி தித்திக்கும் தேன்; திகட்டாத செங்கரும்பு; திவ்வியப் பிரபந்தத்தின் 4000 பாசுரங்களில் கால் பகுதியை ஆக்ரமிக்கும் நம்மாழ்வார் பாசுரங்கள், மஹாகவி பாரதியாருக்கு மிகவும் பிடித்தவை. அவருக்கு மட்டும்தானா? நமக்கும் குலோப் ஜாமுனையும் கோதுமை, அல்வாவையும் அடுத்தடுத்து கொடுப்பது போல இருக்கிறது. பன்னீர் ஜாங்ரியையும் பாதுஷாவையும் சாப்பிட்டது  போல இனிக்கிறது.

 

மிகவும் துணிச்சலாலகப் பாடி இருக்கிறார்; பச்சைப் பொய்கள் என்ற சொற்கள் மூலம் மனிதர்களைப் பாடும் புலவர்களைச் சாடுகிறார்.

சொன்னால் விரோதம்; ஆயினும் சொல்லுவேன் என்று துணிந்து விட்டார்.

 

பணத்திற்கு ஆசைப்பட்டு குறு நில மன்னர்களையும், உதவாக்கரைப் பணக்காரகளையும் பாடும் — இந்திரனே! சந்திரனே! என்று பாடும் — புலவர்களைச் சாடுகிறார் நம்மாழ்வார்.

 

நான் நினைக்கிறேன்; நம்மாழ்வாரின் இந்தத் துணிச்சல்தான் பாரதியை அவர்பால் ஈர்த்திருக்க வேண்டும் என்று. நாடே சுதந்திரத்துக்காக ஏங்கியபோது சிலர் வெள்ளைக்காரர்களுக்கு அடிமைத் தொழில் புரிந்தமையும், அவர்களைப் போற்றி நூல் தோறும் கவி பாடியதும் பாரதியாரின் ரத்தத்தைக் கொதிக்க வைத்தது. உடனே ‘நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்துவிட்டால்’– என்று பாடினார்.

 

நம்மாழ்வார்தான் அவருக்கு வழிகாட்டி.

நம்மழ்வாரின் அற்புதப் பாசுரங்களைப் பாருங்கள்:-

 

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்; கேண்மினோ

என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்

தென்னா தெனா என்று வண்டு முரல் திருவேங்கடத்து

என் ஆனை, என் அப்பன், எம்பெருமான் உளனாகவே

பொருள்

நான் சொல்வது பகையாகப் படலாம். ஆயினும் சொல்லாமல் விடமாட்டேன். பெருமாளுக்கே என் கவிதைகளைத் தருவேன்; மற்றவரைப் பற்றி கவி பாடேன். வண்டுகள் தென்னா, தெனா என்று இசைபாடும் திருவேங்கடத்தில் உள்ள பெருமாள் எல்லாருக்கும் தந்தையாய் இருப்பவன்; அவனை விட்டு யாரையும் பாட மாட்டேன்.

பச்சைப் பொய்கள்! வாய்மை இழக்கும் புலவீர்காள்!!

 

இன்னும் இரண்டு பாடல்களில் கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறார்:

கொள்ளும் பயன் இல்லை, குப்பைகிளர்த்தன்ன செல்வத்தை

வள்ளல் புகழ்ந்து, நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!

கொள்ளக் குறைவு இலன், வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் என்

வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ (3213)

பொருள்:-

 

புலவர்களே! குப்பையைக் கிளறினாற்போல, தள்ளத் தக்க குற்றமுடைய செல்வரைப் புகழ்ந்து பாடாது, வள்ளல் மணிவண்ணனைப் பாடுங்கள். அவன் ஒருவனே கவி பாடுவதற்குப் பொருளானவன். குணங்களில் குறைவில்லாதவன். உங்களுக்கு விருப்பமானவற்றைத் தருவான். அவனைப் பற்றி கவி பாட வாருங்கள்.

சேரும் கொடை புகழ் எல்லை இலானை, ஓர் ஆயிரம்

பேரும் உடைய பிரானை அல்லால், மற்று யான் கிலேன்

மாரி அனைய கை, மால் வரை ஒக்கும் திண் தோள் என்று

பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும் பொய்கள் பேசவே

 

பொருள்:

உண்மை இல்லாமல், பொய் மொழியால் உன் கைகள் மேகம் போன்று கொடையாளி, உன் தொள்களோ மலை போன்ற வலிமை உடயவை- என்று மனிதப் பதரை பேச மாட்டேன்.வள்ளன்மையும் புகழுமொப்பில்லாத ஆயிரம் திருப்பெயர்களும் உடைய எம்பெருமானை அல்லாமல் வேறு யாரையும் பேசுவதற்கு நான் தகுதி அற்றவன்.

 

மானிடரைப் பாடாது மாதவனை மட்டும் பாட வேண்டும் என்று பத்து கவிகள் சாத்தியுள்ளார் நம்மாழ்வார். ஏனைய ஏழு கவிகளையும் படித்து இன்புறுக.

 

ஆழ்வார்கள் தரும் அமுதம் திகட்டாது!

TAGS:__நம்மாழ்வார், சொன்னால் விரோதம், பச்சைப் பொய்கள்

–சுபம்–