
Written by London Swaminathan
Date: 26 June 2017
Time uploaded in London- 21-16
Post No. 4027
Pictures shown here are taken by me in Lisbon, Portugal on 25th June 2017; They are taught Yoga by a genuine swamiji Sri Amrta Suryananda Maharaja.

ஐரோப்பாவில் பல நாடுகளில் யோகசனப் பள்ளிகள் இருந்தாலும் போர்ச்சுகல் நாட்டில் சீராக , முறையாக யோகாசனம் பரவுவதை நேரில் கண்டேன். நாங்கள் ஆறு பேர் லண்டனிலிருந்து புறப்பட்டு போர்ச்சுகல் நாட்டின் தலை நகரானன லிஸ்பனில் நடந்த ஐரோப்பிய ஹிந்து ஃபோரம் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றோம் (Hindu Forum of Europe AGM in Lisbon) . எல்லாம் அவரவர் செலவு. சொந்தப் பணத்தைப் போட்டுச் சென்றோம். ஆனால் அதற்கு அடுத்த இரண்டு நாள் போர்ச்சுகீஸிய யோகா பெடெரேஷனின் கூட்டம், யோகா பயிற்சி, இந்தியப் பிரதமரின் போர்ச்சுகீசிய விஜயம் ஆகியன இருந்ததால் கூடவே தங்க ஏற்பாடுகள் செய்தோம். அந்த இரண்டு நாட்களுக்கான சாப்பாடு, தங்குமிடம் எல்லாவற்றையும் அந்த யோகா அமைப்பே எங்களுக்கு இலவசமாகச் செய்து கொடுத்தது.
அட, நம்மிடம் ஏதோ எதையோ எதிர்பார்த்துதானே எல்லோரும் ‘இலவசங்களை’ அள்ளி வீசுகிறார்கள்; இதுவும் அப்படித்தான் என்று மனதில் எங்கோ ஒரு மூலையில் கொஞ்சம் சம்சயம் (Doubt) இருந்தது. ஆனால் இந்த ஐயப்பாட்டை முளையிலேயே கிள்ளி எறியும்படி, எங்கள் ஒவ்வொருவரையும் யோகா பெடெரேஷன் தொண்டர்களே வரவேற்றனர். நாங்கள் வெவ்வேறு நேரத்தில் வெவ்வேறு விமானத்தில் தரை இறங்கிய போதிலும் ஒவ்வொருவரையும் தனித்தனி தொண்டர் வரவேற்றார். இவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் ஒருவர் வந்தார். அவர் ஸ்ப்ரெட் ஷீட்ட் (Spread sheet) வைத்துக்கொண்டு சரி பார்த்தார். இதை எல்லாம் பார்த்தவுடன் இந்த பெடெரேஷன் நல்ல திட்டமிட்டு இயங்கும் (organised group) ஒரு குழு என்று தெரிய வந்தது. எல்லோரும் தங்களை சுவாமிஜி அனுப்பியதாக சொல்லிக் கொண்டனர். யார் அந்த சுவாமிஜி என்று கேட்டவுடன், போர்ச்சுகீசிய ஆக்ஸெண்டில் accent சூர்யா நண்டா மஹா ராஜா என்றனர்.

ஹிந்து போரம் (Hindu Forum) கூட்டம் முடிந்த மறு நாளன்றுதான் அந்த சூர்யாநந்தா மஹாராஜாவைப் பார்த்தோம். எளிய தோற்றம்; எல்லோருடனும் அவரே வந்து பழகினார். எங்களை வரவேற்றவர்கள் எல்லோரும் வெள்ளையர்கள் ஆனால் பெயர்கள் எல்லாம் இந்துப் பெயர்கள்!
ஹிந்து போரம் முடிந்த மறுநாளன்று யோகா பெடெரேஷனின் முதல் நாள் கூட்டம் பலகலைக் கழக மண்டபத்தில் நடந்தது அப்பொழுதுதான் நாங்கள் எல்லோரும் சுவாமிஜிக்கு வணக்கம் சொன்னோம். ஆனால் பிரதர் நரேந்திர மோடி, லிஸ்பன் நகரிலுள்ள புகழ்மிகு ராதாகிருஷ்ணா கோவிலுக்கு வரவிருந்ததால் மஹாநாட்டைத் துவக்கி வைத்துவிட்டு சுவாமிஜி சென்றுவிட்டார். பின்னர்தான் தெரிந்தது; இதற்காகவே அவர் சீடர்களை, இரண்டு அணிகளாகப் பிரித்து மோடி வரவேற்புக்கு ஒருகுழுவை அனுப்பி இருந்தார் என்பது. எல்லா இடங்களிலும் சத் சங்கம், நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றுடன் துவங்கியது.
சுவாமி அம்ருத சூர்யாநந்த மஹராஜாவும் அவரது சீடர்களும் சொன்ன விஷயங்களைச் சுருக்கமாகத் தருகிறேன்; அடுத்த கட்டுரையில் கூட்டத்தில் பேசியோர் தந்த சுவையான விஷயங்களைத் தருகிறேன்
2011 ஆம் ஆண்டில் ஒரு யோகா மஹாநாட்டுக்காக இவர் பெங்களூரிலுள்ள பண்டிட் ரவி சங்கரின் ஆர்ட் ஆப் லிவிங் Art of Living அமைப்பின் உதவியைக் கேட்டவுடனேயே அவர் தயக்கமினிறி இடம் கொடுத்தார். அங்கே பாபா ராம்தேவ் மற்றும் புகழ்பெற்ற யோகா குருக்கள் எல்லோரும் வந்து சேர்ந்தனர். அம்ருத சூர்யாநந்தா முன்வைத்த சர்வதேச யோகா தினத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது. அதை ஐ.நா. சபை ஏற்காவிட்டாலும் அதைக் கொண்டாடுவோம் என்று தீர்மானித்தனர். பின்னர் நல்ல வேளையாக நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி ஏற்பட்டதால் அது உலகம் முழுதும் பரவியது. இன்று உலகின் முக்கிய நகரங்கள் எல்லாவற்றிலும் யோகா தினம் கொண்டாடப்படுகிறது

