ஆராய்ச்சிக் கட்டுரை எண்: 1905
எழுதியவர்- லண்டன் சுவாமிநாதன்
தேதி: 2 ஜூன் 2015
லண்டன் நேரம்: காலை 10-58
உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் ஒரு முக்கியமான வரலாற்று விஷயம் இருக்கிறது. மஹாபாரத யுத்தம்தான் உலகில் முதல் முதலில் அதிக நாடுகள் கலந்து கொண்ட யுத்தம். அந்தப் போரில் 29 நாடுகள் கலந்து கொண்டன. ஆனால் அதற்கும் முன்னதாக ஒரு பெரிய யுத்தம் நடந்தது. அதை வேதத்தை மொழி பெயர்த்த 20 வெளிநாட்டு “அறிஞர்கள்” மூடி மறைத்துவிட்டனர். ஆனால் இது பற்றி ரிக்வேதத்தில் நிறைய இடங்களில் வருகிறது.
எப்படி அர்ஜுனனும், கிருஷ்ணனும் காண்டவ வனத்தை எரித்தவுடன் மய தானவன் தலைமையில் ஒரு பெரிய அணி தென் அமெரிக்காவிலுள்ள பல இடங்களுக்குச் சென்று மாயா நாகரீகத்தைத் துவக்கினார்களோ அதே போல பத்து ராஜா யுத்தத்துக்குப் பிறகு நம்மவர்கள் ஈரான், கிரீஸ் வரை சென்று நாகரீகத்தைப் பரப்பினர். காண்டவ வனம் எரிப்புக்குப் பின்னர் , பாரதத்திலேயே தங்கியோர் கோண்டு இன மலைஜாதி மக்கள் ஆவர். அவர்கள் இருக்கும் இடம் கோண்டுவானா பிரதேசம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. கோண்ட் பழங்குடிகளின் பெயர், கோண்ட்வானா (காண்டவ வனா) பிரதேசம் ஆகியன எல்லாம் காண்டவ வனம் என்னும் சொல்லிலிருந்து வந்தது என்பது கூட பலருக்குத் தெரியாது.
தச ராக்ஞ யுத்தம்
ராஜா என்ற சொல் இன்று வரை இமயம் முதல் இலங்கையின் தென் கோடி வரை எல்லா மொழிகளிலும் வழங்கிவருகிறது. தமிழில் “ர” என்ற எழுத்தில் சொற்கள் துவங்கக் கூடாது என்று தொல்காப்பியர் தடை போட்டதால் ராஜாவை “அரசன்” என்று ஆக்கி சங்க காலம் முதல் தமிழர்களும் சம்ஸ்கிருதச் சொல்லைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் வேத காலத்தில் பத்து அரசர்கள் இருந்ததாகச் சொன்னால் தங்களுடைய ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கை எல்லாம் தவிடு பொடியாகி விடும் என்று பயந்து பத்துப் பேரும் பழங்குடி இனக் குழுக்களின் தலைவர்கள் என்று வெளிநாட்டினர் முத்திரை குத்தி இதை அடியோடு மறைத்துவிட்டனர். இந்திய வரலாறு படித்த எவருக்கும் வேதத்தில் ஏராளமான இடங்களில் இந்த பத்து ராஜா யுத்தம் வருவதும் அவர்கள் கிரேக்கம் வரை சென்று நாகரீகத்தை நிறுவியதும் தெரியாது.
எல்லோரும் கால்டுவெல் பாதிரியார் சொன்னமாதிரி தமிழர்கள், வடமேற்கு திசையிலிருந்து (துருக்கி) இந்தியாவில் புகுந்தனர், மாக்ஸ் முல்லர் சொன்ன மாதிரி ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்குள் புகுந்தனர் என்று எண்ணி ஏமாந்திருந்தனர். இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும் – என்பது தமிழ்ப் பழமொழி. இங்கிலாந்தில் ரவுடி என்று பெயர் எடுத்து தற்கொலை செய்துகொள்ளப் போன ராபர்ட் கிளைவ் இங்கு கைப்பிடி ஆட்களுடன் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே நிறுவியவுடன் இந்துக்கள் ஒற்றுமையற்ற நெல்லிக்காய் மூட்டை என்றும் இளிச்சவாயர்கள் என்றும் கண்டு கொண்டனர். ஆக 20 வெளிநாட்டு “அறிஞர்களும்’ மனம் போன போக்கில் வேதத்தை மொழி பெயர்த்தனர். நம்மவர்களுக்கோ தமிழும் தெரியாது, சம்ஸ்கிருதமும் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது. ஆக ஆங்கிலத்தில் எதையும் எதிர்த்து எழுதவில்லை.
