பூந்துறை குப்பிச்சி! (Post No.5264)

Written by S NAGARAJAN

 

Date: 28 JULY 2018

 

Time uploaded in London –   6-11 am (British Summer Time)

 

Post No. 5264

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

பூந்துறை குப்பிச்சி!

 

ச.நாகராஜன்

 

விஜய நகரத்து அரண்மனையில் புகுந்த குப்பிச்சியின் வீர வரலாறு பலரும் அறியாத ஒன்று. அதை கொங்கு  மண்டல சதகம் 56வது பாடலில் விளக்குகிறது.

 

மேல்கரைப் பூந்துறையில் கொங்கு வேளாளரில் காடை குலத்தில் மாட்டையா குப்பிச்சி என்ற வீரன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் விஜயநகரம் சென்றான். அங்கு வாயில் காவலனாக இருந்த ஒரு மல்லன்  தனது இடது காலில் சங்கிலி ஒன்றின் தலைப்பைக் கட்டி மற்றொரு தலைப்பை வாசல்படியின் எதிர்ப்புறமாகப் மேலே மாட்டித் தோரணம் போலத் தொங்க விட்டிருந்தான். யாரேனும் வல்லவனாக இருந்தால் தன்னை ஜெயித்து விட்டு உள்ளே போகலாம்; இல்லையேல் தன் காலில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும் சங்கிலிக்குக் கீழே நுழைந்து உள்ளே செல்லலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான். அந்த மல்லனை யுத்தத்திற்கு குப்பிச்சி அழைத்தான். யுத்தத்தில் அவனைக் குப்புற வீழ்த்தி ஜெயித்தான். நேராக அத்தாணி மண்டபத்தினுள் புகுந்து மன்னனைக் கண்டான்.

 

 

மன்னன், “என்னிடம் ஒரு குதிரை இருக்கிறது. அதன் மேல் ஏறி சவாரி செய்வாயேல் நீ ஒரு பெரும் வீரன் என்பதை ஒப்புக் கொள்வேன்” என்றான். அந்த சவாலை எதிர் கொண்டான் குப்பிச்சி.

 

அந்தக் குதிரை மிகவும் பொல்லாத குதிரை. ஏறிய எவரையும் அந்நகரத்தில் இருந்த நீர் நிலை ஒன்றினுள் கொண்டு சென்று தள்ளி, மிதித்து மீண்டு வரும் தகுதி பெற்ற குதிரை என்பதை குப்பிச்சி தெரிந்து கொண்டான்.

சுண்ணாம்புக்கற்களை வாங்கி அதை ஒரு மூட்டையில் கட்டினான் குப்பிச்சி.

 

அந்த மூட்டையை குதிரையின் அடி வயிறில் நன்கு கட்டி விட்டு குதிரை மீது அவன் ஏறினான்.

 

உடனே குதிரை அதிவேகமாக வீதிகள் வழியே சென்று பெரும் நீர் நிலை ஒன்றில் வழக்கம் போல பெரிதாகக் கனைத்துக் கொண்டு இறங்கியது.

 

வயிறளவு நீரினுள் குதிரை இறங்கியவுடன் சுண்ணாம்புக்கற்கள் நீரில் படவே கொதிப்புற்றது. அந்த எரிச்சலைப் பொறுக்க மாட்டாமல் குதிரை நீர்நிலையிலிருந்து வெளியேறியது. அதி வேகமாகச் சென்ற அந்த குதிரை மீது அமர்ந்திருந்த குப்பிச்சி வீதி வலம் வந்து கடைசியில் அரசன் முன் வந்து வணங்கி நின்றான்.

 

அவனது யுக்தியையும் வீரத்தையும் மெச்சிய அரசன் அவனை பூந்துறை நாட்டிற்கான அதிகாரத்தைக் கொடுத்து அனுப்பினான்.

 

இந்த மாதிரியான வழக்கம் அந்தக் காலத்தில் இருந்தது என்பதை எட்டயபுர சமஸ்தானத்து வம்சமணி தீபிகை என்ற நூல், மூன்றாவது பிரகரணத்தில் தெரிவிக்கிறது.

 

12வது பட்டம் நல்லம நாயக்கரவர்கள் விஜயநகரம் சென்றிருந்த காலத்தில் தெற்கு வாசலில் சோமன் என்ற மல்ல வீரன் இவ்விதம் இடது காலில் தங்கச் சங்கிலி கட்டிக் கொண்டிருந்ததாகவும், அவனைக் கொன்று உள்ளே நுழைந்ததாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

 

சுண்ணாம்புக் கல்லைக் கட்ட யோசனை தெரிவித்த உப்பிலிய நல்லயன் என்பவனுக்கு இந்த அதிகாரி ஒரு மரியாதையைக் கொடுத்தான்.

 

அது இது: பூந்துறையில் செதுக்கிய கல்லால் ஆன மேடை ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. ஜாதி ஞாயம் உப்பிலியர் அந்த மேடையிலிருந்து பேசுவார். அப்பொழுது மேலோர் அங்கு வந்தால் கூட உட்கார்ந்தே பேசலாம் என்ற வழக்கம் இருந்தது. அந்த மேடையின் இரு புறமும் குதிரையைப் பிடித்தல், சுண்ணாம்புக் கல்லைக் கட்டுதல், சவாரி செய்தல் ஆகிய சித்திரக் குறிகள் வெட்டப்பட்டிருக்கின்றன.

 

பூந்துறை புட்பவன நாதர் ஆலயத்தினுள் பாகம் பிரியா நாயகியார் கர்ப்பகிரக இடப்புறச் சுவரில்,அக்கோவிலில் திருப்பணி செய்துள்ள ‘குப்பன் அழைப்பித்தான்’ என்ற குறிப்பு காணப்படுகிறது.

 

அதில் உள்ள குப்பன் (குப்பிச்சி) மேலே கண்ட வரலாறில் உள்ள குப்பிச்சியே.

விஜயநகர சதாசிவராயர், ராமராஜா ஆகியோரின் சாஸனங்கள் இங்கு காணப்படுகின்றன.

 

இவர்களுடைய காலம் கி.பி. 1541 முதல் 1565 வரை எனலாம்.

 

இனி, கொங்கு மண்டல சதகம் கூறும் பாடலைப் பார்ப்பொம்:

 

தேசுற் றிலகு விசய நகரத் திறலரசன்                     வாசற் பணிக்கனை மண்கொளக் குத்தியம் மன்னனைக்கண்

டேசற் படுமச மாவினை யாட்டி யெவருமெச்ச

மாசற்ற நாடுகொள் குப்பிச்சி யுங்கொங்கு மண்டலமே.

 

பாடலின் பொருள் :- விஜய நகரத்து அரண்மனை வாயிற்காவலனைக் குப்புற அடித்து வீழ்த்தி, அரண்மனைக்குள் புகுந்து அரசனைக் கண்டு அங்கிருந்த மசக்குதிரை ஏறி ஆட்டி, பூந்துறை நாட்டின் அதிகாரத்தைப் பெற்ற குப்பிச்சியும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாகும்.

***