Sri Sathya Sai baba’s Sahasra Chandra Darsana Festival
Research paper No 1672; Dated 24th February 2015
Written by London swaminathan
நாகரீகம் வாய்ந்த ஒரு சமுதாயம்தான் “ரோட்டி, கப்டா, அவர் மகானு”க்கு (உணவு, உடை, உறைவிடம்) மேல் சிந்திக்க முடியும். 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்னரே வேத இலக்கியங்களைப் படைத்து அவற்றை வாய்மொழி மூலமாகவே பாதுகாக்க வேண்டும் என்றால் அது எத்தகைய ஒரு உயரிய சிந்தனை உடைத்தாயிருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். 1500 ஆண்டுகளுக்கு முன்னரே ‘பெர்fயூம்’ செய்வது எப்படி என்று (வராஹமிகிரரின் பிருஹத் சம்ஹிதா) நூல் எழுத வேண்டுமானால் அவர்கள் நாகரீகத்தில் எவ்வளவு முன்னேறி இருக்க வேண்டும்?
இதே இந்துக்கள்தான் பிறந்த நாள் கொண்டாடும் வழக்கத்தையும் உலகிற்குக் கற்பித்தார்கள். இன்றோ, அது மேல் நாட்டில் பில்லியன் டாலர் ‘பிஸினஸ்’ ஆகிவிட்டது. பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள், பிறந்த நாள் ‘கேக்’, திடுக்கிடும் ‘சர்ப்ரைஸ் பார்ட்டி’கள், பிறந்த நாள் பலூன், உணவு படைப்பு என்று இப்படி எத்தனையோ தொழில்கள் வளர்ந்துவிட்டன. எப்படி ‘பெர்Fயூம்’ (ஸெண்ட்) செய்வது நம் நாட்டில் துவங்கி இன்று பிரான்ஸ் நாட்டில் பில்லியன் டாலர் வணிகம் ஆனதோ அதே போல இந்த பிறந்த நாள் வைபவ விஷயங்களும் மேலை நாடுகளில் பெரும் வணிகம் ஆகிவிட்டது. இதற்கெல்லாம் மூல காரணம் இந்துக்கள் என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா?
நாம் எப்படி துவக்கினோம்?
கிருஷ்ண ஜயந்தி
ராமர் ஜயந்தி (ராம நவமி)
ஹனுமன் ஜயந்தி
சங்கர ஜயந்தி, ராமானுஜ ஜயந்தி, ரமண ஜயந்தி, ராமகிருஷ்ண ஜயந்தி, மத்வ ஜயந்தி என்று ஆரம்பித்து வைத்தோம். மாற்று மதத்தினரும் இதைப் பிடித்துக் கொண்டார்கள்.
புத்த ஜயந்தி
ஏசு ஜயந்தி (கிறிஸ்துமஸ்)
முகமது ஜயந்தி (மிலாடி நபி)
என்று அவரவர் கொண்டாடத் துவங்கினர். நாம் இதற்கும் மேலாக ஒரு படி போனோம்:
(ஜயந்தி என்றால் பிறந்த நாள்)
தேவர் ஜயந்தி
காந்தி ஜயந்தி
நேரு ஜயந்தி (குழந்தைகள் தினம்)
ராதா கிருஷ்ணன் ஜயந்தி (ஆசிரியர் தினம்)
என்று மனிதர்களுக்கும், புனித மகான்களுக்கும் கொண்டாடத் துவங்கினோம்.
புத்தகத்துக்கு பிறந்த நாள் விழா!!!
பின்னர் இதற்கும் மேலாகப் போனோம்:
கீதா ஜயந்தி என்று பகவத் கீதை உலகில் தோன்றிய நாளையும் கொண்டாடத் துவங்கினோம். உலகில் புத்தகத்துக்கு ஜயந்தி (பிறந்த நாள்) கொண்டாடும் ஒரே இனம் இந்துக்கள்தான்!