ஆங்கிலத்தில் இரண்டு கடிகாரங்கள் எப்பொழுதும் ஒரே நேரத்தைக் காட்டாது – என்று ஒரு பழமொழி உண்டு. அது போல இரண்டு வெள்ளைக்காரர்கள் வேதம் பற்றி ஒரே மொழி பெயர்ப்பை வெளியிடவில்ல. ஆயினும் வெள்ளைத் தோல் அறிஞர்கள் அனைவரும் ஒப்புக் கொண்ட விஷயம் வடக்கத்தியானும் தமிழனும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களே என்று.
மேலும் உலகம் கி.மு4004ல் அக்டோபர் 23ம் தேதி காலை ஒன்பது மணிக்குக் கடவுளால் படைக்கப்பட்டது என்று பைபிள் பிரசாரகர்கள் உரத்த குரலில் பிரசாரம் செய்வதை இவர்கள் மனதார நம்பினர். ஆகையால் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைக் குறைகூறி ஒரு வரி கூட எழுதவில்லை. இத்தனை வெளிநாட்டோர் வேதங்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்தும் மற்ற மதங்களைத் தொடவே இல்லை.
கிரேக்கர்கள்தான் நாகரீகத்தின் சிகரத்தைத் தொட்டவர்கள் என்று அவர்களை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து தள்ளினர். ஏனெனில் கிரேக்க நாட்டை இவர்கள் அடிமைப் படுத்த முடியவில்லை.
இதுமட்டுமின்றி இந்தியர்களை மட்டமும் தட்டினர். எகிப்தியர்களுக்கு கி.மு.3100 முதல் அரசர்கள் உண்டு
சுமேரியர்களுக்கு கி.மு.3100 முதல் அரசர்கள் உண்டு
சீனர்களுக்கு கி.மு.3100 முதல் அரசர்கள் உண்டு
மாயா இனத்தினருக்கு கி.மு.3100 முதல் அரசர்கள் உண்டு. ஆனால் இந்தியாவில் மட்டும் புத்தர் காலத்துக்குப் பின்னர்தான் (கி.மு.600) அரசர்கள் உண்டு. சிந்து சமவெளி நாகரீகத்தில் கூடக் கிடையாது என்று புத்தகம் எழுதினர். அதை இன்று வரை நாம் படித்துக் கொண்டும் இருக்கிறோம். அவர்களுக்குத் தெரியும் இது சுய மரியாதை கெட்ட இனம். அப்படி சுயமரியாதையுடன் யாராவது குரல் கொடுத்தால், 2 திராவிடங்களையும் மார்க்சிஸ்டுகளையும் காசு கொடுத்து ஏவி விடலாம் என்று.
வெள்ளைக்காரன் சதி இன்றும் நடக்கிறது. யாராவது இந்துமததை எதிர்த்து கதை எழுதினால் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டு அவனுடைய வங்கிக் கணக்கில் ஒரு மில்லியன் டாலரைப் ‘பம்ப்’ செய்வர். ஏதேனும் புறச்சூழல் பற்றி கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவர்களுக்கு நிதி உதவி செய்வர். இதை எல்லாம் லண்டனில் உடகார்ந்து கொண்டு பார்க்கையில் தெளிவாகக் காண முடிகிறது.வெறும் திகிடுதத்தங் களையும், புறம்போக்குகளையும் திரைக்குப் பின்னால் இருந்து இயக்குவர்.
