அப்பரின் அருமையான ‘லாபரட்டரி’!

appar1

Written by S NAGARAJAN

Date : 1 செப்டம்பர்  2015

Post No. 2114

Time uploaded in London : 9-02

ச.நாகராஜன்

இறைவனை அறிய ஒரு லாபரட்டரி சோதனை!

விஞ்ஞான யுகம் மலர்ந்ததிலிருந்து லாபரட்டரிகளுக்கு ஒரு தனி ‘மவுசு’ ஏற்பட்டிருக்கிறது. சோதனைச்சாலையில் எதையும் செய்து பார்த்து நிரூபித்தால் தான் அந்தக் கொள்கையைப் பற்றிய நம்பிக்கை நமக்கு ஏற்படுகிறது.

மாணவர்கள் சிறுவயதிலிருந்தே லாபரட்டரி ஃபீஸ் தனியே இப்போது கட்ட வேண்டியிருக்கிறது. எதையும் ஆராய்ந்து அறிந்தால் சுகம் தான்!

அது சரி சிக்கலான கேள்விகளுக்கு சோதனைச் சாலை உண்டா?

இறைவன் இருக்கிறானா, எங்கு இருக்கிறான், எப்படி அவனை அறிவது, இப்படி இதைத் தொடர்ந்து ஆயிரம் கேள்விகள். பதிலைப் பெற, சோதனை செய்து அறிய லாபரட்டரி ஏதேனும் இருக்கிறதா?

இறைவனைப் பற்றிப் பாடிய அருணகிரிநாதர் ‘அறிவால் அறிந்து உன் இரு தாள் இறைஞ்சி’ என்கிறார்.

அறிவால் அறிய சோதனைச் சாலை உண்டா?

ஏதுக்கள் எதற்கு?

வேண்டாம் இந்த விபரீதம் என்று அருளுரையாக அன்புரையாக எச்சரிக்கிறார் திருஞானசம்பந்தர்.

“ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் சோதிக்க வேண்டா” என்ற அவரது மொழி, லாஜிக் மற்றும் வார்த்தை சித்துகளை ஓரம் கட்டி வை என்று கூறுகிறது.

“சுடர் விட்டு உளன் எங்கள் ஜோதி” என்று அறுதியிட்டு உறுதி கூறுகிறார் அவர்.

அத்தோடு, “மா துக்கம் நீங்கல் உறுவீர்” என்று ஆறுதலும் கூறுகிறார்.

துக்கம் நீங்க என்ன ஐயன்மீர், வழி என்று சம்பந்தரைக் கேட்க வாய் திறக்குமுன்னர்

அவரே சிறிய யோசனை ஒன்றைக் கூறி இதற்கு முற்றுப் புள்ளியையும் வைத்து விடுகிறார்.

அவரது மாபெரும் ரகசிய உரை இது தான்: “மனம் பற்றி வாழ்மின்!”

அது என்ன மனம் பற்றி வாழ்வது? அதன் பயனை நான்கடிப் பாடலில் நான்காவது அடியில் கூறி விடுகிறார் இப்படி:-

சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்மின்களே!

மனம் பற்றி வாழ்ந்தால் இறையைச் சார்ந்து விடலாம்.

நான்கு அடிகளில் நான்கு கோடி அறிஞர்கள் சேர்ந்து நான்கு யுகங்கள் யோசித்தாலும் கூற முடியாத விஷயத்தை சம்பந்தர் எளிய தமிழ்ப் பாடல் ஒன்றில் கூறி விடுகிறார். (மூன்றாம் திருமுறை வாழ்க அந்தணர் எனத் தொடங்கும் பதிகத்தில் ஐந்தாம் பாடல் காண்க)

appar2

எத்தனை யோசனைகள்!

மனம் பற்றி வாழ்வது பற்றி மண்டை குடைகிறது!

கங்கை செல்க, காவிரியில் நீராடுக, குமரித் துறையில் குளிக்கவும் என்போர் ஒரு புறம்!

சாஸ்திரம் ஓது, அனைவருக்கும் கொடு, யாரும் அறிய முடியாத எட்டும் இரண்டும் பற்றி எட்டு மணி நேரம் பேசுமளவு தெரிந்து கொள் என்போர் இன்னொரு புறம்!

