மரங்களை நடுவோம்; பூமியைக் காப்போம்! (Post No.6918)

WRITTEN BY S NAGARAJAN


swami_48@yahoo.com

 Date: 23 AUGUST 2019  

British Summer Time uploaded in London – 7-42 am

Post No. 6918

 Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both blogs 12,000.

ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய ச.நாகராஜனின் 10 உரைகள் ஒலிபரப்பப்பட்டன. 10-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட பத்தாம் உரை இங்கு தரப்படுகிறது.

மரங்களை நடுவோம்; பூமியைக் காப்போம்!

ச.நாகராஜன்

மரங்களை நடுதல் ஒரு பெரிய அறமாக பாரதத்தில் கருதப்பட்டதோடு அந்த அறத்தை மாமன்னர்கள் தவறாது செய்தனர்; ஆயிரக்கணக்கான நிழல் தரு மரங்களை ஆங்காங்கே நட்டனர்.

ஒரு மரத்தை நடுவதால் ஏற்படும் பயன்கள் யாவை?

மரங்கள் உயிர் வாழத் தேவையான சுவாசிக்கும் காற்றைத் தருகிறது; ஆக்ஸிஜனைத் தருகிறது. வெள்ளப் பெருக்கெடுத்தோடும் போது வெள்ளப் பெருக்கை மரங்கள் தடுக்கின்றன. அதனால் நிலச்சரிவுகளும் மண் அரிப்பும் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. ஏராளமான விலங்குகளும் பறவைகளும் மரங்களைத் தங்கள் உறைவிடமாகக் கொண்டு உயிர் வாழ்கின்றன. மரங்கள் கனிகளையும் காய்களையும் வழங்குகின்றன. கட்டிடங்கள் கட்டுவதற்கான கட்டுமானப் பொருளாகவும் இன்னும் இதர பல வித வழிகளிலும் மனித குலத்திற்கு உதவுகின்றன.

பூமியின் நுரையீரலே மரங்கள் எனலாம். அவைகள் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் இதர நச்சு வாயுக்களே பூமி வெப்பமயமாதலுக்கான முக்கிய காரணம்.ஆகவே பூமியை நிரந்தரமாக வாழ்விக்கும் அரிய செயலை மரங்கள் செய்கின்றன.

மண்வளத்தை உறுதி செய்வதும் மரங்களே.

மரங்களை நடும் அரிய பணியைச் செய்து மனித குலத்திற்கு அரிய முன்னுதாரணமாகப் பலரும் திகழ்கின்றனர். இரு எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்.   

ஃபெலிக்ஸ் ஃபின்க்பெய்னர் (Felix Finkbeiner)  என்ற இளைஞர் இளம் வயதிலிருந்தே மரம் நடுவதில் ஆர்வம் கொண்டார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அவர் பேசும் போது அவர்க்கு வயது ஒன்பது தான். ப்ளாண்ட் ஃபார் தி ப்ளானெட் (Plant for the Planet) என்ற மரம் நடும் இயக்கத்தை ஆரம்பித்து கோடிக் கணக்கில் மரங்களை நட்டார். பூமியில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் 150 மரங்களை நடுவது என்ற கணக்கில் அவர் மரங்களை நட்டு வருகிறார். உலக மக்களுக்கு உத்வேகம் ஊட்டுகிறார்.

இந்தியாவின் வடகிழக்கில் உள்ள உலகின் மிகப்பெரும் நதித் தீவான (River Island) மஜுலி தீவானது (Majuli Island) வறண்டு அழியும் நிலையில் இருப்பதைப் பார்த்தார் ஜாதவ் பயெங் (jadav Payeng) என்னும் இளைஞர். அதைச் சுற்றி ஓடும் பிரம்மபுத்திரா நதியானது தீவின் ஓரங்களை அரிப்பதைக் கண்ணுற்ற அவர் 1979இலிருந்து நூற்றுக் கணக்கான மரங்களை அங்கு நட ஆரம்பித்தார். தீவில் மிகப் பெரும் காட்டை உருவாக்கிய அவர் 15000 மக்களை வாழ வைத்ததோடு யானை, காண்டாமிருகம் உள்ளிட்ட விலங்குகளுக்கான ஒரு பூங்காவையும் அமைத்தார். உத்வேகமூட்டும் இவர்கள் வழியில் அனைவரும் சென்றால் பூமி பசுமை பூமியாக மாறும் இல்லையா?

***