
Written by London swaminathan
Date: 6 September 2016
Time uploaded in London: 19-16
Post No.3128
Pictures are taken from various sources; thanks.
வாதாபி கணபதிம் பஜே ஹம்
வாதாபி கணபதிம் பஜே

முதல் மூன்று பகுதிகளில் பல புகழ்பெற்ற பிள்ளையார்களைக் கண்டோம்; பிள்ளையார் பற்றி ஏராளமான வியப்பான, அதிசயமான செய்திகள் உண்டு. கணேசனைப் பற்றி ஒரு என்சைக்ளோபீடியா – கலைக் களஞ்சியமே தேவை; இதுவரை அது இல்லாதது ஒரு குறையே. எல்லாப் பிள்ளையார்களையும் விட அதிக வரலாற்றுச் சிறப்புமிக்க பிள்ளையார் வாதாபி கணபதி; முத்து சுவாமி தீட்சிதரின் அற்புதமான சம்ஸ்கிருத கீர்த்தனையில் இடம் பெற்றவர் வாதாபி கணபதி; நரசிம்மவர்மனின் வெற்றிக்குக் காரணமானவர் வாதாபி கணபதி.
சுருக்கமாக காண்போம்:– இரண்டாவது புலிகேசி என்னும் சாளுக்கிய மன்னன் தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்திலிருந்து ஆண்ட மகேந்திர பல்லவ வர்மனைத் தோற்கடித்தான். அவனது மகன் பெயர் நரசிம்ம வர்மன். பெயருக்கு ஏற்ற நர சிங்கம்தான் அவன். தந்தையைத் தோற்கடித்த புலிகேசியைப் பழிவாங்க பரஞ்சோதி என்ற கமாண்டரின் (படைத் தளபதி)
தலைமையில் ஒரு படையை கர்நாடகத்திலுள்ள பாதாமிக்கு (வாதாபி) அனுப்பினான். அவர் சாளுக்கியப் படைகளைச் சிதறடித்தார். அங்கே பல்லவர்களின் கொடி பறக்கத் துவங்கியது. அப்போது அந்த நகரிலிருந்த கணபதியையும் எடுத்து வந்து தனது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். அதற்கு வாதாபி கணபதி என்று பெயர்.

ஆயினும் நரசிம்ம வர்மனின் காலத்துக்கு முன்னரே கணபதி வழிபாடு பிரபலமானது சம்பந்தரின் தேவாரப் பாடலாலும் (பிடி அதன் உரு உமை கொள மிகு கரி அது), சா. கணேசனின் பிள்ளையார்பட்டி ஆய்வாலும் (பகுதி மூன்றில் காண்க), காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் திருவாரூர் கணபதி பற்றி ஆற்றிய சொற்பொழிவாலும் தெளிவாகிறது.
எப்படியும் வரலாற்று ஆய்வுக்கும் வழிபாட்டுக்கும் பயன்படுகிறார் வாதாபி கணபதி.
வாதாபியை எப்படி அகத்தியர் வெற்றிகண்டாரோ அப்படி நரசிம்ம வர்மன் வாதாபியை வென்றான் என்று பல்லவர் கல்வெட்டுகள் புகழாரம் சூட்டுகின்றன (வாதாபி ஜீர்ணோ பவ: கதையை தனியாக முன்னரே கொடுத்துள்ளேன்) இந்த வாதாபி கணபதி கதையை முத்துசாமி தீட்சிதரும் தனது ஹம்சத்வனி ராக கீர்த்தனையில் சொல்லுவது சிறப்புக்குரியது.
எப்படியும் வரலாற்று ஆய்வுக்கும் வழிபாட்டுக்கும் பயன்படுகிறார் வாதாபி கணபதி.
திருவாருருக்கு அருகில்தான் திருச்செங்காடங்குடி உளது. நரசிம்மவர்மனின் படைத் தளபதியாக இருந்த பரஞ்சோதிதான் பெரிய புராணத்தில் சிறுத்தொண்ட நாயனாராகத் தோன்றுகிறார். அவருடைய சிவபக்தியை அறிந்த பல்லவ மன்னன் அவரைப் போற்றி வணங்கி படைப் பொறுப்புகளிலிருந்து விடுவித்து இறைப்பணியைத் தொடர வேண்டுகிறான். அவருடைய ஊருக்கு கணபதீச்வரம் என்றும் பெயர்.
வெள்ளை விநாயகர்
திருவலஞ்சுழி என்னும் தலத்தில் இவர் கோவில் கொண்டுள்ளார்.
வெள்ளை என்பதை சம்ஸ்கிருதத்தில் ஸ்வேத என்பார்கள். இதிலிருந்துதான் WHITE ஒய்ட் (SWHITE= white) என்ற ஆங்கிலச் சொல்லும் உதித்தது. இந்த வெள்ளை விநாயகர் வழக்கத்திற்கு மாறான பொருளால் செய்யப்பட்டதால் அபிஷேக ஆராதனை யின்றி சிறப்புச் சாத்துமுறையுடன் வழிபடப்படுகிறார். சிற்ப வேலைப்படுமிக்க பலகணி வழியாக இவரைத் தரிசிக்கலாம்.

Final touches given to Ganesh in Mumbai
படிக்காசு விநாயகர்
பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும் சம்பந்தரும், திருவீழிமிழலையில்
“வாசி தீர வே காசு நல்குவீர்” — என்று சிவ பெருமானை நோக்கிப் பதிகம் பாடினர். நாள்தோறும் கோவில் படியில் ஒரு தங்கக் காசு வீதம் வந்தது. அங்கிருக்கும் பிள்ளையார் படிக்காசு பிள்ளையார் ஆவார்.
இவர் பேரளத்திலிருந்து நாலு மைல் தொலைவில் கோவில் கொண்டுள்ளார். தமிழ் அறிஞர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையால் துதிக்கப் பெற்றவர்:-
கடிக்காசு மதியொரு அணி
கடவுள் எங்கள்
குடிக்காசு தவிர்த்து அருள்
செய் படிக்காசு மழகளிற்றை
குறித்து வாழ்வாம்
எனப் போற்றப்படுவார்.

ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெருவில் உள்ள எல்லாப் பிள்ளையார்களின் கதைகளைத் தொகுத்தால் ஒரு கலைக் களஞ்சியம் வெளியிடலாம். இதே போல மஹராஷ்டிரத்திலும் எட்டு புகழ்பெற்ற விநாயகர் கோவில்கள் உள. அவைகளைப் பின்னொரு சதுர்த்தியில் தரிசிப்போம்.
–சுபம்–
You must be logged in to post a comment.