
Post No.7853
Date uploaded in London – – 20 April 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ச.நாகராஜன்
ஒரிஸா மாநிலத்தில் குண்டுபரஸி (Gunduparasi) என்பது ஒரு சின்னஞ்சிறு கிராமம். அங்கு குடிக்க நீரே இல்லாத அவல நிலை. குடிநீருக்காக வெகு தூரம் நடந்து சென்று நீரை எடுத்து வர வேண்டிய கஷ்டமான சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையை மாற்ற உறுதி கொண்டார் ஒரு மனிதர். அவர் பெயர் துர்லவ நாய்க்.(Durlava Naik)
ஒரு கிணறு கிராம மக்களுக்கென இருந்தால் இந்த அவல நிலை இருக்காது என்று அவர் எண்ணினாலும் கிராமத்தார் அனைவரும் ஒன்று கூடி கிணறை வெட்டப் போவதில்லை என்பதையும் அவர் உணர்ந்தார்.
அவர் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள்?
ஆகவே தானே ஒரு கிணறை வெட்டி விடுவது என்ற முடிவுக்கு அவர் வந்தார்.
கிணறு வெட்டுவதற்காக ஒரு இடத்தையும் அவரே தேர்தெடுத்தார். தினமும் காலை அந்த இடத்திற்குச் சென்று வேலையை ஆரம்பிப்பார். மாலை பொழுது சாயும் வரை கிணறு வெட்டும் வேலை தொடரும்.
ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல, இருபத்தைந்து வருடங்கள் அவர் வெட்டிக் கொண்டிருந்தார்.
கடைசியில் ஒரு குளமே உருவாகி விட்டது.
அதை கிராம மக்களுக்கு அவர் இலவசமாக அளித்தார்.
தினமும் குளம் வெட்ட வேண்டிய வேலை இருந்ததால் அருகேயே ஒரு குடிசை ஒன்றைப் போட்டு அதில் அவர் வசித்து வந்தார்.
ஏழை என்றாலும் கூட குளத்தை வெட்டி கிராம மக்களுக்கு அதை அர்ப்பணித்த பின்னர் அவர் வேறு விதமாகப் பார்க்கப்பட்டார். அவரை அனைவரும் அன்புடன் பார்த்தனர்; மதித்தனர்.
ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது : துர்லவ நாயக் ஒரு பிறவிக் குருடர்!!

இதே போல உத்தர கன்னட மாவட்டத்தில் லேடி பகீரதா என்று அழைக்கப்பட்ட பெண்மணியான கௌரி எஸ் நாயக் தண்ணீர் இல்லாத சிர்சியில் இருந்த கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர்.
தக்குச் சொந்தமான 150 பனை மரங்கள், 15 தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்கள் உள்ள பகுதியில் நீரே இல்லை என்பது அவருக்கு வருத்தமாக இருந்தது. கிணறை வெட்டப் பணமும் இல்லை. ஆகவே ஒரு இடத்தைத் தானே தேர்ந்தெடுத்து அங்கு கிணறு ஒன்றை வெட்ட ஆரம்பித்தார். தினமும் ஐந்து முதல் ஆறு மணி நேரம் கிணறு வெட்டும் வேலையில் ஈடுபட்டார் அவர். மூன்று மாதங்களில் 60 அடி ஆழக் கிணறு ஒன்று உருவாக அதிலிருந்து நீர் சுரந்தது.
கடைசியில் கிணறு அடியில் சேர்ந்திருந்த குப்பை கூளம், சேறு சகதியை நீக்க மட்டும் மூன்று பெண்களின் உதவியை அவர் நாடினார். கிணற்றில் 7 அடி நல்ல நீர் இருந்தது.
மனதில் உறுதி இருந்த இந்த பகீரதப் பெண்மணியை அனைவரும் பாராட்டினர் என்பதில் வியப்பில்லை.
துர்லவ நாயக் போன்றவர்கள் இருப்பதால் தான் மனிதன் என்ற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் நமக்குத் தெரிகிறது, இல்லையா!
tags கிணறு,மனிதர்கள்
***