மூட நம்பிக்கையை ஒழிக்க வழி வகுத்த கெப்ளர்! (Post No.7466)

WRITTEN BY S NAGARAJAN

Post No.7466

Date uploaded in London – 18 January 2020

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.

பாக்யா 16-1-20 இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியாகியுள்ள ஒன்பதாம் ஆண்டு இருபத்தி நான்காம் கட்டுரை -அத்தியாயம் 440

மூட நம்பிக்கையை ஒழிக்க வழி வகுத்த கெப்ளர்!

ச.நாகராஜன்

ஜோஹென்னஸ் கெப்ளர்  (Johannes Kepler தோற்றம் 27-12-1571 மறைவு : 15-11-1630). ஒரு ஜெர்மானிய விஞ்ஞானி. கணித மேதை. வானவியல் நிபுணர். ஜோதிடரும் கூட.

வானத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பற்றிய அறிவியல் தகவல்களை முதலில் தந்தவர் இவர் தான். ஆர்பிட் (Orbit) எனப்படும் கிரகங்களின் சுற்றுப்பாதையைச் சுட்டிக் காட்டும் வார்த்தையையும் முதலில் இவர் தான் உருவாக்கினார், இன்றளவும் அது பயன்பாட்டில் உள்ளது.

இதுவரை வாழ்ந்த விஞ்ஞானிகளிலேயே முதலிடத்தைப் பெறும் ஒரு சில விஞ்ஞானிகளுள் இவரும் ஒருவர்; விஞ்ஞானிகளிலேயே அதிக துரதிர்ஷ்டம் பிடித்தவரும் இவர் தான்.

முதல் முதல் அறிவியல் கதையை எழுதியவர் இவர் தான். சந்திரனை நிலைக்களனாகக் கொண்டு படைக்கப்பட்ட அந்தக் கதையின் பெயர் “கனவு” (The Dream) என்பதாகும்.

அளவற்ற அன்பைத் தாயார் மீது வைத்திருந்த ஜோஹன்னஸ் கெப்ளருக்கு வந்தது ஒரு சோதனை.

அவரது தாயாரை மந்திர தந்திர மாயாவாதம் செய்யும் கெட்ட மந்திரவாதி என்று சிறையில் அடைத்ததைக் கேள்விப் பட்டவுடன் அவருக்குச் சொல்ல முடியாத வேதனை ஏற்பட்டது.

கெப்ளரின் தாயான காத்ரினாவிடமிருந்து  ஊர்சுலா என்ற பெண்மணி கடன் வாங்கி அதைத் திருப்பிக் கொடுக்கவில்லை. காத்ரினாவிடம், ஊர்சுலா தனது கணவரல்லாத இன்னொருவர் மூலமாகத் தான் கர்ப்பமுற்றிருப்பதாகச் சொல்ல அதை காத்ரினா கெப்ளரின் சகோதரரிடம் சொல்ல அவர் அதை ஊர் முழுவதும் பரப்பி விட்டார்.

இதனால் வேதனை அடைந்த ஊர்சுலா கருச்சிதைவைச் செய்து கொண்டார்; காத்ரினாவைப் பழிவாங்கத் துடித்தார்.

காத்ரினா மந்திரதந்திரம் செய்யும் மந்திரவாதி என்று குற்றம் சுமத்தி உள்ளூரில் 24 பேர்களைத் தயார் செய்து அவர்களையும் குற்றம் சாட்டச் சொன்னார். அந்தக் கால வழக்கப்படி இப்படி மந்திரவேலை செய்வதாகச் சொன்னால் உடனடி விசாரணை, கைது, தண்டனை என்பது சகஜமாக இருந்தது.

தனது குழந்தையை வினை வைத்து அழித்தது காத்ரினா என்று ஊர்சுலா சொல்ல, பத்து வருடங்களாக நடக்க முடியாமல் இருந்த ஒரு பள்ளி ஆசிரியர் காத்ரினா தனக்கு வினை வைத்து விட்டதால் தான் தன்னால் நடக்க முடியவில்லை என்றார். இன்னொருவர் தனது மகளின் கை முடங்கியதற்குக் காரணம் காத்ரினா வினை வைத்ததால் தான் என்றார்.