வேதம் ஓது, யாகம் செய். நீதி நூல் நித்தம் பயில் – இது சிலரின் அறிவுரை; காலை நீராடு; கானகம், நாடு ஆகியவற்றில் திரிந்து அலை; ஊனை ஒழி; வேடம் பூண்டு குழுவில் சேர்; நோன்பு நோற்கவும்; பட்டினி கிட; இதுவும் சரிப்படவில்லையா?

இன்னும் இருக்கிறது யோசனை; கோடி தீர்த்தம் ஒன்றாய்க் கலந்து குளி தவம் செய்!

அப்பப்பா, எத்தனை குழப்பம். எத்தனை நூல்கள்; எத்தனை அறிஞர்கள்; எத்தனை யோசனைகள்!

இந்த யோசனைகள் அனைத்தையும் தன் லாபரட்டரிக்கு எடுத்துச் செல்கிறார் அரிய தெய்வ புருஷர் ஒருவர். அவர் யார்?

அப்பர்!

டெஸ்ட் டியூபில் நமக்காக அனைத்து யோசனைகளையும் போட்டு அலசி ஆராய்கிறார்.

விடைகளைத் தர தமிழே உகந்தது என்பது அவரது முடிவு. நான்கு நான்கு அடிகளில் உண்மைகளைப் பிட்டுப் பிட்டு வைக்கிறார்; நாம் வியக்கிறோம்.

மனம் பற்றி வாழும் அரிய ரகசியக் கலை தெரிந்து விடுகிறது அவரின் பாடல் மூலமாக. மேலே சொன்ன கங்கை காவிரி ஆடல், வேதம் ஓதல், யாகம் செய்தல் இத்யாதி யோசனைகள் அனைத்தும் நல்லவையே! ஆனால் அவை பலன் அளிக்க வேண்டுமெனில் மனம் பற்றி வாழ வேண்டும் என்ற ஞான சம்பந்தரின் யோசனைக்கு அவர் ஆதரவு தெரிவிக்கிறார்.

கங்கை ஆடில் என்? காவிரி ஆடில் என்? எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே

பட்டர் ஆகில் என்? சாத்திரம் கேட்கில் என்? இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே

வேதம் ஓதில் என்? வேள்விகள் செய்யின் என்? ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே

காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என்? ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே!

கானம் நாடு கலந்து திரியில் என்? ஞானன் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே!

கூட வேடத்தர் ஆகிக் குழுவில் திரியில் என்? அம்பலக்கூத்தனைப் பாடலாளர்க்கு அல்லால் பயன் இல்லையே!

நன்று நோற்கில் என்? பட்டினி ஆகில் என்? என்றும் ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே!

கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை ஆடினாலும் அரனுக்கு அன்பு இல்லையேல் ஓடும் நீரினை ஓட்டைக் குடத்து அட்டி மூடி வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே!

நல் தவம் செய்து வருந்தில் என்? ஆர் கழல் சேவடி பற்று இல்லாதவர்க்குப் பயன் இல்லையே!

ஆஹா! அப்பரின் பத்துப் பாடல்களை ஓதி உணர்ந்த பின்னர் எப்படி இத்தனை நாளும் ஓடும் நீரை ஓட்டைக் குடத்தில் அடைத்து மூடி மூடி வைக்கப் பார்த்து முழித்து முழித்து பேதையாக இருந்திருக்கிறேன் என்பது நன்கு தெரிகிறது!

அவரது லாபரட்டரி ரிஸல்ட் சுருக்கமானது; சுவையானது.

உள்ளத்தில் மகிழ்ந்து உள்கு, எப்போதும் எங்கும் இருக்கும் ஞானனைப் பாடு; நினை; அவன் சேவடியைப் பற்று.

 

மனம் பற்றி வாழ்மின் என்ற ஞானசம்பந்தரின் வாக்கை தன் சோதனைச்சாலையில் சோதித்து நமக்காக அப்பர் அருள் விருந்து படைக்கிறார். தமிழில் தவிர இப்படிப்பட்ட அரிய பாடல்கள் வேறு எந்த மொழியிலாவது உண்டா?

இனி ஏதுக்கள் எதற்கு? மிக்க சோதனைகள் எதற்கு. மனத்தில் இறைவனைப் பற்றி வாழ்வோம். உள்ளுக்குள் உறையும் உத்தமனை எப்போதும் நினைத்து வாழ் என்பதே சாரம்!

மாம் ஏகம் சரணம் வ்ரஜ; (என் ஒருவனையே சரணடை; நான் உன்னை அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன் – கீதையில் கண்ணன்)

******************