ஹிட்லரின் சித்திரவதை முகாமில் புதிய உளவியல் சிகிச்சை முறை (Post No.5400)

WRITTEN BY S NAGARAJAN

Date: 7 SEPTEMBER 2018

 

Time uploaded in London – 6-04 AM (British Summer Time)

 

Post No. 5400

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

டைரக்டர் திரு கே.பாக்யராஜ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் வார இதழ் பாக்யா. அதில் 7-9-2018 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள (எட்டாம் ஆண்டு இருபத்தியேழாம்) கட்டுரை

 

ஹிட்லரின் சித்திரவதை முகாமில் புதிய உளவியல் சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தவர்!

ச.நாகராஜன்

 

 

வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதைக் கண்டு பிடிக்க முயன்று அதைப் பற்றிய உளவியல் ஆய்வில் ஈடுபட்டு பிரபலமான புத்தகத்தை எழுதியவர் விஞ்ஞானி விக்டர் ஃப்ராங்க். (Viktor Emil Frankl பிறப்பு 26-3-1905 மறைவு 2-9-1997) ஆஸ்திரியாவைச் சேர்ந்த யூதர் இவர்

ஆனால் அநியாயமாக ஹிட்லரின் சித்திரவதை முகாமிற்கு அனுப்பப்பட்ட லட்சக்கணக்கானோருள் இவரும் ஒருவர்.

இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது போலந்தை திடீரென்று ஆக்கிரமித்த ஹிட்லர் அங்கு சித்திரவதை முகாம் ஒன்றை ஏற்பாடு செய்தான். இந்த முகாம் அஸ்விட்ஸ் சித்திரவதை முகாம் (Auschwitx Concentration Camp) என அழைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரண்டாம் முகாம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு 45 துணை முகாம்கள் இருந்தன.

 

 

இந்த முகாம்களுக்கு சுமார் 13 லட்சம் பேர்கள் அனுப்பப்பட்டனர். அதில் 11 லட்சம் பேர்கள் கொல்லப்பட்டனர். 1940இல் மே மாதம் கைதிகள் இங்கு கொண்டு வருவது ஆரம்பிக்கப்பட்டது. ஏராளமான புகைவண்டிகள் இவர்களை ஏற்றி வந்தன. இவர்களில் 90 சதவிகிதம் பேர் யூதர்கள். செப்டம்பர் 1941இல் ஆரம்பித்து கூட்டம் கூட்டமாக கைதிகள் விஷவாயு சேம்பருக்குள் அனுப்பப்பட்டு கொல்லப்பட்டனர்.

 

 

செங்கல்லினால் ஆன கட்டிடம் ஒன்றில் அவர்களை அடைத்து காற்றுப் புகாதபடி ஜன்னலை மூடி விட்டு, சயனைடை அடிப்படையாகக் கொண்ட ஜிக்லான் பி (Zyklon B)  என்ற விஷ வாயுவை நிரப்பி இவர்கள் கொல்லப்பட்டனர். இது தவிர, பல்லாயிரம் பேர்கள் உணவின்றி வாடி இறந்தனர். பலர் முகாம்களின் மோசமான நிலையால் வியாதிகளால் பீடிக்கப்பட்டு இறந்தனர். இங்கிருந்து 802 கைதிகள் தப்ப முயன்றனர். ஆனால் வெற்றிகரமாகத் தப்பியவர்கள் 144 பேர்களே.

 

 

அவர்கள் மூலமாகத் தான் இந்தக் கொடூரமான சித்திரவதை முகாம் பற்றி உலகம் முழுமையாக அறிந்தது.

 

உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் சோவியத் படைகள் அஸ்விட்ஸை நெருங்கவே கைதிகளை போலந்தின் மேற்கே அனுப்பி அவர்களின் கடைசி யாத்திரையைத் தொடங்கி வைத்தது நாஜி ஜெர்மனி. எஞ்சி இருந்தோர் 1945 ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.

