புறநானூற்றில் அந்தணரும் வேதமும்! – 2 (Post No.3320)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 5  November 2016

 

Time uploaded in London: 6-00 AM

 

Post No.3320

 

 

Pictures are taken from various sources; thanks. This picture is from a Facebook friend.Thanks.

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 5

இந்தக் கட்டூரையில் புறநானூற்றில் உள்ள பாடல்கள் 15,26,166 ஆகியவை இடம் பெற்றுள்ளன

 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 2

 

     ச.நாகராஜன்

    

 

சங்ககாலத்தில் வாழ்ந்த அற்புதமான ஒரு பெரும் மன்னனைப் பற்றிய சுவையான பல செய்திகளைத் தரும் பாடல் புறநானூறில் உள்ள 15ஆம் பாடல்.

பாடியவர் நெட்டிமையார்

பாடப்பட்ட பாட்டுடைத் தலைவனோ  மாமன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.

பெயரே இம்மன்னனின் பெயரே புகழுக்கான காரணத்தை விளக்குகிறது.

பல யாகங்கள் செய்த அரும் புகழைப் பெற்ற பெரு வீரன் இவன். பாடலில் வரும் வரிகள் இவை:-

 

 

புரையில்
நற்பனுவ னால்வேதத் 
தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை 
நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண் 
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி
யூப நட்ட வியன்களம் பலகொல் ?  (வரிகள் 16 முதல் 21 வரை)

 

புரையில் நற் பனுவல் நால் வேதம் என்பதன் மூலம் ஒப்புயர்வில்லாத நல்ல அற நூலாகிய நான்கு வேதங்களாகிய ரிக். யஜுர், சாமம், அத்ர்வணம் ஆகியவை சுட்டிக் காட்டப்பட்டு  புகழப்படுகிறது

 

.

அருஞ்சீர்த்தி என்று  மீண்டும் சொல்லப்படுவதால் அருமை வாய்ந்த புகழுக்குரிய யாகங்கள் என்பது சொல்லப்படுகிறது.

யாகங்களின் பெருமையானது அடுத்து, “பெருங்கண்ணுறை நெய்ம்மலை ஆஹுதி பொங்க” என்பதால் சுட்டிக் காட்டப் படுகிறது. ஆல், அரசு, அத்தி, இத்தி, மா, பலாசு, வன்னி, நாயுருவி,கருங்காலி ஆகிய ஒன்பது வகை சுள்ளிகள் சமித் என்பப்படும். இவை நெய்யுடன் கூடி ஹோம குண்டத்தில் இடப்படும்.

பல மாண் என்பதால் பல மாட்சிமை உடைய என்பதும் வீயாச் சிறப்பு என்பதால்  குறைவில்லாத அழியாச் சிறப்புடன் கூடியது என்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது.

 

வேள்வியில் யாக யூபங்கள் நடப்படுவது வழக்கம். அப்படிப்பட பல யாகங்களை நடத்திய யாகசாலைகள் பலவோ என புலவர் வியக்கிறார்.

அவனது வீரச் செயல்களை அடுக்கிய புலவர் தருமச் செயல்களை அடுக்கிக் கூறும் வகையில் இப்படிப் பொழிந்து தள்ளுகிறார்.

மிகுந்த புகழை உடைய நால் வகை வேதங்கள் கூறும் வேள்விகள் பலவற்றை நடத்தி முடித்து விட்டாயோ என புலவர் வியந்து பாடுகிறார். இந்த மன்னனின் புக்ழ எழுதி  மாள முடியாது.

 

 

யாகசாலைகள் பற்றிய விரிவான கட்டுரைகளை திரு ச.சுவாமிநாதன் எழுதியுள்ளார். அவற்றை மீண்டும் இங்கு விளக்கத் தேவை இல்லை. அதை இக்கட்டுரையின் தொடர்ச்சி விளக்கமாகப் படித்துணர்க.