பிறந்த நாள் கொண்டாடுவது 40 சம்ஸ்காரங்களில் ஒன்றாக இருக்கிறது. குழந்தை பிறந்த முதல் ஆண்டு நிறைவில் ஆயுஷ் ஹோமம் என்று பெரிய ஹோமம் நடத்துவோம் அல்லது கோவிலுக்கு குழந்தையைக் கூட்டிக் கொண்டு போய் விசேட அபிஷேக ஆராதனைகளை செய்வோம். இப்போதெல்லாம் மேலை நாடுகள் போல ‘கேக்’கும் வெட்டத் துவக்கி விட்டோம்.
ஆனால் இந்துக்கள் இத்தோடு நிற்கவில்லை. தினமும் பிராமணர்கள் சொல்லும் வேத மந்திரத்தில் நூறாண்டுக் காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க (பஸ்யேம சரதஸ் சதம், ஜீவேம சரதஸ் சதம், நந்தாம சரதஸ் சதம், மோதாம சரதஸ் சதம், ப்ரப்ரவாம சரதஸ் சதம்…..) என்று சொல்வதால் 100 ஆண்டுகள் வரை என்ன என்ன பிறந்த நாள் விழா என்று சாத்திரங்கள் பட்டியலே போட்டுக் கொடுத்துவிட்டன. உலகில் வேறு எந்த கலாசாரத்திலும் இத்தகைய அதிசயத்தைக் காண இயலாது.
ஜயந்தி நாட்கள்
கிருஷ்ண ஜயந்தி (ஸ்ரீ ஜயந்தி, கோகுலாஷ்டமி, ஜன்மாஷ்டமி)— சிராவண மாத கிருஷ்ண பக்ஷ எட்டாம் நாள்(அஷ்டமி)
ராம ஜயந்தி (ராம நவமி)–சித்திரை மாத சுக்ல பக்ஷ ஒன்பதாம் நாள் (நவமி)
சங்கர ஜயந்தி- வைகாசி மாதம் சுக்லபக்ஷ பஞ்சமி
கீதா ஜயந்தி- மார்கசீர்ஷ சுக்லபக்ஷ ஏகாதசி
ஹனுமன் ஜயந்தி – சித்திரை மாத பௌர்ணமி (சித்ரா பௌர்ணமி)
ராமானுஜ ஜயந்தி — சித்திரை திருவாதிரை நட்சத்திர நாள்
மத்வ ஜயந்தி —- விஜய தசமி நாள் (ஆஸ்வீன சுக்ல பக்ஷ தசமி)
புத்த ஜயந்தி – வைகாசி மாத பௌர்ணமி (வைகாசி விசாகம்)
ஏசு ஜயந்தி (கிறிஸ்துமஸ்)- டிசம்பர் 25
காந்தி ஜயந்தி- அக்டோபர் 2
நேரு ஜயந்தி (குழந்தைகள் தினம்)- நவம்பர் 14
ராதா கிருஷ்ணன் ஜயந்தி (ஆசிரியர் தினம்)- செப்டம்பர் 5
முக்கியமான பெரியோர்கள் ஏப்ரல்/மே மதாம் வரும் (சித்திரை/வைகாசி) தேதிகளில் பிறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்துக்களின் பெரும்பாலான பண்டிகைகள் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டதால் ஆங்கில தேதி மாறி மாறி வரும்)
உக்ர ரத, பீம ரத, விஜய ரத சாந்திகள்
போன வாரம் லண்டன் முருகன் கோவிலில் நடந்த ஒரு சதாபிஷேகத்துக்குப் போனேன். அங்கு லண்டன் முருகன் கோவில் தலைமை குருக்கள் திரு.நாகநாத சிவம் நல்ல சொற்பொழிவு ஆற்றி ஒரு நூலையும் எல்லோருக்கும் கொடுத்தார். அது விக்ரமசிங்கபுரம் செல்ல மணி பட்டர் எழுதியது. அவர் சொல்லும் அபூர்வ விஷயங்களைக் காண்போம்:
61- ஆவது பிறந்த தினம் – சஷ்டி அப்த பூர்த்தி
70- ஆவது பிறந்த தினம் – பீம ரத சாந்தி
81- ஆவது பிறந்த தினம் – சதாபிஷேகம்
100- ஆவது பிறந்த தினம் – பூர்ணாபிஷேகம்
இது மட்டுமல்ல. இதற்கிடையில்
பீம சாந்தி – 55 ஆவது பிறந்த தினம்
உக்ர ரத சாந்தி -60 ஆவது பிறந்த தினம்
சஷ்டிதம அப்த பூர்த்தி- 61 ஆவது பிறந்த தினம்
பீம ரத சாந்தி — 70 ஆவது பிறந்த தினம்
ரத சாந்தி – 72 – ஆவது பிறந்த தினம்
விஜய சாந்தி –78 ஆவது பிறந்த தினம்
ப்ர பௌத்ர சாந்தி – பேரனுக்கு ஆண்குழந்தை பிறந்தவுடன். அப்போது கனகாபிஷேகமும் செய்வர்.
