கட்டுரை மன்னன்:– லண்டன் சுவாமிநாதன்
ஆய்வுக்கட்டுரை எண்:–1334; தேதி:– 8 அக்டோபர் 2014.
பதிற்றுப் பத்து என்னும் நூல் சங்க கால இலக்கியத்தைச் சேர்ந்த 18 நூல்களில் ஒன்று. பத்துப் பாட்டு + எட்டுத்தொகை சேர்ந்து 18 நூல்கள். அவற்றில் எட்டுத்தொகையில் இடம்பெற்ற எட்டு நூல்களில் ஒன்றாம் பதிற்றுப் பத்து — சேர மன்னர்தம் கொட்டைச் சிறப்பையும் படை மறத்தையும் விளக்கிக் கூறும். ஒவ்வொரு சேர மன்னர் மீது பாடிய பத்துப் பாக்கள் வீதம் 100 இருக்க வேண்டும். ஆனால் முதல் பத்தும் கடைசி பத்தும் கிடைத்தில.
இந்த நூல் பழங்கால சேர நாட்டின் பல அதிசய பழக்க வழக்கங்களை தன்னகதே கொண்டது. இதில் பாடல்களுக்கு முன் பாடினோர் வரலாறு என்று சேர்க்கப்பட்டுள்ள பதிகப் பகுதி வியப்பான செய்திகளைத் தருகிறது. இவைகளை உறுதி செய்ய வேறு இடங்களில் தகவல் கிடைக்குமா என்று ஆராய்தல் நலம் பயக்கும். அதுவரை இதைத் தலைமுறை தலை முறையாக பாதுகாத்தல் நம் கடமை.
Kumara Gupta: Tiger Slayer
இரண்டாம் பத்து பாடியவர் குமட்டூர் கண்ணனார். இவர் ஒரு அந்தணர். சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றிப் பாடியதற்காக அவருக்குக் கிடைத்த பரிசு 500 ஊர்கள் !! அது மட்டுமின்றி 38 ஆண்டுகளுக்கு தென்னாட்டு வருவாயில் ஒரு பகுதியும் இவருக்குக் கிடைத்ததாம்.
( பாரியிடம் இருந்த 300 ஊர்களையும் அவன் ஏற்கனவே தானமாகக் கொடுத்துவிட்டதை கபிலர் என்னும் புலவர் புறநானூற்றில் கூறியதையும் நினைவுகூறல் பொருத்தம்.)
மூன்றாம் பத்துப் பாடியவர் பாலைக் கௌதமனார். இவர் பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாடினார். “நீ வேண்டும் பரிசில் யாது?” — என்று சேர அரசன் புலவரை நோக்கிக் கேட்டான். அதற்கு அவர் — யானும் என் பார்ப்பனியும் சுவர்க்கம் புகல்வேண்டும் — என்று கூறினர். இவரும் ஒரு அந்தணப் புலவர். மன்னரும் அறிஞர்களைக் கலந்தாலோசித்து ஒன்பது வேள்விகளைச் (யாகம்) செய்தான். பத்தாம் வேள்வியைச் செய்யும்போது புலவரும் அவர் மனைவியும் காணாமற் போயினர் எனப் பதிகம் தெரிவிக்கிறது.அதவது மாயமாய் மரைந்து விட்டனர். (இது போன்ற அதிசய நிகழ்ச்சிகள் பலவற்றை ஏற்கனவே இன்னொரு கட்டுரையில் தந்துள்ளேன்.)
நான்காம் பத்தைப் பாடியவர் காப்பியாற்றுக் காப்பியனார். இவர் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்ற மன்னரைப் பாடினார். அதற்காக அவர் பெற்ற பரிசு நாற்பது லட்சம் பொன்னும், சேரன் ஆண்ட நாட்டின் ஒரு பகுதியும் எனப் பதிகம் செப்பும்.
( இவர் தொல்காப்பியர் போல காவ்ய கோத்ர அந்தணர் என்பது பெயரிலிருந்து தெரிகிறது.)
ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர். இவர் பெரிய வரலாற்று அறிஞர். வரலாறு பாடிய முதல் தமிழன். ஒவ்வொரு பாட்டிலும் ஏதேனும் ஒரு வரலாற்று நிகழ்ழ்சி அல்லது போரை உவமையாக வைத்துப் பாடுவார். காளிதாசன் போல உவமை மன்னன். அவரைப் போல ஒரே பாட்டில் ஏழெட்டு உவமைகளைத் திறம்படப் பயன்படுத்துவார். இவரும் ஒரு அந்தணர். சேரன் செங்குட்டுவனைப் புகழ்ந்து இவர் பாடினார். அவன் இவருக்கு உம்பற்காடு என்னும் பகுதியில் வரும் வருவாயையும் தன் மகன் குட்டுவஞ் சேரலையும் பரிசிலாக அளித்தான் என்று பதிகம் கூறும்.
ஆறாம் பத்தைப் பாடியவர் காக்கை பாடினியார் நச்செள்ளியார். இவர் பெண்பாற் புலவர். இவர் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடினார். இவர் பெண் என்பதால் நகை செய்து கொள்வதற்காக ஒன்பது துலாம் பொன்னையும் லட்சம் பொற்காசுகளையும் பெற்றார்.
ஏழாம் பத்தைப் பாடியவர் புகழ்மிகு கபிலர். புலன் அழுக்கற்ற அந்தணாளன் என்று எல்லோராலும் புகழப்பட்ட இவர் பாரியின் ஆருயிர்த் தோழர். மூவேந்தர்களைப் பகைத்துக்கொள்ள பயந்து தமிழகமே நடுங்கிய ஞான்று அவர்களை இவர் சாணக்கியன் போலத் துச்சமாக எண்ணினார். ஜாதிமதம் பாராது பாரியின் மகள்களைத் தன் மகள் போல பாவித்து திருமணம் செய்வித்த பின்னர் தீப்பாய்ந்து உயிர் துறந்தார். அதற்கு முன்னர் தமிழ் மொழியைக் கிண்டல் செய்த வட நாட்டு மன்னன் பிரகதத்தன் என்பவனுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்து அவனையும் செய்யுள் இயற்றவைத்தார். இனி இவர் பற்றிப் பதிகம் தரும் தகவலைப் பார்ப்போம்:

