இறந்த யானை எழுந்த கதை! (Post No.6281)

Written by S Nagarajan


swami_48@yahoo.com


Date: 19 April 2019


British Summer Time uploaded in London – 15-11

Post No. 6281

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))

கொங்கு மண்டல சதகம்

இறந்த யானை எழுந்த கதை!

ச.நாகராஜன்

63 நாயன்மார்களில் எட்டாவது நாயன்மாராக இடம் பெற்று போற்றப்படுபவர் எறிபத்த நாயனார்.

இவர் கரூரைச் சேர்ந்தவர்.

இவரைப் போற்றி கொங்கு மண்டல சதகத்தில் 27வது பாடலாக இடம் பெறும் பாடல் இது :

நதிசூடும் வேணிக் கருவூர்ப் பசுபதி நம்பருக்குப்

புதுமாலை கட்டுஞ்ச் சிவகாமி யாண்டவன் போந்தெருவின்

மிதமீறிப் பூவினைச் சிந்துகை யான்விறன் மீறவெட்டி

மதயானை யைக்கொன் றெழுப்பிய துங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : கரூர்ப் பசுபதி ஈஸ்வரருக்காக மாலை கட்டும் திருத்தொண்டினை மேற்கொண்டிருந்தவர் சிவகாமி ஆண்டவர். அவர் பூக்கூடையைப் பிடுங்கி எறிந்த யானையைக் கொன்று பின்னர் எழுப்பியதும் கொங்கு மண்டலமே.

அருமையான திருவிளையாடல் ஒன்றைக் கூறும் பாடல் இது.

எறிபத்தர் என்பவர் கரூரில் வாழ்ந்து வந்த சிவனடியார். அடியார்களுக்கு ஆபத்து வந்தால் அதற்குக் காரணமாக இருந்தவர்களை வெட்டுகின்ற கொள்கையைக் கடைப்பிடித்து வந்தவர் அவர். ஒரு நாள் சிவகாமி ஆண்டவர் என்பவர் பூக்களை எடுத்துக் கொண்டு தெருவழியே வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த நாட்டை  ஆளும் புகழ்ச் சோழனாரது பட்டத்து யானை மதம் கொண்டு அபூக்கூடையைப் பிடுங்கித் தூர எறிந்தது. இதனைக் கண்ட எறிபத்தர் அந்த யானையையும் கூட வந்த பாகர்களையும் கொன்றார்.

இவரது அன்பின் திறத்தைக் கண்ட புகழ்ச் சோழனார் சிவனடியார்க்குத் தீங்கு செய்த யானையை வளர்த்தது தான் தானே என மனம் நொந்து தன்னையும் அல்லவோ அவர் கொல்ல வேண்டும் என்று எண்ணினார். எறிபத்தரிடம் தன் வாளைக் கொடுத்துத் தன்னைக் கொல்லுமாறு வேண்டினார். ‘ஆஹா! சிறந்த பக்தியுள்ள சோழனாரைக் கொல்லும் தீங்கை அல்லவோ இழைக்க வேண்டி இருக்கிறது’ என்று பதைபதைத்த எறிபத்தர் தன் கழுத்தை அவ்வாளால் அறுக்க முயன்றார். இதைக் கண்ட புகழ்ச் சோழனார் மனம் நடுங்கி எறிபத்தரின் கையையும் வாளையும் பிடித்துக் கொண்டார்.

அப்போது ஆகாயத்திலிருந்து அசரீரி – ஆகாயவாணி – ஒன்று எழுந்தது.

அதன் படி இறந்த யானையும் பாகர்களும் உயிர்பெற்று எழுந்தனர்.

சிவபெருமானின் இந்த அருள் விளையாட்டைக் கண்டு மக்கள் பக்திப் பரவசம் எய்தினர்.

அப்படிப்பட்ட எறிபத்த நாயனார் வாழ்ந்து யானை உயிர்ப்பிக்கப்பட்டது கொங்கு மண்டலத்திலேயே என்று புகழ்கிறது கொங்கு மண்டல சதகம்.

இவ்வரலாறைக் கூறும் திருத்தொண்டர் புராண சாரத்தில் வரும் பாடல் இது:

திருமருவு கருவூரா ரிலையார் சாத்துஞ் சிவகாமி யார்மலரைச் சிந்த யானை,

யரனெறியோ ரெறிபத்தர் பாகரோடு மறவெறிய வென்னுயிரு மகற்றீரென்று,

புரவலனார் கொடுத்தபடை யன்பால் வாங்கிப் புரிந்தரிவான் புகவெழுந்த புனித வாக்காற்,

கரியினுடன் விழுந்தாரு மெழுந்தார்தாமுங் கணநாத ரதுகாவல் கைக் கொண்டாரே

                  – திருத்தொண்டர் புராண சாரம்

  • ***

–subham–