இப்பொழுது பத்து ராஜா யுத்தத்துக்கு வருவோம்:
சுதாஸ் என்று ஒரு மன்னன் இருந்தான். அவன் பரத ராஜ்யத்தை ஆண்டு வந்தான் அவனுக்கு விஸ்வாமித்ரர் குல குரு. அவரது ஆலோசனையில் படை எடுத்துச் சென்று விபாஸ், சுதுத்ரி நதிக்கரைகளில் சில அரசர்களை வென்றான். பின்னர் விஸ்வாமித்ரருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே அவரைப் பதவி நீக்கம் செய்துவிட்டு வசிஷ்டரை குல குருவாக நியமித்தான். இதனால் வசிட்டர்-விசுவாமித்திரர் இடையே நிரந்தரப் பகைமை ஏற்பட்டது.
விசுவாமித்திரர், பத்து ராஜ்யங்களின் அரசர்களைக் கூட்டிக் கொண்டு வந்து சுதாஸைத் தாக்கினார். ஆனால் அந்தப் பத்துப் பேரையும் சுதாஸ், மண்ணைக் கவ்வ வைத்தான். வந்த பத்து அரசர்களில் இரண்டு பேர் நதியில் மூழ்கி இறந்தனர். மற்றொருவர் போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தார். ஏனையோர் ஓடிப்போனார்கள் என்று சொல்லத் தேவை இல்லை. இது பாருஸ்னி நதிக் கரையில் நடந்தது.
இதற்குப் பின்னர் மேலும் மூவர் அவருடன் யமுனைக் கரையில் மோதினான். அவர்களுக்கும் அதே கதி—அதாவது சகதி!
சுதாசுடன் மோதிய பத்து ராஜாக்கள்: புரு, யது, துர்வாச, அனு, த்ருஹ்யு, பலனஸ், அலின, பக்து, சிவா, விஸ்வானின்
இவர்களை நான் அரசர்கள் என்று சொல்லுவதற்குக் காரணம் என்ன?
1.வேதத்தின் பழைய பகுதிலேயே கங்கைச் சமவெளி பற்றி பாடப் பட்டுள்ளது. கங்கை முதல் ஈரான் வரை பரவியிருந்த உலகின் அப்போதைய மிகப் பெரிய நாட்டில் பல ராஜாக்கள் இருப்பது இயல்பே. இதே போல பாபிலோனியாவில் ஒரே நேரத்தில் ஆறு ஏழு ராஜ்யங்கள் இருந்ததைக் காண்கிறாம். கிரேக்க நாட்டில் ஒவ்வொரு நகரமும் ஒரு நாடு. சுதாஸ் காலத்திலேயே யமுனைக் கரையிலும் ஒரு போர் நிகழ்ந்தது.
2.ரிக் வேததை அடுத்துள்ள வேதங்களிலேயே அஸ்வமேத யக்ஞம் பற்றி வருகிறது. இது சிறு பிள்ளை விளையாடும் அம்மா, அப்பா விளையாட்டல்ல. மாபெரும் சாம்ராஜ்யங்களை உருவாக்க பக்கத்து நாடுகளில் குதிரையை உலவவிட்டு அதை எல்லாம் வென்ற கதை இது. அப்படிச் செய்த மன்னர்களின் பட்டியல் சதபத பிராமணத்தில் உள்ளது.
- மேலும் புத்தர் காலத்திலேயே 16 பெரிய நாடுகள் இருந்தது உறுதியாகத் தெரிகிறது. மாபாரதக் கதையில் 29 நாடுகள் வருகின்றன. இவை எல்லாம் ஓரிரவில் ஆகாசத்திலுந்து குதிக்க முதியாது.
- இதை விட பெரிய சான்று ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் சபா, சமிதி என்ற் அமைப்புகளில் உள்ளன. ரிக் வேத சபை என்ற சம்ஸ்கிருதச் சொல்லை இன்றுகூட தமிழர்கள் அவை என்று பயன்படுத்துகிறோம். ச என்னும் எழுத்தை தமிழர்கள் பயன்படுத்தக் கூடாது என்று தொல்காப்பியர் தடை போட்டதால் சபை என்பதை அவை என்று மாற்றிக் கொண்டோம். சமிதி என்பது இன்றும் ஆங்கிலத்தில் கமிட்டி என்ற பெயரில் புழங்குகிறது. இந்த இரண்டு சபைகளும் அரசனுக்கு ஆலோசனை வழங்கியது வேதங்களில் வருகிறது. உலகின் முதல் ஜனநாயக அமைப்பு இவைதான். ஆக வேத காலத்திலேயே அரசன் இருந்தது மட்டும் அல்ல. அரசனுக்கு ஆலோசனை வழங்கும் பொது மக்கள் அமைப்பும் இருந்தன. இந்த விஷயம் எல்லாம் ஆரிய-திராவிட இனவெறிக் கொள்கையைப் பரப்புவோர் வயிற்றில் புளி கரைத்தது. ஆக பத்து ராஜா யுத்தம் சின்னப் பயல்கள் சண்டை என்று எழுதிவிட்டனர்.
