பாரதி போற்றி ஆயிரம் – 60 (Post No.4799)

 

Date: MARCH 2,  2018

 

 

Time uploaded in London- 5-56 am

 

 

COMPILED by S NAGARAJAN

 

 

Post No. 4799

 

PICTURES ARE TAKEN from various sources. PICTURES  MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.

 

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

  பாடல்கள் 421 முதல் 429

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு இரண்டாம் அத்தியாயம் தொடர்கிறது

இரண்டாம் அத்தியாயம்: பாரதமாதா பார்வையில் பாரதி

10 முதல் 18 வரை உள்ள பாடல்கள்

இமயம் தன்னில் எழுந்த குரல் – தென்

   குமரி வரைஎதி ரொலித்ததுவே

குமரி யிலொருவன் அடிபட்டால் – அந்த

   இமயம் கண்ணீர் உகுத்ததுவே

சமமென் றனைவரும் சேர்ந்ததினால் – இங்கு

   சகல பேதங்களும் தீர்ந்ததுவே

தமது நாடெனும் உணர்வுடனே – இந்தத்

   தாயினை  யாவரும் வணங்கினரே

  

அன்னை என்னைத் தென்னகம் தன்னில்

    முன்னம் உணர்ந்தாய் பாரதியே

தன்போல் தமிழர் நன்கு உணர்ந்திட

   முன்மொழிந் தனையே பாரதியே

அன்னாள் உந்தன் கவிகளை எனக்கே

   அர்ப்பணி த்தாய்நீ பாரதியே

பன்மணிக் கவிதை உன்போல் எனக்குப்

   படைத்த வருண்டோ பாரதியே

 

பாரத மாதா பாரத மாதா

   பாட்டுகள் யாவும் எனதாக

பாரதம் உந்தன் பாவினி லுளதென

   பாரினில் யாவரும் புகழ்பாட

பாரதி யென்னும் மலையி லிருந்து

   பாய்ந்துறு தேசிய அருவியது

பாரத மாய்த்தமிழ் நதியென ஓடி

   பாரதக் கடலில் படர்ந்ததுவே

 

காலம் தனது தேவைக் கேற்பக்

   கவிஞன் தன்னை உருவாக்கும்

சீலம் மிகுந்தோர் சொல்லுக் கேற்ப

   தேசியத் திற்கே உனையீந்தாய்

ஆலம் உண்டே அமுத மளித்த

   அரனாரைப் போல் உயர்ந்திட்டாய்

காலக் கவிஞன் ஆனதி னாலே

   காலம் கடந்து வாழ்ந்திட்டாய்

 

என்றுநீ தேசிய உணர்வினைப் பெற்றாய்

  என்பதை என்போல் யாரறிவார்?

உன்றன் இளமையில் ஊரூ ராக

   ஓடிய போதும் உதிரத்தில்

என்றும் நீங்கா சுதந்திர வேட்கை

   இருந்ததி னால்நீ சிலிர்த்தெழுந்தாய்

சென்னை நகருறை வாழ்வில் தேசிய

   சேவையி லொன்றிச் சிறப்புற்றாய்

 

கல்கத்தா மாநாட்டில் கலந்திடச் சென்றவன்

   கலக்கங்கள் தீர்வ தற்கே

சொல்லினால் உலகையே சிலிர்த்திடச் செய்திட்ட

   தூயவிவே கானந் தர்தம்

நல்லதோர் மாணவியாய் நாடெல்லாம் மதித்திட்ட

   நிவேதிதா தன்னைக் கண்டாய்

பலவளம் பெற்றதால் களையெலாம் நீங்கிய

   பயிராக வளர்ச்சி பெற்றாய்

 

பாரதியாம் உந்தனைக் குழந்தையாய் அந்நாளில்

   பெற்றவள்லட் சுமியம் மாள்தான்

தீரமுள நல்லதோர் தேசியக் கவிஞனாய்

   தோற்றுவித்தாள் நிவேதி தாவே

ஆரமாம் தங்கத்தை தேசபக்தி என்றிடும்

   அனலிலே சுட்டெ டுத்தாள்

ஈரமுள புதைகுழியில் எழுந்திடும் நெருப்பென

   எழுச்சிமிகு கவிஞ னானாய்

 