மூடிய கதவுகள் ஜன்னல்கள் வழியே மாய உருவம் எடுத்து வந்து அவர் மனிதர்களையும் விலங்குகளையும் கொல்கிறார் என்றார் ஒருவர். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக காத்ரினா மீது குற்றம் சாட்டவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மந்திர தந்திரம் என்றாலே பயப்படும் ஜெர்மானிய மக்களிடம் காத்ரினாவின் தற்காப்பு வாதம் எடுபடவில்லை. மாஜிஸ்ட்ரேட் ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்தார் காத்ரினா. இப்படிச் செய்ததிதிலிருந்தே அவர் ஒரு குற்றவாளி என்று நீதி மன்றம் முடிவுக்கு வந்தது.

இதற்கிடையில் கெப்ளரின் சிறு பெண் குழந்தை அகால மரணமடைந்தது. அந்தத் துயரிலிருந்து மீள்வதற்குள் அவரது நான்கு வயது மகனும் துரதிர்ஷ்டவசமாக இறந்தான்.

துயரத்தின் மேல் துயரம்.

தாயாரின் கள்ளமில்லா உள்ளத்தை நன்கு அறிந்த கெப்ளர் ஆறு வருட காலம் எவ்வளவோ பெடிஷன்கள் போட்டும் தாயை கேஸிலிருந்து விடுவிக்க முடியவில்லை.

கடைசியில் தான் வேலை பார்த்து வந்த இடத்திலிருந்து நெடுந்தூரம் பயணம் செய்து தன் சொந்த ஊருக்கு வந்தார். அங்கு சிறைக்குச் சென்று தாயாரிடம் நெடு நேரம் பேசி நடந்ததை அனைத்தும் கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்னர் தன் தாயார் மீது சாட்டப்பட்டிருந்த 49 ‘வினை வைத்து உடலை பாதிக்க வைத்த குற்றங்களுக்கு” மருத்துவ ரீதியிலான காரணங்களை அறிவியல் முறைப்படி ஆராய்ந்து கண்டுபிடித்தார்.

ஊர்சுலா தானே முன் வந்து அபார்ஷன் செய்து கொண்டதையும், பெண்ணின் கை முடங்கியதற்குக் காரணம் அவள் சுமக்க முடியாத அளவு செங்கல்களைத் தொடர்ந்து தூக்கிச் சென்றதுமே காரணம் என்பதையும் அவர் நிரூபித்தார். பள்ளி ஆசிரியர் பத்து வருடத்திற்கு முன்னால் ஒரு பள்ளத்தில் விழுந்ததால் தான் அவரால் நடக்க முடியாமல் போனது என்பதையும் அவர் கண்டுபிடித்துக் கூறினார்.

ஆனால் இந்த வாதம் எல்லாம் கோர்ட்டில் எடுபடவில்லை.

காத்ரினாவை கைது செய்ய அவர் வீட்டில் நள்ளிரவில் புகுந்த போலீஸார் அவரை நிர்வாணமாகவே இழுத்துச் சென்றனர். ஆனால் காத்ரினா தன் நிதானத்தை இழக்காமலேயே இருந்தார்.

பின்னர் அந்தக் கால முறைப்படி ஒரு சக்கரத்தில் கட்டி உடலை நீட்டித்து குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்து விடுவோம் என்று பயமுறுத்தினர். அவர் பேசாமல் இருந்தார். இப்படிப் பேசாமல் இருப்பதும் அழாமல் இருப்பதும், ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடாமல் இருப்பதுமே அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக ஆகும் என்று அவரை எதிர்த்தவர்கள் வாதிட்டனர். மனம் நொந்து போன கெப்ளர் தனது வேலையை விட்டு விட்டு வாதம் புரிய தானே கோர்ட்டில் நேரில் ஆஜரானார்.

கோர்ட்டில் தனது தாயார் ஒரு போதும் எதற்காகவும் அழுததில்லை என்றார் கெப்ளர். அறிவியல் ரீதியிலான ஆதாரங்களைச் சொல்லி வலுவாக வாதிட்டார்.

       14 மாதங்கள் கைகளில் சங்கிலியைக் கட்டி ஒரு இருட்டறையில் காத்ரினா அடைக்கப்பட்டார்.  கேஸ் தொடர்ந்து நடந்து ஐந்து வருட காலம் ஓடியது.