 

 

இன்னொரு பாடல். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற புகழ் பெற்ற பாண்டிய மன்னனைப் போற்றி புலவர் மாங்குடி மருதனார் பாடிய பாடல் இது.

பாடல் எண் 26.

 

அதில் வரும் வரிகள் இவை:
போர்ச் செழிய
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்றமாக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே.”                                                             (வரிகள் 11 முதல் 18  முடிய)

 

 

போர்ச் செழிய என்று மன்னனை விளிக்கும் புலவர் அவர் கடும் போரில் பகைவனை வாட்டுபவன் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

அவனுக்குச் சுற்றம் யார்?

 

ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கையோர் தான் சுற்றம். மிகச் சிறப்பான வேதத்தில் உள்ள “அடங்கிய” – அனைத்தையும் கொண்டுள்ளவர்களை அவன் சுற்றமாகக் கொண்டவன்.

நான்மறை முதல்வர் என்பதால் நான்கு வேதங்களிலும் வ்ல்ல அந்தணர்கள் என்பது பெறப்படுகிறது.

 

மன்னர் ஏவல் செய்ய என்பதால் நெடுஞ்செழியனுக்கு ஏவலாளர்கள் பல  மன்னர்களே என்பது தெரிய வருகிறது.

வேள்வி முற்றியவன் அவன். பல யாகங்களைச் செய்து முடிந்த முடிபைக் கண்டவன் அவன்.

 

வாய் வாள் என்பதால் அவனது வாள் ஒரு நாளும் தோல்வியைக் காணாத வாள் என்பது சுட்டிக்  காட்டப்படுகிறது.

அப்படிப்பட்ட மன்னவனை எதிர்த்துத் தோற்ற பகைவரும் கூட, ‘உன்னிடம் பொருதி நிற்கும் பெருமை பெற்றதால் அவர்களும் நீடு வாழ்வர்’ என்று கூறி அற்புதமாகப் பாடலை முடிக்கிறார் புலவர்.

இன்னும் ஒரு அருமையான பாடல் 166ஆம் பாடல். இதைப் பாடியவர் ஆவூர் மூலங்கிழார். பாட்டுடைத் தலைவன்  சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன். இந்தப் பாடலின் துறை: பார்ப்பன வாகை..

 

பார்ப்பன வாகையில் புறநானூற்றில் இரு பாடல்கள் உள்ளன. பாடல் 166-உடன் இதே வாகையில் உள்ள இன்னொரு பாடல் புறம் 305 ஆகும்.

 

இதில் பாடப்பட்டவன் பூணூலை அணிந்தவன்.

பார்ப்பான்.

வேதங்களைக் கற்றுணர்ந்தவன்.

நான்கு மறைக்ள ஆறு அங்கங்களைக் கொண்டது. ஷட் அங்கமே மருவி இங்கு நாம் தமிழ் நாட்டில் இன்றும் தினமும் கூறும் சடங்கு ஆக நிற்கிறது.

 

 

நன்று ஆராய்ந்த நீள் நிமிர் சடை
முது முதல்வன் வாய் போகாது
ஒன்று புரிந்த ஈர் இரண்டின்
ஆறுணர்ந்த ஒரு முது நூல்
இகல் கண்டோர் மிகல் சாய்மார்
மெய் அன்ன பொய் உணர்ந்து
பொய் ஓராது மெய் கொளீஇ
மூவேழ் துறைபும் முட்டின்று போகிய
உரை சால் சிறப்பின் உரவோர் மருக
வினைக்கு வேண்டி நீ பூண்ட
புலப் புல்வாய்க் கலைப் பச்சை
சுவல் பூண் ஞான் மிசைப் பொலிய

                                                                                  ( 1 முதல் 12 வரிகள்)

 

மேற்கூறிய வரிகள் காழ்ப்புணர்ச்சி அற்ற ஆழ்ந்த ஆராய்ச்சிக்குரிய வரிகள்

 

பாடல் சுட்டிக் காட்டும் முது முதல்வன் யார்?சிவ் பிரான் என்பர் உரையாசிரியர்கள்.

