பாரதி போற்றி ஆயிரம் – 68 & 69 (Post No.4876)

Date- 3 April 2018

British Summer Time- 6-25

Compiled by S Ngarajana

Post No.4876

 

பாரதி போற்றி ஆயிரம் – 68

  பாடல்கள் 526 முதல் 549

 

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : .நாகராஜன்

 

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஐந்தாம் அத்தியாயமான கண்ணன் பார்வையில் பாரதி இடம் பெறுகிறது.

ஐந்தாம் அத்தியாயம்: கண்ணன் பார்வையில் பாரதி

1 முதல் 24 வரை உள்ள பாடல்கள்

திருமாலின் அவதாரம் பத்தினுள் யான்மட்டும்

     திகழ்தனிப் பெருமை பெற்றேன்

ஒருமைப்பா டிதுவென்ன பாரதம் எங்கணும்

     உயர்திருக் கோயி லுற்றேன்

கருதரிய எண்ணற்ற காவியங் கள்இந்தக்

     காசினியில் பெற்று வந்தேன்

உருவினில் மனிதனாய் இருப்பினும் தெய்வமென

     உணர்ந்திடும் செயல்பு ரிந்தேன்

 

சிறையினில் பிறந்தவன் என்றபோ தும்பிறவிச்

     சிறைதனை நீக்க வந்தேன்

மறைந்துநான் வாழ்ந்திட நேர்ந்தபோ தும்மாயை

     மறைந்திடச் செய்து வாழ்ந்தேன்

கறையென்று சொல்லிடும் லீலைகள் புரிந்தாலும்

     களங்கமற் றுத்தி கழ்ந்தேன்

உறைந்திடும் களத்தினுள் உலகுய்ய கீதையை

     உரைத்துவழி காட்டி நின்றேன்

 

என்றுமென் தாசனாய் திகழ்அக் ரூவர்போல

     எண்ணற்ற பேர்க ளுண்டு

தன்னரும் தோழனாய் கருதியே இணைந்திட்ட

     தனஞ்செயன் நட்பு முண்டு

அன்பினால் வளர்த்தெந்தன் அன்னையாய் விளங்கிய

    யசோதை பாச முண்டு

நன்னிய ராதைபோல் நாயகி பாவத்தில்

     நாடிய பக்த ருண்டு

 

ஒவ்வொரு வருமெனை  ஒவ்வொரு நிலையினில்

    உணர்ந்திடக் கூடு மென்றால்

செவ்விய பல்வேறு நிலைகளில் ஒருவரே

     சேவிக்க இயல்வதுண்டோ

எவ்விதம் பாரதி நீமட்டும் எனக்குளே

      இத்தனை வடிவு கண்டாய்

இவ்விதம் இதற்குமுன் கண்டவர் யாருமிலை

     இனிவரப் போவ தில்லை

 

எந்தனைத் தாயாகக் கண்டபின் சேயாக

     எவ்விதம் காணயியலும்? – நெஞ்சில்

வந்திக்கும் குருவாக ஏற்றபின் சீடனாய்

     மதித்திடல்தா னெவ்விதம்? – மேலும்

விந்தையாய் அரசனொடு சேவகன் எனயிரு

     வியன் நிலை அமைவதுண்டோ? – இன்னும்

அந்தமார் நாயகன் தானேநா யகியாக

     ஆகிடும் நிலையுமுண்டோ?

 

என்றாலும் இத்தனை வடிவங் களில்காண

     என்னாலே இயலுமென்று என்றும்

என்மீது கொண்டதோர் பக்தியா லல்லவா

     எண்ணற்ற பாவடித்தாய் இங்கு

இன்றுமதை ஆய்வோர்கள் ஒவ்வொரு நிலைக்குமோர்

     இலக்கணம் கண்டவுந்தன் அரிய

பன்முகச் சிந்தனையின் படிமங்க ளைக்கண்டு

    பாங்குடன் போற்றுகின்றார்

 

போர்க்களம் தன்னில் பகவத்கீ தைதனை

     புகன்றிடும் போதினிலேநான்

யார்யாரின் வடிவில் இருக்கின் றேனென

     யாவையும் உரைக்கையிலே அதில்

பார்த்தனாய் உள்ளேன் பாண்டவ ருள்ளென

     பகர்ந்ததை நினைத்தாயோ? – கவிதைத்

தேர்தனில் என்னை இருத்தியே பாக்களாம்

     தெறிகணைத் தொடுத்தாயோ?

