

WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 4 SEPTEMBER 2019
British Summer Time uploaded in London –7-11
Post No. 6975
Pictures are taken from various sources; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 11,000.
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்திற்கு ச.நாகராஜன் அளித்த பேட்டி
வாழ்க பாரதம்! வெல்க பாரதம்!
ச.நாகராஜன்


ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் சுதந்திர தினத்தையொட்டி 14-8-2019 அன்று காலை 10 மணிக்கு ஒரு விசேஷ நிகழ்ச்சியை ஒலிபரப்பியது.
இந்தியா குறித்து பெருமிதம் கொள்ளக்கூடிய விஷயங்கள் யாவை என்று பேட்டி எடுத்தவர் கேட்க அதற்கு ச.நாகராஜன் அளித்த பதில் ஒலிபரப்பப்பட்டது.
அன்பர்களுடன் அந்த உரையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன் :
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா தான். 81.5 கோடி மக்கள் வாக்காளர்களாக இங்கு உள்ளனர்.
உலகின் அதி இளமையான நாடு இந்தியா தான். சுமார் 130 கோடி என்று உள்ள இன்றைய ஜனத்தொகையில் சுமார் 60 கோடி பேர்கள் 25 வயது முதல் 29 வயது வரை ஆன இளைஞர்களே. ஆக இளைஞர்கள் அதிகம் கொண்ட ஒரே நாடாக இந்தியா இலங்குகிறது.
இந்த இளமைத் துடிப்புடன் அறிவியலில் அது பாய்ச்சல் போட்டு முன்னேறுகிறது.


செவ்வாய் நோக்கிய பயணத்தில் தனது முதல் முயற்சியிலேயே அது வெற்றி பெற்றது குறிப்பிடத்தகுந்த ஒரு பெருமையான விஷயம்.
மங்கள்யான் -1 இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. ஆசியாவில் முதலாவதாக செவ்வாய்க்குக் கலம் அனுப்பிய நாடு; உலகில் நான்காவதாக அனுப்பிய நாடு என்ற பெருமை நம்மைச் சேர்கிறது.
5-11-2013 அன்று செவ்வாயை நோக்கி நமது கலம் கிளம்பியது. சோவியத், அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று நாடுகளுடன் சேர்ந்து விட்டது இந்தியா இந்த செவ்வாய் பயணத்தின் மூலமாக.
அடுத்து சந்திரயான் – 1 22, அக்டோபர் 2008இல் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. முதன் முதலாக சந்திரனில் நீர் இருக்கிறது என்ற செய்தியை இந்தக் கலத்தின் மூலமா 2009ஆம் ஆண்டு கண்ட நமது விஞ்ஞானிகள் அதை உலகிற்கு அறிவித்தனர்.
இதைச் சரிபார்க்கத் தனது கலத்தை ஏவிய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா அது உண்மையே எனக் கண்டு வியந்து அதை உலகிற்கு அறிவித்தது.
சந்திரனுக்குக் கலம் அனுப்பியதன் மூலமாக அமெரிக்கா, சோவியத், சீனா ஆகிய நாடுகள் வரிசையில் இந்தியா சேர்ந்து விட்டது.
இப்போது சந்திரயான் – 2 விண்ணில் 22 ஜூலை 2019 அன்று ஏவப்பட்டுள்ளது. இதில் உள்ள விக்ரம் என்ற லேண்டர் (Lander) செப்டம்பர் முதல் வாரத்தையொட்டி தரை இறங்கி அனைத்தையும் சரிபார்த்த பின்னர் ப்ரக்யான் என்ற நமது ரோவர் சந்திரப் பரப்பில் ஊர்ந்து செல்லும்; ஆய்வுகளை நடத்தும். இது பெருமைக்குரிய ஒரு பெரிய விஷயம்.