இருவேறு வழிகளில் சென்றதால் அல்லவோ

   இலக்கினை அடைவ தற்கு

பெருமளவில் தாமதம் நேர்ந்ததுதீ விரவாதம்

   புகல்மித வாதம் என்றார்

இருஇரு பொறுமையாய் எனும்மித வாதியாய்

   இருந்திட்டார் கோகலேவே

ஒருபெரும் தீவிர வாதிகள் தலைவனாய்

   உயர்திலகர் தலைமை ஏற்றார்

 

திகழ்கின்ற காந்தமது இரும்பினை இழுத்தல்போல

   திலகருனை ஈர்த்துக் கொண்டார்

அகழ்ந்திட்டார் மிதவாதச் சோம்பலினை நாடெல்லாம்

   ஆர்த்தெழுந்து நிற்கச் செய்தார்

இகலறவே அவருக்கோர் போர்முரசாய் முழங்கிடவே

   இந்தியா என்னும் பேரில்

தகவுளதோர் இதழதனை தழலெனவே கொணர்ந்திடாய்

   தமிழகமே பற்றச் செய்தாய்

 

பாரதமாதா பார்வையில் பாரதி தொடரும்

தொகுப்பாளர் குறிப்பு:
கவிஞர் கே.பி. அறிவானந்தத்தைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்ட போது, பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்தார். அவருக்கு எமது நன்றி

2003ஆம் ஆண்டு இந்த பாரதி பத்துப்பாட்டு காவியத்தை இயற்றியுள்ளார் இவர்.

கவிஞர் பிறந்த நாள்: 22-4-1942 பிறந்த ஊர்: குடியாத்தம்

இவர் வேதாந்த பாடசாலை என்னும் குருகுலத்தில் இலக்கண இலக்கியப் பயிற்சியைப் பெற்றார்.

இவரது குருநாதர் ஸ்ரீ சண்முகானந்த சுவாமிகள்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள்/ காவியங்களை இயற்றியவர்.

நாடகக் காவலர் R.S. மனோகர் நடத்திய இந்திரஜித், பரசுராமர், நரகாசுரன், துருவாசர், திருநாவுக்கரசர், வரகுணபாண்டியன்  ஆகிய மேடை நாடகங்களை எழுதியவர் இவரே.

ஹெரான் ராமசாமி உள்ளிட்ட பலர் நடத்திய சரித்திர நாடகங்கள், சமூக நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார்.

வேலுண்டு வினையில்லை திரைப்படத்திற்கான கதையையும், தோடி ராகம் திரைப்படத்திற்கான வசனத்தையும் இவர் எழுதியுள்ளார்.பல தொலைக்காட்சிகளிலும் பக்தித் தொடர்களை எழுதியுள்ளார்.

சிறந்த சமயச் சொற்பொழிவாளர்.

இவரது மூன்று நாடகங்களை ஆய்வு செய்து மூவர் ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர்.

பதினைந்துக்கும் மேற்பட்ட பெரும் விருதுகளைப் பெற்றுள்ள இவரைத் தமிழகம் பாராட்டி மகிழ்கின்றது.

இவருக்கு நமது நன்றி.

இவரைப் பாராட்டி மகிழ விரும்பும் அன்பர்கள் கடிதம் அனுப்ப வேண்டிய முகவரி: கவிஞர் கே.பி.அறிவானந்தம், 14, நல்லீஸ்வரர் நகர், வெங்கடாபுரம், குன்றத்தூர், சென்னை 600 069

சந்தனத் தென்றல் பதிப்பகம்: பாரதிப் பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப் பத்தும் என்ற நூலை வெளியிட்டுள்ள சந்தனத் தென்றல் பதிப்பகத்தின் உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் பாரதி போற்றி ஆயிரம் பகுதியில் பாரதியின் பத்துப்பாட்டு நூலை வெளியிட அனுமதியை மகிழ்ச்சியுடன் தந்துள்ளார். அவருக்கு எமது நன்றி. 128 பக்கங்களைக் கொண்ட நூல் சிறப்புற அச்சிடப்பட்டுள்ளது. விலை ரூ 100/

பதிப்பகத்தின் முகவரி: 10, காமராசர் தெரு, கொல்லைச்சேரி, குன்றத்தூர், சென்னை, 600069

நன்றி: கவிஞர் கே.பி.அறிவானந்தம் நன்றி: சந்தனத் தென்றல் பதிப்பகம், சென்னை.

****