 

தெய்வத்தை உணர தோழமை முதலென

     தேர்ந்துனை அருச்சுனனாய் யாவும்

செய்தன்று என்னுடன் இருந்தவன் நீயென

     செப்பிடும் வகையினிலே எந்தன்

துய்யநற் குணங்களைத் தொகுத்தளித் தாயென்னை

     சிலிர்த்திடச் செய்துவிட்டாய் வாழ்வில்

உய்வுற வேண்டுவோர் உனைப்போல் தோழமை

     உணர்ந்தால் உயர்ந்திடுவார்

 

அன்னையின் வடிவினிலே எந்தன்

     அற்புத தரிசனம் நீயுணர்ந்தாய்

விண்ணையும் கடந்துசென்ற அந்த

     விராட்சொ ரூபத்தை உணர்த்திவிட்டாய்

தண்ணொளி தருநிலவும் பிறவும்

     தாய்தரு பொம்மைகள் எனக்கண்டாய்

நண்ணும்பொய் வேதங்கள் நீ

     நகைத்திடத் தந்ததும் சொல்லி வைத்தாய்

 

தந்தையின் நோக்கினிலே எந்தன்

     தன்மையை உரைத்திட முயலுகையில்

விந்தைப் பயித்தியமாய் கண்ட

     விசித்திரச் செயல்களைப் பாடலுற்றாய்

எந்தயி டத்திருப்பேன் நான்

     எங்கெதைச் செய்வேன் எவரறிவார்?

அந்தநி லைதன்னை மிக

    அற்புதம் என்றிடப் பாடிவைத்தாய்

 

சேவகன் எனநீயும் எனை

    செப்பிட முயல்கையில் யான்வியந்தேன்

ஏவலைச் செய்பவனாய் சொல்ல

    எவ்விதம் துணிந்தாய் எனநினைந்தேன்

காவல் புரிபவனாய் எனைக்

     காட்டிய பொழுதினும் மிகநயமாய்

மேவரும் தெய்வமென எந்தன்

    மேன்மையும் எளிமையும் கலந்துரைத்தாய்

 

அரசன் என்பவனை இந்த

     அகிலம் எவ்விதம் தூற்றுமென

தரமுடன் விரித்துரைத்தாய் எந்தன்

     சக்கரம் சுழன்ற மறுகணமே

தருமம் தழைத்ததென்றே எந்தன்

     தகுதியை யாவரும் உணரவைத்தாய்

கருத்தில் பதிந்திடவே இந்தக்

     கண்ணனின் தன்மையை எடுத்துரைத்தாய்

 

எங்கணும் வெற்றியே எதிலும் வெற்றி

    எனைப்போல் பெற்றவர் எவரும் இல்லை

இங்கெவர் இவ்விதம் உரைத்திட் டாலும்

    யாவும் தோல்வியாய் முடிதற் கூடும்

அங்கதை மாற்றியே தோல்வி நேர்ந்தால்

    அவன்செயல் என்றதை ஏற்பின் உள்ளப்

பங்கயம் தனில்நான் உதிப்பே னென்று

    பகர்ந்திட்ட சீடனென என்னைக் கண்டாய்

 

கண்ணனைக் குருவாகக் கொள்க யென்றே

     கருத்தற்ற கிழவனவன் சொன்னதாலே

நண்ணிய போதிலென் செயல்கள் கண்டு

     நாடியதே தவறென்று நினைத்து விட்டாய்

உண்மையுள மெய்ப்பொருளை ஓர்நா ளில்நான்

    உபதேசம் செய்தபோதில் எனையுணர்ந்தாய்

கண்ணிலுறும் தோற்றமல்ல ஆன்ம ஞானம்

    கருத்திலும் இறையுணர்வு என்று கண்டாய்

 

தீராத விளையாட்டுப் பிள்ளை யாக

     தெருவிலே செய்திட்ட குறும்பை யெல்லாம்

நேராகக் கண்டவன்போல் பாடி நின்றாய்

    நீயுமந்த கோபியருள் ஒருவன் தானோ?

சீரான அப்பாடல் கேட்கும் போதில்

     சிறுவயதின் நினைவெல்லாம் தோன்றச் செய்தாய்

ஆராத ஆவலுடன் எந்தன் உள்ளம்

    ஆயர்பா டிச்செல்ல ஏங்கு தப்பா

 

தனக்கொரு பெண்குழந்தை வேண்டு மென்று

     தவித்திட்ட யசோதையாம் எந்தன் தாயார்

எனக்கேயோர் பெண்ணைப்போல் அலங்க ரித்து

    ஏக்கமது தீர்ந்திட்டாள் அந்த நாளில்

உனக்குமது போலாசை வந்த தாலோ

     ஒருநொடியில் பெண்குழந்தை யாக்கி வைத்தாய்

அனந்தம்பா எனக்கெனநீ இசைத்திட் டாலும்

    அச்சின்னஞ் சிறுகிளிக்கோ ஈடே யில்லை

 