இப்படி விடுதலையானவர்களில் ஒருவர் தான் விஞ்ஞானி விக்டர் ஃப்ராங்க்.

 

 

முதலில் வியன்னாவில் மன நல  மருத்துவராக ஒரு யூத ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தார் அவர். போர் மேகம் ஆஸ்திரியாவைச் சூழவே அமெரிக்கா தனது விசாவை வழங்கி அவரை அமெரிக்கா வருமாறு அழைத்தது. ஆனால் தனது வயதான பெற்றோரைக் கருத்தில் கொண்டு வியன்னாவிலேயே வசித்து வந்தார் அவர். திடீரென்று அவரையும் குடும்பத்தினரையும் கைது செய்தது நாஜிப் படை. குடும்பத்தினர் கொல்லப்பட்டனர்.

 

 

அவர் நான்கு சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார். அவரது திறமையைக் கருத்தில் கொண்ட முகாம் அதிகாரிகள் அவரை கைதிகளுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை சொல்லப் பணித்தனர். அங்கு ஏற்பட்ட அனுபவங்களின் விளைவாக அவர் பல புதிய உண்மைகளைக் கண்டார். அந்த உண்மைகளை இருபதாம் நூற்றாண்டின் பிரபலமான உளவியல் புத்தகமான ‘மேன்ஸ் செர்ச் ஃபார் மீனிங் (Man’ s Search for Meaning) என்ற புத்தகத்தில் வெளியிட்டார்.

முக்கியமாக தற்கொலைக்கு முயன்றவர்களை அழைத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்துவதில அவர் வல்லவரானார்.

 

 

சித்திரவதை முகாமில் அவருக்கு அடுத்தாற்போல உட்கார்ந்திருந்த ஒரு கைதி வேடிக்கையாக அவரிடம், “இந்த நிலையில் நமது மனைவிமார் நம்மைப் பார்த்தால் என்ன ஆகும்? என்று சொல்லிச் சிரித்தார்.

உடனே ஃப்ராங்க் வானத்தை அண்ணாந்து பார்த்தார். அங்கு மேகக் கூட்டத்தில் அவரது அன்பு மனைவியின் முகம் கள்ளங்கபடமற்றுத் தெரியவே அவரது மனதில் ஒரு புது உத்வேகம் எழும்பியது.

‘உங்கள் அன்புக்குரிய மனைவியை அதிகம் நேசியுங்கள்; உங்களுக்கு வாழ்க்கையின் அர்த்தம் புரியும் என்கிறார் அவர்.

 

 

சித்திரவதை முகாம்களுக்கு வருவோர் பொதுவாக முதலில் எப்படியாவது யாராவது தம்மைக் காப்பாற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பர்.அடுத்த நிலையில் அது நடக்காது என்று தெரியும் போது உணர்ச்சி பூர்வமான மரணத்தை அடைகின்றனர். எப்படியோ உயிரோடிருந்தால் போதும் என்ற நிலை அது.நாளைக்கு மரணம் என்ற நிலையிலும் ஒரு துண்டு ரொட்டி இன்றைக்கு வேண்டும் என்ற அந்த நிலையைக் கடந்து மூன்றாம் நிலையில் விடுதலை என்ற நிலை ஏற்படும்.

 

 

இந்த மூன்று நிலைகளைக் கொண்ட முகாம் வாழ்வில் ஏற்படும் துன்பம் சொல்லவொண்ணாதது. அந்த துன்பத்தில் தான் தனது ஆராய்ச்சிக்கான விடையைக் கண்டார் ஃப்ராங்க்.

எவ்வளவு மோசமான நிலையிலும் கூட, சொல்லவொண்ணாத துன்பம் இருந்த போதும் கூட, உங்கள் அணுகு முறையை யாராலும் அடக்க முடியாது; அந்த அணுகுமுறை உங்களுக்குள்ள சுதந்திரம்; அதன் மூலம் வாழ்க்கையை முழுதுமாகப் புரிந்து கொள்ளலாம் என்கிறார் அவர்.

