பஜ கோவிந்தம் தோன்றிய கதை (Post No.5280)

Written by London swaminathan

Date: 2 August 2018

 

Time uploaded in London – 6-36 am    (British Summer Time)

 

Post No. 5280

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பஜ கோவிந்தம் என்பது ஆதி சங்கரர் இயற்றிய ஏராளமான துதிகளில் ஒன்று. இது பற்றிய சுவையான கதை உண்டு.31 ஸ்லோகங்கள் உடைய இந்த துதியில் முதல் 12 ஆதி சங்கரரால் இயற்றப்பட்டவை, ஏனையவை அவருடன் சென்ற சீடர்கள் 14 பேராலும் மற்றோராலும் பாடப்பட்டவை.

 

எளிய ஸம்ஸ்க்ருதத்தில் அரிய கருத்துகளைக் கொண்ட இந்த பாட்டின உண்மையான பெயர் வேறு! பஜ கோவிந்தம் அல்ல!

 

‘மோகத்துக்கு (ஆசை) சம்மட்டி அடி’ கொடுக்கும் பாடல் என்பதால் இதை ‘மோக முத்கர’ என்றும் அழைப்பர்.

 

31 பாடல்களில் முதல் 12, ஆதி சங்கரரால் இயற்றப்பட்டதால் அந்த 12 பாடல் தொகுதிக்கு ‘த்வாதஸ மஞ்சரிக ஸ்தோத்ரம்’ என்று பெயர். 14 சீடர்கள் பாடிச் சேர்த்த பகுதிக்கு ‘சதுர்தஸ மஞ்சரிக ஸ்தோத்திரம்’ என்று பெயர்.

 

31 பாடல்களுக்கும் பொதுவான பெயர் ‘பஜ கோவிந்தம்’. இந்த 4 வரிகள் ஒவ்வொரு பாடலுக்கும் பின்னால் பாடப்படுவதால், அந்த  நூலுக்கே அந்த வரிகளின் பெயர் — பஜ கோவிந்தம் — என்று அமைந்துவிட்டது.

 

இந்துக்களின் புனித நகரான காசியில் ஆதி சங்கரர் தனது 14 சீடர்களுடன் நடந்து கொண்டிருந்தார். வயதான ஒருவர் ஸம்ஸ்க்ருத இலக்கண பாடத்தை ‘டுக்ருஞ்கரணே’, ‘டுக்ருஞ்கரணே’  என்று நெட்டுரு போட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த ஆதி சங்கரருக்குக் கோபம் வந்தது என்பதை விட கருணை பிறந்தது என்றே சொல்ல வேண்டும்; இல்லாவிடில் இவ்வளவு அருமையான நூல், துதி நமக்குக் கிடைத்திருக்காது.

 

மூட புத்தியுளவரே! சாகப் போகும் தருணத்தில் இந்த இலக்கண விதிகள் உமக்கு உதவிக்கு வருமா? சாகும் நேரத்தில் சங்கரா, சங்கரா என்றாலாவது போகும் வழிக்கு புண்ணியம் சேர்க்கலாமே என்று 12 துதிகளில் அறிவுரை பகன்றார்.

 

31 ஸ்லோகங்களையும் படித்தறிய எத்தனையோ புத்தகங்கள் உள. முதல் பாட்டை மட்டும் இங்கே தருகிறேன்.

 

பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம்

பஜ கோவிந்தம் மூடமதே

ஸம்ப்ராப்தே ஸந்நிஹிதே காலே

ந ஹி ந ஹி ரக்ஷதி டுக்ருஞ்கரணே

 

 

“கோவிந்தனைத் துதி (கடவுளைத் துதி) , கோவிந்தனைத் துதி (கடவுளைத் துதி) மூடனே! குறித்த நேரம் (மரண காலம்) வரும்போது இலக்கண விதிகள் உன்னைக் காக்காது.”

 

இங்கே இலக்கண விதிகள் என்பது, இறைவனைப் பற்றிப் பேசாத கதை கட்டுரைகள் முதலியன எனப் பொருள் கொள்ள வேண்டும். மேலும் ‘டுக்ருஞ்கரணே’ என்ற இலக்கண விதி பாணினியின் தாது பாடத்தில் உள்ளது என்றும் அறிஞர்கள் விளம்புவர்.

 

பஜகோவிந்தத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் தமிழ் வேதமாகிய திருக்குறளில் இருந்து ஒவ்வொரு குறளை ஒப்பிட்டுப் பார்த்து மகிழலாம். இதோ இந்த முதல் பாட்டின் கருத்தை இரண்டாவது குறளில் காணலாம்.

 

 

கற்றதனா லாய பயனென் கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின் (2)

 

“அறிவே வடிவாய் விளங்கும் கடவுளின் திருவடிகளை ஒருவன் நாள்தோறும் வணங்கவில்லை எனில் கல்வியால் (டுக்ருஞ்கரணே) என்ன பயன்?”

 

இமயம் முதல் குமரி வரை ஒரே சிந்தனையுடைத்தால், ஒருவரை ஒருவர் பார்த்துதான் எழுத வேண்டும் என்ற அவசியமில்லை.

‘செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில்

சிந்தனை ஒன்றுடையாள்’ என்பது பாரதியின் வாக்கு அல்லவா!

 

சுபம்