நாயகி பாவத்திலே என்னை

நாடிய பொழுதினிலே

தூயநின சிந்தையதும் திரிந்து

துயரப் பட்டதெலாம்

ஆயபல் கருத்துக்கள் அதிலே

ஆழ்கடல் முத்தெனவே

ஏயநற் கவிதைகள் நீயும்

ஏக்கமுற் றுப்பாடினாய்

 

பாங்கிகள் அருகிருந்தால் என்னைப்

பார்த்திடச் சென்றிடவே

ஆங்கவர் தடையெனவே அவரை

அனுப்பியே வைத்ததுவும்

ஓங்கிய மரங்களுள் காட்டில்

ஓய்வின்றித் தேடியதும்

தேங்கிய காதலினால் நீயும்

தெவிட்டாமல் பாடிவைத்தாய்

 

கன்னியர் பலரென்னைக் காதலித்தார் அக்

    காதலைக் கவியாகச் சொல்லிவைத்தார்

என்னையே பெண்ணாகப் பார்த்தவர்கள் புவியில்

    எங்குமெந் நாளிலும் இருந்ததில்லை

துன்னிய வடிவெலாம் நானாகினேன் என்று

     தூயநற் கவியாகப் பாடிவைத்தாய்

என்னதான் நினைத்துக் கண்ணம்மாவாய் கண்டு

    எந்தனை நீயங்கு உருவகித்தாய்

 

பெண்ணாக நீயென்னைக் கண்டிட்டாலும் அதில்

    பழம்பிற விக்கதையில் ஆணாக்கினாய்

திண்மையுள ராமன்நான் என்றபோது  உன்னை

    சீதையெனும் பெண்ணாகச் சொல்லிக்கொண்டாய்

வண்மையுள நரசிங்கம் நானாகிட நீ

     மகிமையுள மைந்தனெனும் உறவுசொன்னாய்

உண்மைநிலை இவற்றுக்குள் ஆய்ந்தாலன்றோ உன்

     உள்ளத்தின் பக்திதனை உணரக்கூடும்

 

பன்னிரு ஆழ்வார்கள் தாமளித்த அரிய

    பாசுரங் களென்னும் கடலினிலே

அன்புரு கவிஞநீ மேகமாகி பல

     அருங்க ருத்துக்களாம் நீரைமொண்டு

இன்னிசைக் கலந்து என்மேலே தேன்போல்

     இனியகவி மழையாகப் பொழிந்துவிட்டாய்

என்றுமென் நெஞ்சினுள் நினைவென்னும் நல்ல

    ஏற்றமிகு பயிரினை விளையவைத்தாய்

 

நண்பனாய்க் காண பார்த்தனுண்டு எனை

    நாயகனாய்க் காண ராதையுண்டு

திண்ணிய குருவாய் சாந்தீபினி பண்பு

    திகழ்கின்ற சீடனுக்கு சாத்யகியே

நண்ணிய தாயென யசோதையே நாளும்

    நாடும்பிள்ளைமைக்கு கோபியரே

எண்ணிட இதுபோல் நாயகிக்கு உவமை

    எவருண்டு எவ்விதம் பாடினாயோ?

 

பற்பல மருத்துவம் இருந்தாலும் அதன்

     பாதைகள் வெவ்வே றானாலும்

முற்றிய பிணியைத் தீர்ப்பதற்கே அவை

    முயன்றிடும் என்பது இயல்பன்றோ?

அற்புத பாவனை எதிலேனும் மக்கள்

    அறிந்தெனை நாடி அடைந்திங்கு தம்மை

ஏற்றிடும் பிறவிப் பிணிதீர நீ

    ஏந்திய மருத்துவ நெறிகளன்றோ?

 

முனிவருள் பிருகு தேவரிஷி தம்முள்

    முகடெனும் நாரதன் ருத்திரருள்

முனிந்திடும் சங்கரன் வசுக்களிலே நான்

     மூண்டெழும் அக்கினி தளபதியுள்

இனியதமிழ் முருகன் யட்சருளே எவரும்

     ஈடில்லா குபேரன் எனகீதை

தனில்சொன்ன நானினி கவிஞருள்நான் என்றும்

     தமிழ்க்கவி பாரதி என்பேன்வாழி!

