
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 3 April 2019
GMT Time uploaded in London – 15-39
Post No. 6222
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
பாக்யா 15-3-2019 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு இரண்டாம் கட்டுரை – அத்தியாயம் எண் 418
2018ஆம் ஆண்டின் சில விநோதமான கண்டுபிடிப்புகள்! – 2
ச.நாகராஜன்
ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான விஞ்ஞான விநோதங்களை அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். 2018இல் அவர்கள் கண்ட விநோதங்களின் தொடர்ச்சி இது:
வெப்ப அலையால் வேக வைக்கப்பட்ட வௌவால்கள்!
ஒவ்வொரு ஆண்டும் பூமியின் வெப்பநிலை கூடிக் கொண்டே போகிறது. 2018, ஜனவரியில் ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸில் வெப்பம் 111.5 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட்டது. அதாவது 44.2 டிகிரி செல்ஸியஸ்! பறந்து கொண்டே இருந்த 200 வௌவால்கள் இந்த வெப்பத்தால் ஆகாயத்திலேயே உயிருடன் வறுத்தெடுக்கப்பட்டு தொபேரென்று தரையில் இறந்து வீழ்ந்தன. கேட் ரையான் என்ற பெண் விஞ்ஞானி, “இவை உயிருடன் வறுக்கப்பட்டன. அவற்றின் மூளையை வெப்பம் தாக்கவே அவைகளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இறந்து வீழ்ந்தன” என்கிறார்.

தீயைத் திருடும் ஆஸ்திரேலிய பறவைகள்!
ப்ரோமெதியஸ் என்னும் ஹீரோ கடவுளரிடமிருந்து தீயைத் திருடி மனிதர்களுக்கு அளித்தான் என்று கிரேக்க நாட்டில் பழம் பெரும் கதை ஒன்று உண்டு. இந்தக் கதையைப் போலவே இப்போது ஆஸ்திரேலியப் பறவைகள் தீத் துண்டுகளை (தீ கங்குகள்) ஏற்கனவே காட்டுத் தீ பரவிய இடத்திலிருந்து தூக்கிக் கொண்டு இதர இடங்களில் சென்று போட்டு அங்கும் தீயைப் பற்ற வைக்கின்றன. ஃபயர்ஹாக் (firehawks) என்னும் பறவைகள் கூட்டாகவும் சில சமயம் தனியாகவும் இப்படி தீயைப் பற்ற வைக்கின்றன. அவை ஏன் இப்படிச் செய்கின்றன என்று விஞ்ஞானிகள் ஆராயப் புகுந்தனர். புல்வெளிகளில் ஒளிந்து கொண்டிருக்கும் அவற்றின் இரைகள், இப்படித் தீயைப் பற்ற வைப்பதால் வெப்பம் தாங்காமல் வெளியிடங்களுக்கு ஓடும். அப்போது அவற்றை அந்தப் பறவைகள் பிடித்துத் தங்களுக்கு உணவாக்கிக் கொள்ளும்.
தும்மலைத் அடக்காதீர்கள்!
தும்மலை அடக்கவே அடக்காதீர்கள் என்பது விஞ்ஞானிகளின் அறிவுரை. இதற்கான சம்பவம் ஒன்றை அவர்கள் கூறுகின்றனர். இங்கிலாந்தைச் சேர்ந்த 34 வயதான ஒருவர் தன் தும்மலை அடக்கப் பார்த்து மூக்கைப் பிடித்துக் கொண்டு வாயையும் மூடிக் கொண்டார். கழுத்தில் தோல் பகுதியில் குமுறுவது போன்ற உணர்வு ஏற்படவே டாக்டரிடம் ஓடினார். கழுத்துப் பகுதியில் தோலின் கீழ் காற்றுக் குமிழிகளைக் கண்ட அவர்கள் மேல் தொண்டைப் பகுதியில் அவை ஒரு ஓட்டையையும் போட்டு விட்டதைக் கவனித்தனர். நல்ல வேளையாக உயிருக்கு ஆபத்து இல்லாமல் அவர் பிழைத்தார். இரண்டு மாதங்களில் அவர் பூரண குணமடைந்தார். இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் தும்மலை அடக்காதீர்கள் என்ற அறிவுரையைப் பத்திரிகை வாயிலாகத் தெரிவித்துள்ளனர்.
விசித்திரமாக ஸ்பூனை விழுங்கியவர்!
‘Born with a Silver Spoon’ என்று அதிர்ஷ்டசாலிகளைச் சொல்வது வழக்கம். ஸ்பூனை விழுங்கிய ஒருவரைப் பார்த்த டாக்டர்கள் ஆச்சரியத்தால் அயர்ந்து போன சம்பவம் ஒன்றும் அக்டோபர் 2018இல் நடந்திருக்கிறது. மிஸ்டர் ஜாங் என்று அவரை அழைக்கின்றனர். சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஜெனரல் ஹாஸ்பிடலுக்கு அவர் வந்தார். ஒரு ஸ்டீல் ஸ்பூனை தான் விழுங்கி விட்டதாகவும் ஒரு வருடமாக அது உள்ளே இருப்பதாகவும் இப்போது வலி ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவிக்கவே மூன்று டாக்டர்கள் சேர்ந்து இரண்டு மணி நேரம் ஆபரேஷன் செய்து மார்புக்கூட்டின் நடுவில் உள்ளே போய் மாட்டிக் கொண்டிருந்த ஸ்பூனை எடுத்தார்கள். அதன் நீளம் எட்டு அங்குலம். இப்படி ஒரு நபரை இதுவரை தாங்கள் கண்டதே இல்லை என்று கூறிய டாக்டர்கள் அவரை உயிர் பிழைக்க வைத்து பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

