2014 ஏப்ரல் 8-ஆம் தேதி இராம நவமி; ‘மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரம் இராமன்’ என்று கம்பன் புகழ்கிறான். அத்தகைய இராமன் புகழை நாமும் பாடுவோம்.
கட்டுரையாளர் :- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:–956 தேதி ஏப்ரல் 5, 2014
இந்தியப் பண்பாட்டின் ஒட்டுமொத்த உருவமாகத் திகழ்பவன் இராம பிரான். ‘தர்மத்தின் சின்னம் ராமன்’ (ராமோ விக்ரஹவான் தர்ம:, ராமாயணம் 3-37-13) என்று வால்மீகி முனிவன் முன் மொழிவதை கம்பனும் அப்படியே வழி மொழிகிறான். ஒரு பாட்டில் அல்ல, இரண்டு ஒரு பாட்டில் அல்ல; பல பாடல்களில்:–
“குழைக்கின்ற கவரி இன்றிக் கொற்ற வெண்குடையும் இன்றி
இழைக்கின்ற விதி முன் செல்லத் தருமம் பின் இரங்கி ஏக
மழைக்குன்றம் அனையான் மௌளி கவித்தனன் வரும் என்றென்று
தழைக்கின்ற உள்ளத் தன்னாள் முன் ஒரு தமியன் சென்றான்”
பரதனே நாட்டை ஆள வேண்டும், இராமன் 14 ஆண்டுகள் காட்டிற்குப் போக வேண்டும் என்று கைகேயி உத்தரவிட்டவுடன் ராமன் சென்ற காட்சி மேற்கூறிய பாடலில் உள்ளது. மன்னருக்கே உரித்தான சாமரம் இல்லை, வெண்ணிறக் குடையும் இல்லாமல் ‘விதி’ முன்னே செல்ல, தருமம் போன்ற ராமன் பின்னே சென்றானாம். அவனுடைய விதி — தலை விதி — கைகேயி உருவத்தில் வந்தது. தரும வடிவில் நிற்கும் இராமன், ‘விதியே என்று’ பின்னால் நடந்து செல்கிறான் தன் அம்மாவிடம் விடை பெற்றுக் கொள்ள.
அயோத்தியா காண்டத்தில் ‘தர்ம மூர்த்தி’ என்றே அழைக்கப்படுவதை பின்வரும் பாடல் காட்டும்:–
“புறத்து நாம் ஒரு பொருள் இனிப் புகழ்கின்றது எவனோ
அறத்தின் மூர்த்தி வந்து அவதரித்தான் என்பது அல்லால்
பிறத்து, யாவையும் காத்து அவை பின் உறத் துடைக்கும்
திறத்து மூவரும் திருந்திடத் திருத்தும் அத் திறலோன்.
பொருள்:– தரும மூர்த்தியாகிய திருமாலே இராமனாக வந்து அவதரித்தான் என்று சொல்வதைத் தவிர, நாம் சொல்வதற்கு வேறு என்ன இருக்கிறது? அந்தத் திறமை மிகுந்த இராமன், எல்லாப் பொருள்களையும் உண்டாக்கி— காப்பாற்றி முடிவில் அழிக்கும்– மும்மூர்த்திகளின் செயல்கள் செம்மை அடையும்படி திருத்துபவன் ஆவான். (இந்தப் பகழுரை வசிட்ட முனிவன் வாயிலாக வரும் பாடல்)
இன்னொரு பாடலில் சீதையுடன் இராமனை ஒப்பிடுகிறான் கம்பன்:
மண்ணினும் நல்லள் மலர்மகள் கலைமகள் கலை ஊர்
பெண்ணினும் நல்லள் பெரும்புகழ்ச் சனகியோ நல்லள்
கண்ணினும் நல்லன் கற்றவர் கற்றிலாதவரும்
உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார்.
(கலை ஊர் பெண்= மான் வாகனம் உடைய பார்வதி; மலர்மகள்=லெட்சுமி)
பொருள்:– பூமா தேவியைவிட சீதை நல்லவள்; அலைமகள் (லெட்சுமி), கலைமகள் (சரஸ்வதி), மலைமகள் (பார்வதி) ஆகிய மூவரையும் விட நல்லவள் சீதை; அவளுடைய கண்களைக் காட்டிலும் நல்லவன் இராமன். பருகுவதற்கான தண்ணிரை விட, பாதுகாக்கும் உயிரை விட, இராமனையே விரும்புவர் கற்றாரும் கல்லாதவரும்.
இறுதியாக வசிட்டன் புகழுரையாக அமைந்த ஒரு பாடலில்,
மனிதர் வானவர் மற்றுளோர் அற்றம் காத்து அளிப்பார்
இனிய மன்னுயிர்க்கு இராமனின் சிறந்தவர் இல்லை
என்ற வரிகளும் படித்து இன்புறத் தக்கது.
(அயோத்தியா காண்டம், மந்திரப் படலம்)
”மனிதர்களும் தேவர்களும் மற்றுமுள்ளவர்களும் துன்பப்படாமல் தடுத்துக் காப்பதில் இராமனைக் காட்டிலும் சிறந்தவர் யாரும் இல்லை”.
மேலும் பல கட்டுரைகளில் இராமன் புகழ் பாடுவோம்…………..தொடரும்
contact swami_48@yahoo.com


You must be logged in to post a comment.