 

 

கண்ணன் பார்வையில் பாரதி முற்றும்

 

xxxx

 

 

பாரதி போற்றி ஆயிரம் – 69

  பாடல்கள் 550 முதல் 569

கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்

தொகுப்பு : ச.நாகராஜன்

கலைமாமணி கவிஞர் கே.பி.அறிவானந்தம் பாடல்கள்

பாரதி பத்துப்பாட்டு

நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. இங்கு ஆறாம் அத்தியாயமான குயில் பார்வையில் பாரதி துவங்குகிறது.

ஆறாம் அத்தியாயம்: குயில் பார்வையில் பாரதி

1 முதல் 20 வரை உள்ள பாடல்கள்

வானப் பறவையென வாழினும் பூமியில்

கான மிசைக்கும் கருங்குயில்நான் எங்கும்

பயிலும்நல் பாட்டோச கேட்டாலே மக்கள்

குயிலின் குரலென்றே கூறி மகிழ்ந்திடுவார்

ஆடலும் பாடலும் ஆங்கொன்றி னுக்கொன்று

நாடும் துணையாகி நானிலத்தில் தாமிணையும்

ஆட மயிலென்றும் அவ்வாறே இன்சுவையாய்ப்

பாடக் குயிலென்றும் பாங்காய் உரைத்திடுவார்

ஆனாலும் என்ன பயன் ஆடும் மயிலுக்குத்

தானாக முன்வந்து தேசியச் சின்னமெனும்

உன்னதத் தன்மை உவந்தளித்தா ரென்னை

என்னகார ணத்தாலோ எல்லாரும் மறந்திட்டார்

இவ்விதம் நேர்ந்ததை எண்ணிக் கலக்கமுற

செவ்வையாய் ஓங்கும் சிறப்பளித்தாய் பாரதியே

முப்பெரும் பாட்டெழுதி மூன்றினுள் ஒன்றாக

இப்பறவை தன்னை இலக்கிய மாக்கிவிட்டாய்

கண்ணன் திரௌபதிக்குக் காணும் வரிசையில்

கன்னங் கரியயெனைக் காவிய மாக்கிவிட்டாய்

கண்ணன் கடவுள் கருதுமுயர் பாஞ்சாலி

பெண்டிரில் தெய்வமென பேசும் பெருமையுற்றாள்

என்ன தகுதி இவரோ டிணைத்திந்த

சின்னஞ் சிறுகுயிலை சீர்பெறச் செய்தாய்

குயிலெங்கும் கூவும் குரலோசை தன்னை

இயல்பாய் செவிமடுப்பார் எங்கணும் உண்டு

அதிலுறும் இசையை அனுபவித் தாங்கே

மதிப்போர் சிலரேனும் மாநிலத்தில் தாமுண்டு

கேட்ட இசைதன்னில் காவியம் கண்டிட

பாட்டுத் தலைவாநின் போல்வேறு யாருண்டு?

புதுவை நகரின் புனிதமுள்ள தோப்பு

எனைத்தந்து உந்தன் எழில்கவிதை பெற்றதுவோ?

அன்றாடம் செல்லும் அருமையான தோப்பதனில்

அன்று நிகழ்ந்திட்ட அற்புதம் தானெதுவோ?

எந்நாளும் கேட்கும் எமதுகுர லோசைதான்

அந்நாளில் உன்மனதை அவ்விதமேன் ஈர்த்ததுவோ?

உன்பாட்டில் எல்லோரும் உள்ளம் உருகிடுவார்

என்பாட்டில் நீமகிழ என்னதான் உள்ளதுவோ?

என்னதான் காரணம் யாருமறி யாரெனினும்

என்பெயரால் காவியம் இன்தமிழ்தான் பெற்றதுவே!

பாரதிநின் பாடல்களில் காதல் தன்னைப்

     பாடாத இடமென்று எதுவும் இல்லை

பாரதனில் நாம்காணும் காட்சி யெல்லாம்

     பாங்குடைய காதலன்றி ஏது மில்லை

சாரமுள அதன்சிறப்பைச் சொல்வ தற்கும்

     சாகாத காவியமாய்ப் படைப்ப தற்கும்

சீராகஎன் கதையைத் தேர்ந்திட் டாயோ?

     சிறுகுயிலின் காதலென இசைத்திட் டாயோ?

குயில் பார்வையில் பாரதி தொடரும்

தொகுப்பாளர் குறிப்பு:
பாரதிப் பத்துப்பாட்டை வெளியிட மகிழ்ச்சியுடன் அனுமதி தந்த கவிஞருக்கும் சந்தனத் தென்றல் பதிப்பக உரிமையாளர் கவிஞர் சி.காசிநாதன் அவர்களுக்கும் எமது நன்றி.

கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே தரப்பட்டுள்ளது.

xxxx