கராத்தே கிக் கரப்பான்கள்
ஒட்டுண்ணிக் குளவிகள் என்னும் ஒருவகை உயிரினம் கரப்பான்களைப் பொறுத்த வரையில் அபாயகரமான உயிரினம் என பிஎம்சி ஈக்காலஜி (BMC Ecology)என்ற அறிவியல் இதழ் தெரிவிக்கிறது. மரகதமணி குளவி (Emerald Jewel Wasp) என்ற இந்த உயிரினம் கரப்பான்களின் கால்களின் மீது ஒருவகை திரவத்தைப் பாய்ச்சுகின்றன. அது கரப்பான்களின் ரத்த ஓட்டத்தைத் தடுத்து மூளையைத் தாக்கவே அது செயலிழந்து உயிர் இருந்தும் ஜோம்பி போல அசையாமல் இருந்து அந்தக் குளவிகளுக்கு இரையாகுமாம். ஆனால் இப்போது இதை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள்,”இது வரை கரப்பான்கள் தப்பிக்கவே தப்பிக்காது என எண்ணி இருந்தோம்.ஆனால் ஒரு கராத்தே கிக்கைக் கொடுத்து தங்கள் மூளை செயலிழந்து போவதைச் சில கரப்பான்கள் தடுப்பதைப் பார்க்கிறோம். இந்த கராத்தே கிக் அவற்றின் நரம்புகள் செயல் இழப்பதைத் தடுக்கிறது” என்று ஆச்சரியத்துடன் கூறுகின்றனர்.
மேட் மைக்கின் சாகஸம்!
2018 மார்ச் மாதம் 61 வயதான ஒருவர் தானே செய்த ராக்கெட்டை விண்ணில் ஏவினார். அவர் பெயர் மேட் மைக்(Mad Mike- பைத்தியக்கார மைக்).பூமி தட்டையானது தான் என்பதை நிரூபிப்பதற்காக இதை அவர் ஏவினாராம். பூமி உருண்டை என்று சிறு குழந்தை கூடச் சொல்லும்! ஆனால் அதை நம்ப மறுக்கும் பைத்திய மைக்கின் ராக்கெட் 1900 அடி உயரம் வரை பறந்தது.’எனது அடுத்த ராக்கெட் இன்னும் அதிக உயரம் பறக்கும்’ என்கிறார் பைத்தியக்கார மைக்!
இப்படி எண்ணற்ற விநோதச் செய்திகளை 2018இல் கண்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சாம்பிளுக்காகச் சில சுவையான செய்திகளை மட்டும் இங்கு பார்த்தோம்.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
ஹோவர்ட் ஃபீல்டிங் (Howard Fielding) ஐந்து வயது குழந்தையாக இருந்த போது அப்பா ஆல்ஃப்ரெட் (Alfred) கொண்டு வந்த பிளாஸ்டிக் பப்பிள் ஷீட்டை கைகளால் நோண்டி ஒவ்வொரு பப்பிளாக டப் டப் என்று உடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் இன்றோ பப்பிள் ராப் (Bubble Wrap) பாக்கிங் ஷீட்டைத் தயாரிக்கும் அவரது நிறுவனம் உலகளாவிய விதத்தில் உயர்ந்து நிற்கிறது. ஆல்ப்ரெட் பப்பிள் ராப் பிளாஸ்டிக் ஷீட்டை தற்செயலாகத் தான் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடிக்க முனைந்தது வால்பேப்பர் எனப்படும் சுவரொட்டி பேப்பர்களில் விதவிதமான டிசைனைப் போட்டு டெக்ஸர்ட் வால்பேப்பரைத் (Textured Wallpaper) தயாரிக்க வேண்டும் என்பது தான். 1957இல் இரண்டு பிளாஸ்டிக் திரைச்சீலைகளை வெப்பத்தினால் ஒட்டிப் பார்த்த போது அவர் நினைத்தது வரவில்லை. மாறாக காற்றுக் குமிழிகள் ஆங்காங்கே அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் ஷீட் தான் வந்தது. அதை என்ன செய்வது என்று முதலில் அவருக்கும் அவரது நண்பருக்கும் புரியவில்லை. என்றாலும் கூட அதற்குக் காப்புரிமை பெற்றனர். 1961இல் அது மிகப்பெரிய பாக்கிங் மெட்டீரியல் என்ற அந்தஸ்தைப் பெற்றது. முக்கியமாக கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம் அதை ஒரு வரபிரசாதமாகக் கருதியது.

வெளிநாடுகளுக்குக் கம்ப்யூட்டர்களை அனுப்பும் போது அது உடையாமல் இருக்க நியூஸ்பேப்பர்களை உருண்டைகளாக்கி அவற்றைச் சுற்றி வைப்பது அதுவரை வழக்கமாக இருந்தது. ஆனால் நியூஸ்பேப்பர்களின் மோசமான தரமற்ற மை பாக்கிங் செய்யப்பட்ட பொருள்களின் மீது பட்டு அவற்றின் தரத்தைக் கெடுத்தது. இந்த நிலையில் பப்பிள் ராப் வந்தவுடன் அதை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் ஒரு வித புகாரும் வரவில்லை. இதைப் பார்த்த சிறு நிறுவனங்கள் அனைத்தும் பப்பிள் ராப் பிளாஸ்டிக் ஷீட்டை பயன்படுத்த ஆரம்பித்தன.இன்று உலகெங்கும் பப்பிள் ராப் ஷீட் சக்கை போடு போடுகிறது.
தற்செயல் கண்டுபிடிப்பு பாக்கிங் செய்யும் விதத்தில் பாதுகாப்பை உறுதி செய்தது ஆச்சரியம் தானே!
**