   பல்வேறு ஆதாரங்களைச் சுட்டிக் காட்டிய பின்னர் ஒருவாறாக கோர்ட் அறிவியல் ஆதாரங்களை ஏற்றுக் கொண்டு 75 வயதான கெப்ளரின் தாயை  விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே 1622 ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி அவர் இறந்தார்.

கெப்ளரின் துக்கம் இன்னும் அதிகமானது.

சில மாதங்கள் கழித்து அவரது இளமைக்கால நண்பரான பிசோல்ட் (Besold) என்பவர் கெப்ளரின் தாயாருக்கு நேர்ந்தது போல வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது என்பதற்காக அரசியல் ரீதியாகத் தூண்டப்பட்டும் அறியாமையினாலும் ஜெர்மானிய மக்களிடம் இருந்த அதிமானுட மந்திரவாதம் பற்றிய மூட நம்பிக்கையிலான பயத்தைப் போக்கப் பெருமுயற்சி எடுத்தார்.

எடுத்ததெற்கெல்லாம் மந்திரவாதம் என்று கேஸ் போடக்கூடாது, சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி இருந்தால் மட்டுமே அப்படி ஒரு காரணத்தை அடிப்படையான முகாந்திரத்தை நிரூபித்த பின்னர் கேஸ் போடலாம் என்று வாதிட்டு வெற்றியும் பெற்றார் அவர்.

ஜெர்மானிய வரலாற்றில் இப்படி ஒரு அறிவியல் திருப்பத்தை ஏற்படுத்த பிசோல்டும் கெப்ளருமே காரணம் என்பதை வரலாறு பதிவு செய்தது.

உலகில் மந்திர தந்திர மாயாவாத பயத்தை நீக்க கெப்ளரின் தாயார்  ஒரு காரணமாக அமைந்தார்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..

..

 ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்வாண்ட் அர்ஹெனியஸ் {Svante A Arrhenius (1859-1927)} இரசாயனத்தில் தேர்ந்த விஞ்ஞானி. 1903ஆம் ஆண்டு வளி மண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைட் இருப்பதையும் அதனால் ஏற்படும் வெப்பத் தாக்கத்தையும் உலகிற்கு அறிவித்து இவர் நோபல் பரிசைப் பெற்றார்.

அர்ஹேனியஸ் ஒரு ஜாலியான ஆசாமி. வஞ்சமில்லாமல் உணவைச் சாப்பிட்டதால் குண்டான உடலைப் பெற்று விட்டார். அவரைப் பார்த்தால் விஞ்ஞானி என்று யாருமே சொல்ல முடியாது. புத்தி சம்பந்தமான எதனுடனும் அவருடைய உடல் வாகு தொடர்பு படுத்தாது.

ஒரு நாள் பெரிய விஞ்ஞான மகாநாடு ஒன்றிற்கு அவர் சென்றிருந்தார்.அங்கு ஹோட்டல் அறையில் மாநாட்டிற்கு வந்திருந்த விஞ்ஞானிகள் ஒருவருடன் ஒருவர் அளவளாவி உணவை அருந்திக் கொண்டிருந்தனர்.

தனது கோட்டைக் கழற்றி அங்கிருந்த கோட்-ஸ்டாண்டில் மாட்டிய அவர் நேரடியாக விஞ்ஞானிகள் குழுமி உணவருந்தும் அறைக்கு விரைந்து சென்றார்.

 அவரைப் பார்த்த ஹோட்டல் அட்டெண்டர் ஒருவர் அவரிடம் ஓடி வந்தார். அவரைத் தடுத்து நிறுத்தினார்.

“சார்! அது புரபஸர்களின் அறை! நீங்கள் போக வேண்டிய அறை இதோ, இந்தப் பக்கம் இருக்கிறது” என்று கூறி விட்டு ஒரு அறையைச் சுட்டிக் காட்டினார்.

“இங்கு தான் இறைச்சியை வெட்டித் துண்டாக்குபவர்கள் (Butchers room) உணவருந்துகின்றனர். இது தான் உங்கள் அறை” என்றார்.

இந்தச் சம்பவத்தை அறிந்த அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

****