இவர் சேர மன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பாடியவர். அதற்காக அவன் கொடுத்த பரிசு நூறாயிரம் பொற்காசுகள் — அது மட்டும் அல்ல — நன்றா என்னும் குன்றின் மீது கபிலரை அழைத்துச் சென்று கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணும் ஊர்கள் அனைத்தையும் பரிசாகக் கொடுத்தான். என்னே பெருந்தன்மை!!
எட்டாம் பத்தைப் பாடியவர் அரிசில் கிழார் — கிழார் என்பது வேளாளர்க்குரிய பட்டப் பெயர் — பேகன் காலத்தில் வாழ்ந்தவர். இவர் பெருஞ் சேரல் இரும்பொறையைப் பாடி ஒன்பது லட்சம் பொற்காசுகளைப் பரிசாகப் பெற்றர். அது மட்டும் அல்ல. அரசன் தன் மனைவியுடன் வெளியே வந்து, இந்த அரண்மனைக்குள் உள்ள சிம்மாசனமும் எல்லாப் பொருட்களும் உமக்கே சொந்தம் என்றான். புலவரோ பேராசை இல்லாத பெருந்தகை. ஆதலால் இவை அனைத்தும் எனக்கு வேண்டாம் என்றார்!!
ஒன்பதாம் பத்தைப் பாடியவர் பெருங்குன்றூர்க் கிழார். குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை என்னும் மன்னரை இவர் பாடினார். இதற்கு அவன் 32,000 பொற்காசுகளைக் கொடுத்தான். கிருஷ்ண பரமாத்மாவுக்கு அழுக்குத் துணியில் முடித்து வைத்த அவலைக் கொடுத்து பெரும் மாட மாளிகைகளைப் பெற்ற குசேலர் —சுதாமா — போல, இவரும் திரும்பிச் சென்ற போது பெரிய வீடு வாசல்களையும் பொருட்களையும் ஏற்கனவே சேர மன்னன் அனுப்பியிருந்ததைக் கண்டு வியந்தார்.
ஒன்று, பத்து ஆகிய பதிகங்கள் கிடைக்காதது தமிழர்களின் துரதிருஷ்டமே.
இவற்றில் இருந்து நாம் அறிவதென்ன?
தமிழ் நாட்டின் செல்வ வளம் அளப்பற்கரியது. பொற்காசுகளின் எண்ணீக்கை அபரிமிதமானது. நம்மால் நம்ப முடியவில்லை. ஆனால் பொற்காசுகள் ஒரு மில்லி கிராமிலும் செய்ய முடியும்.
மன்னர்களின் பெருந்தன்மை கடலினும் பெரிது. இது போல புலவர்களுக்கு வாரி வழங்கிய வள்ளல்கள் வேறு எந்த இலக்கியத்திலும் காணக் கிடைத்தில.
பார்ப்பனர்களிடத்தும் அவர்தம் யாக யக்ஞங்களிலும் மன்னர்களுக்கு இருந்த மதிப்பும் மரியாதையும் பார்ப்பனர்களின் தமிழ்ப் புலமையும் இவற்றிலிருந்து தெரிகிறது.
பெண்களும் கவி பாடுவதில் சளைக்க வில்லை என்பதும் இன்றுபோல் பெண்களுக்கு அன்றும் நகை நட்டுகளில் ஆசை உண்டு என்பதும் ஒன்பது துலாம் பெற்றதில் இருந்து தெரிகிறது. ஆண் புலவர்களுக்குப் பொற்காசு! அம்மையாருக்கு தங்க பிஸ்கட்டுகள்!!!
பத்தாவது வேள்வி இயற்றும் போது மாயமாய் மறைந்த பார்ப்பனப் புலவரும் அவர்தம் மனைவியும் அதிசய நிகழ்ச்சிகளில் அடங்குவர். மேலும் ஆராய வேண்டிய விஷயம்.
பாரி என்னும் சின்ன மன்னனிடம் 300 ஊர்கள் இருந்தன. அது கபிலர் தந்த தகவல். ஒரு சேர மன்னன் ஒரு பிராமணனுக்கே 500 ஊர்கள் கொடுத்ததாகப் பதிகம் கூறுகிறது. ஆக இப்போதைய இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள் இருப்பது போல அந்தக் காலத்தில் எவ்வளவு இருந்தன என்ற புள்ளி விவரத்தையும் சேகரிக்க வேண்டும். இது புள்ளி விவரத் துறை இயலின் கீழ் ஆராயப்பட வேண்டிய விஷயம்.

சேர மன்னர்களின் ஆட்சிக்காலம் பற்றி பதிற்றுப்பத்து தரும் தகவலும் வரலாற்று ஆய்வுக்குத் துணை செய்யும். அவற்றைத் தனியே காண்போம்.
contact swami_48@yahoo.com
Pictures are taken from various sites;thanks.





rcraja2001
/ October 8, 2014கட்டுரை மன்னன் என்பதினை விட கட்டுரை பேரரசு என்பதே தங்களுக்கு சாலப் பொருந்தும்.
Tamil and Vedas
/ October 9, 2014Thanks for your compliments. When I upload 2000 articles I will accept your title and use it. Still 700 more to go!