 

ஆறுணர்ந்த என்பதால் ஆறு அங்கம் பெறப் படுகிறது. சிக்ஷா, சந்தஸ், வியாகரணம், நிருக்தம், கல்பம். ஜோதிடம் ஆகியவை வேதங்களின் ஆறு அங்கங்களாகும்.

முது நூல் என்பது வேதம்.

 

பொய்களை அகற்றி மெய்யையே கொள்வார் பெரியோர்.

உரை சால் சிறப்பின் உரவோர் என்பதால் சொல்லற்கு அரிய புகழுடைய சிறந்த கற்றோர் என்பது சொல்லப்படுகிறது.

பாடலுக்குரிய தலைவன் ஆண் மானின் தோலை அணிந்தவன். (புலப் புல்வாய்க் க்லைப் பச்சை)

 

தோளில் பூணூலை அணிந்தவன்.(கவல் பூண் ஞான்)

இப்படி வேதமும் அதன் அங்கங்களும் அந்தண்ர் அணியும் பூணூல் உட்பட அனைத்தும் இந்தப் பாடலில் போற்றிப் புகழப்படுகிறது.

அடுத்து இடம் பெறும் வரிகள் (20,21) இவை:

 

ஈர் ஏழின் இடம் முட்டாது
நீர் நாண நெய் வழங்கியும்  

 

என்ற வரிகள் ஈரேழு அதாவது பதிநான்கு இடங்களில் நீரே வெட்கப்படும் வகையில் அதிக நெய்யைச் சொரிபவன் என்ற குறிப்பு பெறப்படுகிறது.

 

தண்ணீர் பட்ட பாடு என்று சொல்கிறோமே, அது அந்தத் தலைவனைப் பொருத்த ம்ட்டில் நெய் பட்ட பாடு.

எத்துணை வேள்விகளை, எத்துணை இடங்களில் நட்த்தி இருக்க வேண்டும்.

 

மழை அண்ணாப்ப நீடிய நெடு வரைக்
கழை வளர் இமயம் போல
நிலீஇயர் அத்தை நீ நில மிசையானே.

 

என்று இந்தப் பாடல் முடிகிறது.மேக்ம் உயர்ந்து பார்க்கும் நீண்ட நெடும் மலையான இமயம் போல நீ நீடூழி வாழ்வாயாக என்று பாட்டுடைத் தலைவனை வாழ்த்திப் பாடல் முடிகிறது.

 

இமயம் முதல் குமரி வரை உள்ள அனைத்து மன்னர்களையும் – அதாவது 56 தேச மன்னர்களையும் – புலவர் பெருமக்கள் வாழ்த்தும் போது இமயம் போல வாழ்க என வாழ்த்துவது ஒன்றே ஒரே நாடு பாரதம் என்பதை உணர்த்துகிறது.

 

பொதுவான பண்பாடு, பொதுவான தொன்மம், பொதுவான நம்பிக்கை, பொதுவான பழக்க வழக்கங்கள், பொதுவான வாழ்க்கை மதிப்புகள், ஒரு  குறிப்பிட்ட பரந்து பட்ட எல்லைக்குள் இருக்கும் மக்களால் கடைப்பிடிக்கப்படும் போது அது தேசம் எனச் சொல்லப்படுகிறது. இதை ராஷ்ட்ரம் என்று அன்றே வேதம் வ்ரையறுத்துக் கூறி விட்டது!

 

இந்த வரையறைக்குள் பாரதத்தின் எந்த இலக்கியத்தையும் வைத்து உரசிப் பாருங்கள்.

ஒரே விதமான தங்கம் தான் தெரியும்.

அது பத்தரை மாத்துத் தங்கமே!

 

**************   தொடரும்

 

குறிப்பு: இந்த ஐந்தாம் கட்டுரை படிப்பவர்கள்  முதல் நான்கு கட்டுரைகளையும் தவறாமல் படித்தால் தொடர்பு நன்கு விளங்கும்..