 

 

வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்று கேட்பதை விட வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணியும் நம்மை என்ன கேள்வி கேட்கிறது என்பதைச் சிந்தித்தாலேயே போதும் நம்முடைய வாழ்விற்கான அர்த்தம் புரிந்து விடும் என்பது அவரது சித்தாந்தம்.

சித்திரவதை முகாமிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் வெற்றிகரமான உளவியல் நிபுணராக அவர் பல்லாண்டுகள் பணி புரிந்தார். லோகோதெராபி  (Logotherapy) என்ற புதிய உளவியல் சிகிச்சை முறையை அவர் கண்டுபிடித்தார்.

 

 

வாழ்வில் ஏற்படும் துன்பங்களால் மனம் கலங்க வேண்டாம். அந்தத் துன்பமான வாழ்க்கை உங்களை என்ன கேட்கிறது என்பதை சிந்தியுங்கள்; பிரச்சினைகளிலிருந்து உங்களின் அணுகுமுறையால் மீளலாம் என்பது தான் அவர் உலகினருக்குத் தரும் புதிய சித்தாந்தம்.

உலகின் மகா கொடூரமான சித்திரவதை முகாமில் என்னென்ன நடந்தது என்பதை நேரடியாகப் பார்த்து அனுபவித்த விஞ்ஞானி என்ற முறையில் ஃப்ராங்க் உளவியல் சிகிச்சை உலகில் தனி இடத்தைப் பெறுகிறார்.

 

 

துன்பம் கண்டு கலங்க வேண்டாம்; வாழ்வின் அர்த்தத்தை அதிலிருந்து பெற்று சீராக வாலாம் என்பது அனைவருக்கும் ஒரு ஆறுதலான செய்தி தானே!

 

 

 அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஆலிவர் சாக்ஸ் (Oliver Wolf Sacks பிறப்பு 9-6-1933 மறைவு 30-8-2015)    பிரிட்டனைச் சேர்ந்த பிரபலமான மூளை இயல் நிபுணர். அறிவியல் வரலாற்று ஆசிரியர். அவரது ‘அவேகனிங்ஸ் (Awakenings) என்ற புத்தகம் சுவையான சம்பவங்களை உள்ளடக்கிய நூல்.இதனால் உத்வேகம் பெற்ற பென்னி மார்ஷல் என்ற அமெரிக்க டைரக்டர் இதே பெயரில் இதை 1990இல் இதை திரைப்படமாகப் பிடித்தார்.

கதை இது தான்:-

முதல் உலக மகா யுத்தத்தைத் தொடர்ந்து ஒரு புது விதமான வியாதி ஆரம்பித்தது. உயிருடன் இருந்த போதும்  தங்களின் பிரக்ஞையை இழந்து தூங்கிக் கொண்டே பல ஆண்டுகள் நடைப்பிணமாக பலர் வாழ்ந்துவந்தனர். இதைப் போக்க எந்த மருந்தும் இல்லாத நிலையில் சாக்ஸ் எல் டோபா (L Dopa) என்ற மருந்தைக் கொடுத்து அவர்களின் வியாதியைப் போக்கினார். தூக்கத்திலிருந்து விழித்த அவர்கள் முழு சுய நினைவுடன் வாழ ஆரம்பித்தனர்.

இவரது பல புத்தகங்கள் நிஜ வாழ்க்கையில் நடந்த மிக மிகச் சுவையான சம்பவங்களை சித்தரிப்பதால் அவற்றில் பல திரைப்படங்களாகவும் குறும் படங்களாகவும், நாடகங்களாகவும் ஆக்கப்பட்டு பிரபலமடைந்துள்ளன. அவேகனிங்ஸ் மூன்று அகாடமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

‘விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் என்று பல பேர்களைச் சொன்னாலும் இவருக்கு அது விசேஷமாகப் பொருந்துகிறது!

***