வள்ளுவனுக்கும் கம்பனுக்கும் பிடித்த அவதாரம்! (Post No.3630)

Written by London swaminathan

 

Date: 12 FEBRUARY 2017

 

Time uploaded in London:- 14-12

 

Post No. 3630

 

 

Pictures are taken from various sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

காலினால்  உலகை அளந்தான் விஷ்ணு!

வாலினால் உலகை அளந்தான் அனுமன்!

கம்பன் புகழ் மாலை

 

திருமாலின்  பத்து அவதாரங்களில் வாமனாவதாரத்தை வள்ளுவன் பாடி இருக்கிறான் (குறள் 610). வேதங்களில் கூட இந்த “மூன்றடியால் உலகளந்த கதை” உள்ளது. கம்பனோவெனில் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வாமன/ த்ரிவிக்ரம அவதாரத்தைப் பாடி விடுகிறான்.

 

விஷ்ணு எடுத்த 24 அவதாரங்களை பாகவதம் முதலியன குறிப்பிடுகின்றன. பர்த்ருஹரி என்பவர் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே, தசாவதாரத்தைக் குறிப்பிடுகிறார். அவருக்குப் பின்னர் வந்த ஜெயதேவர், கீத கோவிதம் என்னும் நூலில் பத்து அவதாரங்களில் புத்தரையும் ஒருவராகச் சேர்த்து ஒரு புரட்சி செய்தார். அதாவது புத்தமதத்தை, இந்துமதம் ஜீரணம் செய்ய, கபளீகரம் செய்ய உதவினார்.

 

மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு (610)

 

“தன் அடியினால் உலகத்தை அளந்த இறைவன் தாவிய

நிலப்பரப்பு முழுவதையும், சோம்பல் இல்லாத மன்னன் ஒரு சேர அடைதல் கூடும்.”

 

ஆழ்வார்கள் பல இடங்களில் வாமனனை, த்ரிவிக்ரமனைப் பாடினாலும் கம்பன் பாடும் இடம் இன்னும் பொருத்தமாகவும், அழகாகவும் இருக்கிறது.

 

திருமாலின் காலும் அனுமானின் வாலும்

 

நாலினொடு உலகம் மூன்றும் நடுக்கற அடுக்கி நாகர்

மேலின்மேல் நின்ற காறும் சென்ற கூலத்தின், “விண்டு

காலினால் அளந்த வான முகட்டையும் கடக்கக்கால

வாலினால் அளந்தான்” என்று வானவர் மருளச் சென்றான்

–கடல்தாவு படலம், சுந்தர காண்டம்

 

பொருள்:-

தேவர்களுடைய, ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட உலகங்களின் எல்லையை, திருமால் தனது ஒற்றைக் காலினால் அளந்த வான்முகட்டை,  7 உலகங்களும் அஞ்சி நடுங்கும்படி அனுமான் தனது வாலினால் அளந்துவிட்டான் என்று தேவர்கள் வியப்படைந்தனர். அனுமனின் வால், எமனுடைய பாசக் கயிறு போல இருந்தது. வானத்தின் மீது வாலைத் தூக்கிக்கொண்டு ஆஞ்சநேயன் பறந்தான்.

 

 

கிஷ்கிந்தா காண்டத்தில், மயேந்திரப் படலத்திலும் இதுபற்றிக் கம்பன் பேசுவான்:

 

பொருவரு வேலை தாவும் புந்தியான் புவனம் தாய

பெருவடிவு உயர்ந்த மாயோன் மேக்கு உறப் பெயர்ந்த தாள் போல்

உரு வறி வடிவின் உம்பர் ஓங்கினன் உவமையாலும்

திருவடி என்னும் தன்மை யாவர்க்கும் தெரிய நின்றான்

 

பொருள்:-

ஒப்புவமை இல்லாத கடலைத் தாண்டும் எண்ணம் கொண்ட அனுமன், மூன்று உலகங்களையும் தாண்டிய, வியக்கத்தக்க குணம், செயல்களை உடைய திருமாலின் திருவடியைப் போல, வானளாவ உயர்ந்தான். இதனால் உவமையாலும் திருவடி என்கின்ற தனது திருநாமத்தின் இயல்பும் யாவர்க்கும் விளங்க நின்றனன் அனுமன்.

ரிக்வேதத்திலும் (1-22-17;1-155-40) இக்கதை குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

 

திருமால் உலகளந்த கதையை சைவப் பெரியார்களும் பாடிப்பரவி இருக்கின்றனர்.

மண்ணும் விண்ணும் தாய அடி அளந்தான் (சம்பந்தர் தேவாரம். தூங்கானை மாடம் 9)

 

தாள்பரப்பி மண் தாவிய ஈசனை (திருவாய் மொழி 3-3-11)

 

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி (ஆண்டாள் திருப்பாவை 3)

 

–Subham–