சதாபிஷேகம் – 80 ஆண்டு 8 மாதம் முடிந்த பின்னர்
ம்ருத்யுஞ்சய சாந்தி – 85 ஆவது பிறந்த தினம்
100 வயது –பூர்ணாபிஷேகம்.
இதற்கான காரணம், முறைகள் ஆகியவற்றையும் செல்லமணி பட்டர் விளக்கி இருக்கிறார்.
சுருக்கமாக சதாபிஷேகம் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன். கிருஷ்ணர் வணங்கக் கூடிய ஆறு பேர் யார் யார் என்று நேற்று நான் எழுதிய கட்டுரையில் சஹஸ்ர சந்திர தர்ஸி என்பதை விளக்கி இருந்தேன். யார் ஒருவர் மூன்றாம் பிறை சந்திரனை ஆயிரம் முறை பார்க்கிறார்களோ அவர் கிருஷ்ணர் வணங்கக்கூடிய அளவுக்கு பெரிய மஹான். சத்ய சாய் பாபாவும் பெரிய அளவில் சஹ்ஸ்ர சந்திர தர்சன – சதா பிஷேக விழாவைக் கொண்டாடினார். அவர் நமக்கெல்லாம் இதன் அருமை பெருமை புரிய வேண்டும் என்று அதைச் செய்தார்.
29 நாட்களுக்கு ஒரு முறையே பிறை தரிசனம் கிடைக்கும் ஆதலால் 1000 முறை தரிசிக்க 80 ஆண்டு எட்டு மாதம் ஆகிவிடும். இந்த பிறந்த நாள் விழாக்களில் சஷ்டிதம அப்த பூர்த்தியின் போது மீண்டும் ஒரு முறை மனைவிக்கு தாலி கட்டுவதும் உண்டு. இந்து முறைப்படி ஆண்டுகள் எண்ணிக்கை 60. இதற்குப் பின்னர் மீண்டும் 60 ஆண்டுகள் வாழ்வது லட்சியம். மஹாத்மா காந்தியும்கூட நா
ன் இந்து முறைப்படி 120 ஆண்டுகள் வாழ விருப்பம் என்று சொல்லி இருந்தார்.
ஆக எல்லா ஜயந்திகளையும் நாம் கொண்டாட முடியவிட்டாலும் 60, 80, 100 ஆகிய ஆண்டுகளில் கொண்டாடலாம். உலகம் இந்துக்களுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளது. நாம் கற்பித்த இந்த விழாவை இன்று உலகில் உள்ள எல்லா மதத்தினரும் கொண்டாடுகிறார்கள்.
நூறாண்டுக் காலம் வாழ்க!
நோய் நொடி இல்லாமல் வாழ்க!!






You must be logged in to post a comment.