தமிழ் அபிமானி! : மஹாகவி பாரதியாரின் விளக்கம்! -2 (Post No.8650)

WRITTEN BY S NAGARAJAN                     

Post No. 8650

Date uploaded in London – – –9 SEPTEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

தமிழ் அபிமானி! : மஹாகவி பாரதியாரின் விளக்கம்! -2

ச.நாகராஜன்

ஒரு சமயம் முட்டாள் ஒருவன், ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்று உரைத்ததைக் கேட்ட பாரதியாருக்கு உள்ளமெலாம் பதறியது.

மெல்லத் தமிழ் இனிச் சாகும் – அந்த                                    மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்                                             என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ

இந்த வசை எனக்கு எய்திடலாமோ

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று முழங்கினார் அவர்.

இப்படி தமிழ் மொழி பற்றி அவரது கவிதை மற்றும் கட்டுரைகளில்  ஏராளமான கருத்துக்கள் உள்ளன. அதில் உண்மையான தமிழ்ப் பற்று கொண்டவன் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அவர் தெளிவாகக் கூறியிருக்கிறார்; தான் கூறியது படியே வாழ்ந்தும் காட்டினார்; தமிழை எப்படி வளர்ப்பது என்பதைச் செயலிலும் காட்டினார் அவர்.

வாழ்க நிரந்தரம்  வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே

வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண்மொழி வாழியவே

என்றார் அவர். ‘வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும் வண் மொழி’- என்ன அழகான சொற்றொடர். கருத்துச் சுடர்!

வானம் அளந்தது அனைத்தும் அளந்த மொழி தமிழ் மொழியே என்பது அவரது முடிந்த முடிபு.

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்றார் அவர்.

புத்தாண்டு தினத்தையொட்டி அவர் பாடிய பாடலை வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு என்று ஆரம்பிக்கிறார்.

தமிழறிஞர் உ.வே.சாமிநாதையரைப் போற்றும் போது பொதியமலை பிறந்த மொழி வாழ்வறியும் காலமெலாம் புலவோர் வாயிற் துதி அறிவாய் என்று அவர் கூறிய போது ஊழி உள்ளளவும் வாழும் மொழி தமிழ் என்பதை அடிநாதமாக உணர்த்துகிறார். இப்படி ஒரு ஆழ்ந்த தமிழ்ப் பற்றைக் கொண்டவர் பாரதியார்.

தமிழின் சிறப்பைச் சொல்ல வரும் ஒரு புலவர் தமிழ்விடுதூது என்ற நூலில்

“முற்றுணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார் நீ                          குற்றமிலாப் பத்துக் குணம் பெற்றாய்” என்று கூறிப் புகழ்கிறார்.

தேவர்கள் சத்வ, ரஜஸ், தாமசம் என மூன்று குணங்களை மட்டுமே பெற்றுள்ளனர். ஆனால் தமிழ் மொழியே, நீயோ செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்னும் பத்து அரிய குணங்களைப் பெற்றிருக்கிறாய் என்று அந்தப் புலவர் கூறும் போது உலகில் எந்த மொழியும் கொண்டிராத அருங்குணங்களைத் தமிழ் பெற்றிருப்பது தெரிய வருகிறது.

பழம் பெரும் பாடல் ஒன்றோ,

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி                                     ஏங்கொலி நீர் ஞாலத்து இருளகற்றும் – ஆங்கவற்றுள்                         மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று ஏனையது                                           தன்னேர் இலாத தமிழ்             

என்கிறது.

உயர்ந்த மலையிடைத் தோன்றி பெரியோர் தொழ விளங்கி, நீர் சூழ்ந்த இந்த உலகில் இருளை அகற்றுவது இரண்டேயாம். ஒன்று சூரியன். அது புற இருளை அகற்றுகிறது. இன்னொன்று தமிழ். அது அக இருளை அகற்றுகிறது. ஆம் உண்மை தானே! தனக்கு நிகரான இன்னொன்று இல்லாத தமிழ், தன்னேர் இலாத தமிழ். இதை போற்றி வளர்ப்பது தமிழர்களாகிய நமது கடமை. போற்றுவோம் வளர்ப்போம் – தன்னேர் இலாத தமிழை!

இப்படிப்பட்ட அரும் செந்தமிழ் தன் நிலை இழந்து தாழ்வுற்றிருந்த போது அதைப் புத்துயிர் கொடுத்து வளர்த்தவர் பாரதியார் என்பதை நன்றியுடன் நினைவு கூர்வோம்.

செய்யுள் நலம் சீரழிந்து செந்தமிழும் வாடுகையில்                    உய்யும் நலம் காட்டியவன் ஓர் கவிஞன் – நெய்யுமொரு                    கூட்டிற்கோ தேன் கூடு கொட்டுதமிழ்ச் சந்த மொழி                        பாட்டிற்கோ பாரதியே தான் என்று என் வெண்பாவினை தமிழ்த்தாயின் திருவடி கமலங்களில் சமர்ப்பித்து, வாய்ப்பினை வழங்கியோருக்கு நன்றி கூறி இன்னுமொரு கேள்வியில் உங்களைச் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடை பெறுவது சந்தானம் நாகராஜன்!

tags- தமிழ் அபிமானி-2 ,பாரதிவிளக்கம் -2

***