
PICTURE POSTED BY LALGUDI VEDA
WRITTEN BY S NAGARAJAN
Date: 18 October 2018
Time uploaded in London – 6-19 AM (British Summer Time)
Post No. 5553
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.
வைச்ச பொருள்?! – 3
ச.நாகராஜன்
6
ஒருவன் வாழ்க்கையில் எதைக் காக்க வேண்டும்?
‘காக்க பொருளா அடக்கத்தை’ என்கிறார் வள்ளுவர்.
பொருளாக அடக்கத்தைக் காக்க வேண்டும் என்று அவர் சொல்லும் போது நல்ல குணமாக, சிறந்த செல்வமாக என்பன உள்ளிட்ட பல அர்த்தங்களை நாம் பெறுகிறோம்.
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு -குறள் 122
இதில் ஆக்கம் என்ற சொல்லை அர்த்தத்துடன் புகுத்தும் வள்ளுவர் உயிருக்கு அடக்கத்தை விடச் சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை என்கிறார்.
கோபத்தை ஒரு பொருளாக, தனது அதிகாரத்தைக் காட்ட வல்லது என்று எண்ணும் ஒருவனது கேடு நிச்சயம். அது எப்படி எனில் நிலத்தை ஓங்கிக் கையால் அறைந்தவனின் கதி தான் அவனுக்கு என்கிறார் வள்ளுவர்.
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் ̀கைபிழையா தற்று – குறள் 307
கோபம் இல்லாமல் அடக்கத்துடன் ஒருவன் இனிய சொற்களைச் சொல்லி வந்த போது ஒரு தீச்சொல்லை – சுடு சொல்லை – மனம் புண்பட வைக்கும் ஒரு சொல்லைச் – சொன்னால் கூட மற்ற எல்லாச் சொற்களினால் உண்டாகும் நற்பயன் அனைத்தும் தீயதாகவே முடியும்.
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும் – குறள் 128

APPAR TEMPLE PICTURE BY LALGUDI VEDA
7
அடுத்து அரசாட்சி செய்வோருக்கு பொருள் செயல் வகை பற்றி எடுத்துக் கூறுகையில் அவர் உறு பொருள், உல்கு பொருள், தெறு பொருள் பற்றிக் கூறுகிறார்.
உறு பொருள் என்பது அரசுக்கு வந்து சேரும் இறை.
உல்கு பொருள் என்பது அரசு சுங்கமாக எடுத்துக் கொள்ளும் பொருள்.
தெறு பொருள் என்பது பகை மன்னரை வென்றவுடன் அவர்கள் செலுத்தும் திறை அல்லது கப்பம் என்பதாகும்.
இந்த மூன்றும் வேந்தனுக்கான பொருள்.
இங்கு பாரதியாரின் வார்த்தைகளைச் சற்று நோக்கலாம்,
தந்த பொருளைக் கொண்டே ஜனம் தாங்குவர் –
உலகத்தில் அரசரெல்லாம் – அந்த
அரசியலை இவர் அஞ்சு தரு பேயென்றே நினைத்திடுவார் நெஞ்சு பொறுக்குதிலையே என்றார் அவர்
ஜனத்தைப் பரிபாலனம் செய்ய வேந்தனுக்குத் தேவையான பொருளை ஜனங்களே தருவர். நல்ல அரசு அமையின் நலத்திட்டங்கள் மூலமாக அது அவர்களையே மீண்டும் வந்தடையும்.
உறு பொருளும் உல்கு பொருளும் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள் – குறள் 756
அத்துடன் இன்னும் ஒரு அறிவுரையை அவர் தருகிறார்:
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள் – குறள் 752
மிக அருமையான இந்தக் குறளுக்கு ஏராளமான விளக்கங்கள் உண்டு. இரண்டை மட்டும் இங்கே பார்க்கலாம்.