பத்துராஜா யுத்தத்துக்குப் பின்னர் பேட என்ற மன்னன் தலைமையில் அஜஸ், சிக்ருஸ், யக்சுஸ் ஆகிய மூன்று நாட்டு மன்னர்கள் சுதாசைத் தாக்கி தோல்வி கண்டனர்.
இதில் யக்சுஸ் எனப்படும் யக்ஷர்கள் கி.மு 1800 ல் எகிப்தைத் தாக்கி நீண்ட காலம் எகிப்தை ஆண்டனர். அவர்கள்தான் முதல் முதலில் எகிப்தில் குதிரைகளைப் போரில் பயன்படுத்தி எகிப்தியர்களுக்கும் குதிரைப் படை பற்றி கற்றுத்தந்தனர். த்ருஹ்யூ எற நாட்டில் இருந்து சென்றோர் ட்ரூய்ட்ஸ் என்ற பெயரில் ஐரோப்பா முழுவதும் சூரிய வழிபாட்டைப் பரப்பினர்.
முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கமுடியுமா? இப்பொழுது ஸ்ரீகாந்த் தலகரி போன்ற அறிஞர்கள் வெளி நாட்டு அறிஞர்களைச் சமைத்து புளிக்கறி வைக்கின்றனர். அது என்ன? தலகரி செய்யும் புளிக்கறி? ஆக உலகம் முழுதும் வேத கால நாகரீகத்தைப் பரப்பிய புகழ் இந்த பத்து நாட்டு மக்களியே சேரும்.
ப்ருதுஸ் அல்லது பார்த்தவாஸ்
பரசுஸ் அல்லது பார்ஸ்வாஸ்
பக்தஸ், பக்தூன்ஸ்
பலனாஸ்/பலூசிஸ்
சிவாஸ் (சிபி முதலியோர்/சோழர்களின் மூதாதையர்)
விசானின்ஸ்/பைசாசாஸ்
சிம்யூஸ்/ அல்பேனியார்கள்
அலைனஸ்- ஹெல்லனீஸ்/ கிரேக்கர்
ப்ருகுஸ்- துருக்கியர்.
ஒரு நாட்டு மக்கள் அந்த நாட்டின் பெயரால் அழைக்கப்படுவது தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம். சோழ நாட்டு பிராமணர்கள் சோழியா என்றும் குஜராத்துக்குப் பாண்டிய நாட்டிலிருந்து சென்ற பிராமணர் பாண்டியா என்றும், தெலுங்கு தேசத்தில் இருந்து சென்றோர் தில்லான் (த்ரிலிங்க தேச=தில்லன்) என்றும், சரஸ்வதி நதிதீரத்தில் இருந்து சென்றவர்கள் சாரஸ்வத பிராமணர் என்றும், திராவிட (தென்) பகுதிலிருந்து சென்றவர்கள் திராவிட் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவை இனப் பெயர்கள் இல்லை; நாட்டின் பெயர்கள்.
Prthus or Parthavas (RV 7-83-1) Parthians
Parsus or Parsvas (7-83-1) Persians
Pakthas (7-18-7) Paktoons
Bhalanas (7-18-7) Baluchis
Sivas (7-18-7) Kivas
Visanins (7-18-7) Pisachas/Dards
Simyus (718-5) Sarmatians(ancient Albanians)
Alinas (7-18-7) Alans /Hellennes/ Ancient Greeks
Bhrgus (7-18-6) Phyrgians
ஆக வெள்ளைக்காரன் எழுதியதெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டன.




You must be logged in to post a comment.