Written by S Nagarajan
Article No.1674 Dated 25th February 2015.
சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
15. பட்ட காலிலே படும்!
ச.நாகராஜன்
நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:
एकदेशविकृतमनन्यवत् न्यायः
Ekadesavikrtamananyavat nyayah
ஏகதேசவிக்ருதமனந்யவத் நியாயம்
ஒரு விஷயத்தில் வடிவம் அப்படியே இருந்து ஒரு பகுதி மட்டும் சிதைந்து போயிருக்கும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும். உதாரணமாக ஒரு குதிரையை எடுத்துக் கொண்டால் அதன் உருவம் கழுதை போல ஆகி விடாமல் அப்படியே இருக்க, அதன் வால் மட்டும் கொஞ்சம் நறுக்கப்பட்டு விட்டால் அப்போது இந்த நியாயம் பொருந்தும். ஒரு மனிதன் மிருகமாகாமல் மனிதனாகவே இருக்க அவன் விரல்கள் மட்டும் துண்டிக்கப்படுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.அதாவது வெளியில் ஏற்படும் சிதைவுகள் ஒரு விஷயத்தின் உண்மையான இயற்கையை மாற்றி விடாது என்பதை எடுத்துக் காட்ட இந்த நியாயம் பயன்படுகிறது.
एकाकिनी प्रतिज्ञा हि प्रतिज्ञानं न साधयित न्यायः
ekakinapratijnahi pratijnanam na sadhayati nyayah
ஏகாகினி ப்ரதிக்ஞா ஹி ப்ரதிக்ஞானம் ந சாதயதி நியாயம்
வாக்குறுதி மட்டும் அளிப்பது என்னும் நியாயம் இது.
வெறும் வாக்குறுதி மட்டும் வெற்றியை அளிக்காது. சொன்ன வாக்குறுதியைச் செயலிலும் செய்து காட்ட வேண்டும். வெறும் வெட்டிப் பேச்சு பேசுவோர் செயல் வீரராக இருக்க முடியாது என்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது. சொன்ன வாக்குறுதியை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவரே வெற்றியாளராகத் திகழும் மேன் மக்கள் ஆவர்.
एकामसिद्धिं परिहरतो द्वीतीयापद्यते न्यायः
ekamasiddhim pariharato dviteyapadyate nyayah
ஏகாமசித்திம் பரிஹரதோ த்வீதியாபத்யதே நியாயம்
ஒரு தோல்வி இன்னும் பல தோல்விகளைத் தொடர்ச்சியாக கொண்டு வருவதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது.
பட்ட காலிலே படும்; கெட்ட குடியே கெடும் என்பது பழமொழி.
ஒரு தோல்வியை சரி செய்யப் போய் அடுத்த விஷயத்தை கவனிக்காமல் விட, அதுவும் பிரச்சினையாகி தோல்வியைத் தருகிறது.
வாழ்க்கையில் எல்லோருக்கும் ஏற்படும் வேதனையான அனுபவம் தான் இது. அதைச் சுட்டிக் காட்டுகிறது இந்த நியாயம்.
क्षीरं विहाय अरोचकग्रस्तस्य सौवीररुचिमनुभवित
kshiram vihayarocakagrastasya sauvirarucimanubhavatati
க்ஷீரம் விஹாய அரோசகக்ரஸ்தஸ்ய
சௌவீர்ருசிமனுபவதி நியாயம்
க்ஷீரம் – பால்;
பாலை விரும்பால் புளித்திருக்கும் வேறொன்றை ஒருவர் பெற விரும்பும் நியாயம் இது.
நோயாளிகளில் சிலருக்கு பால் பிடிக்காது. ஆனால் அவர்கள் தயிரை விரும்புவர். அல்லது அது போன்ற வேறொன்றை விரும்புவர்.
இந்த நியாயமானது கெட்ட வழியில் போய் விசித்திரமான சுவையை விரும்புவது போல கெட்ட வழிகளை விரும்பும் தீயோரை எடுத்துக் காட்டப் பயன்படுகிறது/
कौण्डिन्य न्यायः
kaundinya nyayah
கௌண்டின்ய நியாயம்
இதற்கு பழைய கதை ஒன்று உண்டு.கௌண்டின்யர் என்ற பெயரில் அந்தணர் ஒருவர் இருந்தார். விருந்து ஒன்று நடந்த போது அவரும் அதில் கலந்து கொண்டார். ஆனால் எல்லோருக்கும் சுண்டக் காய்ச்சிய பால் வழங்கப்பட்ட போது அவருக்கு மட்டும் புளித்த பால் தரப்பட்டது! ஒரே பந்தியில் இப்படி ஒரு வித்தியாசம்.
இப்படி விதியை மீறிச் செயல்படும் exception-ஏ விதியாவதை இந்த நியாயம் சுட்டிக் காட்டுகிறது. இது கௌண்டின்யருக்கு செய்தது போல என்று சுட்டிக் காட்டப்பட்டு வழங்கப்படுகிறது.
படங்கள் – எங்களுடையன – அல்ல; பல வெப்சைட்டுகளிலிருந்து எடுக்கப்பட்டவை – நன்றி: சுவாமி
***************







You must be logged in to post a comment.