பொருள் அல்லவரை – ஒரு பொருட்டாக மதிக்கத் தகாதவரையும்
பொருளாகச் செய்யும் – மதிப்புடையவராக ஆக்கும்
பொருளல்லது -பொருள் அல்லாமல்
இல்லை பொருள் – வேறு சிறப்புடைய பொருள் எதுவும் இல்லை!

AUTHOR OF TAMILVEDA-TIRUKKURAL- HINDU SAINT TIRUVALLUVAR
இன்னொரு விளக்கம் : பொருளாகப் போற்ற முடியாத தகுதி அற்றவரைக் கூட ஒரு மதிப்புடையவனாக ஆக்குவது செல்வத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை!
இதே பொருள் செயல் வகை அதிகாரத்தில் வள்ளுவர் ஒண்பொருள் பற்றியும் எண்பொருள் பற்றியும் குறிப்பிடுகிறார்.
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு – குறள் 760
அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு பேறுகளை – தார்மார்த்த காம மோக்ஷம் என்ற நான்கு பேறுகளை – ஹிந்து மதம் எடுத்துக் கூறுகிறது.
சிறந்ததாகிய பொருளை ஒருவன் ஈட்டி விட்டால் அவன் எளிதாக அறத்தையும் இன்பத்தையும் அடைவான் என்பது இக்குறளின் பொருள்.
வடுவிலா வையத்து மன்னிய மூன்றனுள் நடுவணது எய்த இருதலையும் எய்தும் என்கிறது நாலடியார்.
அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றனுள் நடுவில் இருக்கும் பொருளை அடைந்து விட்டால் அதன் மூலம் அறத்தைச் செய்து அதை அடையலாம்; இன்பத்தையும் அடையலாம்.
8
இப்படிப் பொருளின் பல்வேறு வகைகளைச் சொல்லி வரும் வள்ளுவர் செம்பொருள், மெய்ப்பொருள் பற்றிச் சொல்வதைக் கேட்டால் அப்பரின் வைச்ச பொருள் பற்றி அறிந்து விடலாம்.
ஒருவரை ஒருவர் சேரவிடாமல் வெறுப்பை வளர்ப்பவர் பண்பில்லாதவர்கள் (குறள் 851இன் பொருள் இது)
மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவினவர் (குறள் 857)
மாறுபாட்டை உண்டாக்க நினைக்கும் தீய அறிவினை உடையவர்கள் வாழ்வின் வெற்றியைத் தரும் அறநூல்களின் மெய்ப்பொருளைக் காண மாட்டார்கள்.
அட,மெய்ப்பொருள் என்று ஒரு வார்த்தையை இங்கு வள்ளுவர் சொல்கிறாரே!
மெய்ப்பொருளா? அதை அறிந்தால் என்ன பயன்?
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி – குறள் 356
கல்வி கேள்விகளால் மெய்ப்பொருளை உணர்ந்து கொண்டவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறந்து துன்பம் அடையா நெறிதனை அடைவார்கள்!
ஆகவே எப்பொருள் எத்தகைய தன்மை வெளியில் கொண்டிருப்பினும் அதை நன்கு ஆராய்ந்து அதன் உண்மைப் பொருளைக் காண வேண்டும்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு – குறள் 355
வைத்த பொருள் என்று அப்பர் கூறியதன் உள்ளர்த்தம் பத்திரமாகப் பாதுகாக்கும் இடத்தில் வைக்கப்பட்ட வைப்புழியா?Safe Depositஆ?
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப்புழி (குறள் 226)
வறியவரின் பசிப்பிணியைத் தீர். அவர்கள் வயிற்றில் நீ இடும் உணவு உனக்கு பிற்காலத்தில் உபயோகப்படும் வைப்புழி – அதாவது Safe Deposit !
அட,அப்பர் வைத்த பொருள் என்று கூறும் போது நமக்கு ஒரு சேஃப் டிபாஸிட்டைத் தான் சொல்கிறாரோ?
இன்னும் பார்ப்போம்!
***