போர்ச்சுகல்லில் பள்ளிக்கூடங்களிலும் யோகா சொல்லித் தரப்படுகிறது. மறு நாள் யோகா காட்சி அணிவகுப்புக்கு வந்த அனைத்து அதிகாரிகளும் , அரசியல்வாதிகளும், சர்வ மதத் தலைவர்களும் யோகா பயிற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்கள் அனைவரும் சுவாமிஜி மீது வைத்திருக்கும் மதிப்பும் நல்லுறவும் அவர்களுடைய பேச்சிலிருந்தே தெரிந்தது.
ஆயிரம் பேர் யோகாசன அணிவகுப்பு, பயிற்சி செய்து காட்டினர். 40 பேர் ஹார்மோனியம் வாசித்தனர். அதற்குப் பின்னர் நூறு பேர் பல்வேறு வாத்தியங்களில் விருந்து அளித்தனர்.சிறுவர்கள், மேடையில் ஏறி யோகா பயிற்சி செய்தனர்.
கர்நாடகத்தைச் சேர்ந்த இளம் பெண்மணி நந்தினி சிக்லா போர்ச்சுகல்லில் இந்திய தூதராக உள்ளர் அவர் யோகாசனம் செய்வதற்காகவே அதற்குரிய உடையில் வந்தார். மேடை ஏறி முழங்கிய போதும் இன்று நான் தூதராகஇன்றி யோகாசனம் செய்யும் சீடனாக வந்தேன் என்று சொல்லி யோகாசனத்திலும் உற்சாகத்துடன் கலந்து கொண்டார்.

யோகா ஆபத்து!
முதல் நாள் நாங்கள் நடத்திய ஹிந்து போரம் கூட்டத்தில் நெதர்லாந்து பிரதி நிதி ராட்ஜ் பாண்டோ யோகாசனத்தையும் இந்து மதத்தையும் பிரிப்பதால் ஏற்படும் ஆபத்துகளை விளக்கினார். இது பற்றி தான்நடத்திய ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட் டார். எல்லோரும் யோகாசனம் என்ற பெயரைச் சொல்லி யோகா பியர் Yoga Beer, யோகா குஸ்தி சண்டை Yoga Wrestling , யோகா பாடி பில்டிங் Yoga Body Building என்பன வெல்லாம் நடத்துகின்றனர். இது பல கோடி டாலர் குவிக்கும் தொழில் என்பதால் எல்லோரும் இதில் இறங்கிவிட்டனர். யோகத்துக்கும் இந்து மதத்துக்கும் தொடர்பு இல்லை; இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று பிதற்றத் துவங்கி விட்டனர். இந்து மதத்தில் பதஞ்சலி அவர்களோவெனில் எட்டு வித கட்டுப்பாடுகள் உடையவர்கள்தான் இதைச் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார். அப்படிப்பட்ட மனக் கட்டுப்பாடோ, ஐம்புலக் கட்டுப்பாடோ இல்லாமல் யோகா என்று யாராவது கற்றுக் கொடுத்தால் அது சர்கஸ் வித்தை அல்லது ஜிம்னாஸ்டிக்ஸ் Gymnastics தான் என்றார். ஆகவே யோகம் இந்து மதத்தினுடையது; அதில் கட்டுப்பாடுகள் உண்டு; அப்படித் தர்மத்தின் பிண்ணனி இல்லாமல் யோகா சொல்லிக் கொடுக்கக் கூடாது என்றார்.

எனது பேச்சு
நானும் அவரை ஆதரித்துப் பேசினேன். தர்மம் அல்லது உற்கட்டுப்பாடு- மனக் கட்டுப்பாடு இல்லாமல் யோகப் பயிற்சி செய்தால், அல்லது கற்றுக் கொடுத்தால் விரைவில் செய்திப் பத்திரிக்கைகளில் யோகா கொலை, யோகா கற்பழிப்பு, யோகா தற்கொலை, யோகா வழிப்பறி என்றெல்லாம் செய்திகள் வரத் துவங்கி விடும். யோகம் என்பது இந்துக்களுடையதே என்று காட்ட வேதங்களிலும் சிந்து சமவெளி முத்திரைகளிலும் சான்றுகள் உள்ளன என்றேன்
இன்று லண்டனில் ஆண்டுதோரும் பிரம்மாண்டமான யோகக் கண்காட்சிகள் நடக்கின்றன. அங்கே வெள்ளைக்காரர்கள் ஏராளமான ஸ்டால்கள் Stalls வைக்கின்றனர், வெள்ளைக்காரர்கள் ஏராளமான யோகா பத்திரிக்கைகள் நடத்துகின்றனர். அசைவ உணவு சாப்பிடுவோர், குடிகாரர்கள் கூட அதைச் செய்துகொண்டே யோகாசனம் செய்கின்றனர். இதையெல்லாம் நீக்கி யம , நியமம் என்னும் கட்டுப்பாடுகளுடன் செய்வதே ‘யோகம்’ ‘ஆசனம்’ என்பதை இந்துக்கள் உலகிற்கு பறை அறிவிக்க வேண்டும் என்றேன்.
–சுபம்—