விண்ணில் பறக்கும் ஒரு விண்கலத்தை மீண்டும் தேவையெனில் தரையிறக்கும் ஸ்பேஸ் காப்ஸ்யூல் ரிகவரி எக்ஸ்பெரிமெண்டையும் (Space Capsule Recovery Experiment) இந்தியா செய்து வெற்றி பெற்றிருக்கிறது.
ஒரே ராக்கெட்டில் 104 சாடலைட்டுகளை விண்ணில் ஏவி இந்தியா சாதனை படைத்திருக்கிறது. பல நாடுகளும் தங்கள் சாடலைட்டுகளை விண்ணில் ஏவ இந்தியாவை நாடி வருகின்றன.
அடுத்து உலகின் பொறியியல் வல்லுநர்களில் அதிகமான பேரை உருவாக்குவது இந்தியாவே என்பது ஒரு மகிழ்ச்சி தரும் விஷயம்.
அனைத்துத் தொழில்நுட்பங்களிலும் இவர்கள் முன்னணியில் நிற்கின்றனர்.
இதற்குச் சான்றாக மல்டி நேஷனல் கம்பெனிகளையும் அதி நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள உலகின் தலை சிறந்த கம்பெனிகளையும் வழி நடத்தும் தலைமைப் பொறுப்பில் இந்தியர்களே இருக்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டலாம்.
Microsoft, Google,Pepsico,AdobeSystem, Mastercard உள்ளிட்ட பல நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்க்ள் இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கின்றனர்.
இந்தியா உலகின் மூன்றாவது பலம் பொருந்திய இராணுவத்தைக் கொண்டுள்ளது. ஆனால் எந்த ஒரு நாட்டையும் அது தோன்றிய காலத்திலிருந்து தாக்கியதில்லை, ஆக்கிரமித்ததில்லை என்பது மனதில் கொள்ள வேண்டிய ஒரு பெரிய விஷயம்.
தற்காப்புக்கென இருக்கும் நமது ராணுவத்தை ஐ.நாவின் அமைதி காக்கும் படையிலும் நமது நாடு ஈடுபடுத்தியுள்ளது.
அதிக துருப்புகளை ஐ.நாவின் பணிக்கென அனுப்பிய இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இலங்குகிறது.
தகவல் தொடர்பில் அதிசயிக்கத்தக்க முன்னேற்றம் கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இதை நிரூபிப்பது நமது இன்ஸாட் அமைப்பு. (Insat System).
உலகின் அறிவியல் முன்னேற்றத்திற்கு நமது விஞ்ஞானிகள் பெரிதும் காரணமாக அமைந்திருக்கின்றனர்.
சர் சி.வி.இராமன், ஜெகதீஷ் சந்திர போஸ், சத்யேந்திரநாத் போஸ், சீனிவாச இராமானுஜன், எஸ்.சந்திரசேகர், ஏ.பி.ஜே.அப்துல்கலாம் உள்ளிட்டவர்களின் பங்களிப்பு அறிவியல் வளர்ச்சியில் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.
இந்தியாவின் கும்பமேளா திருவிழா உலகின் ஒரு அதிசயம். குறிப்பிட்ட நாட்களில் தாமாகவே ஒருங்கு சேர்ந்து வழிபட்டு அமைதியாகத் தாமாகவே கலைந்து செல்லும் பெரும் மக்கள் திரளை இது போல உலகில் வேறெங்கும் காண முடியாது.
இது மட்டுமல்ல, பொழுது போக்குத் துறையில் உலகில் மிக அதிகமாக திரைப்படங்களைத் தயாரித்து வழங்குவது இந்தியாவே.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
இப்படிப்பட்ட நாடு வெகு விரைவில் வல்லரசாகத் திகழப்பொவது மட்டுமல்ல, உலகிற்கே வழிகாட்டும் நல்லரசாகவும் திகழப்போகிறது.
இதில் வாழ்வது பெருமைக்குரிய ஒரு விஷயம். வாழ்க பாரதம்! வெல்க பாரதம்!!
நன்றி, வணக்கம்.
***

–subham–