By ச.நாகராஜன்
Post No1344; Dated 13th October 2014
‘புஷ்பக விமானம் குளுகுளு சாதன வசதியைக் கொண்டது. மனோவேகத்தில் பறக்க வல்லது. பயணிகளுக்குத் தக்கபடி அதன் அளவைக் கூட்ட வல்லது. இதை விஸ்வகர்மா பிரம்மாவிற்காக உருவாக்கினார். பிரம்மா இதைக் குபேரனுக்குத் தர குபேரனிடமிருந்து ராவணன் கவர்ந்து கொண்டான்”
– வால்மீகி ராமாயணம்
இன்னும் 20 வருடங்களில் ஒரு அயல்கிரகவாசியைப் பார்த்து விடுவோம் என்ற நாஸா விஞ்ஞானியின் அறிவிப்பு 2014 ஜூலையில் வெளி வந்து பிரமிக்க வைத்ததைப் பார்த்தோம். இதைத் தொடர்ந்து இதே ஜூலை மாதம் (18-7-2014 ஆங்கில நாளிதழ்களில் வெளியான செய்தியின் படி) சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜே.ஆர்,பகத் என்ற தொல்லியல் ஆராய்ச்சி வல்லுநர் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்கால குகையில் சில ஓவியங்களைக் கண்டு பிடித்துள்ளார். இவை அயல்கிரகவாசிகள் வந்த பறக்கும் தட்டுகளைப் போல உள்ளது என்ற அவரது கூற்றால் சட்டீஸ்கர் மாநில அரசு மேற்கொண்டு இதை ஆராய நாஸாவையும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவையும் அணுகலாம் என தீர்மானித்துள்ளது.
இப்படிப்பட்ட செய்திகள் அவ்வப்பொழுது உலகெங்கிலுமிருந்து வந்து கொண்டே இருக்கின்றன. அயல்கிரகவாசிகள் பறக்கும் தட்டில் பூமிக்கு வருவதை விட ஒரு அதிசயமான செய்தி இந்தியர்களாகிய நாம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விமானம் அமைத்துப் பறந்தோம் என்பது தான்!
2012 இல் வெளியான இந்தச் செய்தி 2013ஆம் ஆண்டில் மிக்க பரபரப்பான ஒன்றாக ஆனது. ரஷிய உளவுத்துறை முகமையான ரஷியன் ஃபாரின் இன்டெலிஜென்ஸ் சர்வீஸ் எனப்படும் SVR இந்தச் செய்தியை வெளியிட்டதால் அதிகாரபூர்வமான ஒன்றாக இது உலகெங்கும் கருதப்பட்டது.
இந்தச் செய்தியின் படி 5000 ஆண்டுகள் பழமையான ஒரு இந்திய விமானம் ஆப்கானிஸ்தானத்தில் ஒரு காலக் கிணற்றில் (TIME WELL) கண்டு பிடிக்கப்பட்டுள்ளது குகை போன்ற இதிலிருந்து விமானத்தை மீட்க முயன்ற எட்டு அமெரிக்கர்கள் காணாமல் போயினர். இது தான் பரபரப்புக்குக் காரணமாகியுள்ளது. மேலை உலகத்தின் பல பிரபலமான தலைவர்கள் இந்த இடத்திற்கு விஜயம் செய்துள்ளது இந்த சம்பவத்தின் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.
ஆப்கனிஸ்தானத்தில் உள்ள பாலைவனத்தில் உளவுப்பணி ஒன்றில் ஈடுபட்டிருந்த போது இந்த அமெரிக்கர்கள் இந்த விமானத்தைப் பார்த்தனர். ஆனால் அதை எடுக்க அவர்களால் முடியவில்லை. எடுக்க விடாமல் அங்கு “ஏதோ ஒரு ஆற்றல்” அதைப் பாதுகாக்கிறது என்பதை அறிந்து கொண்டனர்.
மகாபாரதத்தில் உள்ள 50 அத்தியாயங்களை நன்கு ஆராய்ந்த சர் டெஸ்மாண்ட் லெஸ்லி, ” அதில் குறிப்பிடப்படும் விமானங்கள் உண்மையில் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து வேகத்துடன் பறப்பவை” என்று கூறுகிறார்.
சில வருடங்களுக்கு முன்னால் சீனாவைச் சேர்ந்த சிலர் திபத்தில் உள்ள லாஸாவில் சம்ஸ்கிருத சுவடிகள் சிலவற்றைக் கண்டதாகவும் சண்டிகரில் உள்ள பல்கலைக் கழகத்திற்கு அதை மொழிபெயர்த்துத் தர அனுப்பியதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன.
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெண்மணி டாக்டர் ருத் ரெய்னா (Dr Ruth Reyna) அந்த சுவடிகள் கிரகம் விட்டு கிரகம் செல்லும் விண்கலங்களைப் பற்றி விவரிக்கின்றன என்றார்.
அதில் இருக்கும் புரபல்லர்கள் புவி ஈர்ப்பு விசையை எதிர்த்துச் செல்லும் அமைப்பைக் கொண்டவை என்றும் இதையே நமது பழைய இதிஹாஸங்கள் மற்றும் யோக நூல்கள் லகிமா என்று குறிப்பிடுகின்றன என்று குறிப்பிடுகிறார். இந்தச் சுவடிகள் பல நூற்றாண்டுகள் பழமையானவை என்று குறிப்பிடும் அவர், அதில் அனிமா (யார் கண்களுக்கும் தெரியாமல் மறையும் தன்மை) கரிமா (ஈய மலை போல மிகவும் கனமாக ஆகும் தன்மை).ஆகியவையும் குறிப்பிடப்பட்டுள்ளன என்கிறார்.
மகாபாரதம் குறிப்பிடும் இந்த பறக்கும் விமானங்கள் நான்கு சக்கரங்களையும் 12 அலகுகள் என்ற அளவையும் கொண்டுள்ளதாம்! தீ ஜுவாலையுடன் எழும்பும் இந்த விமானங்களோடு ரெப்ளக்டர் எனப்படும் சூரிய ஒளியை கற்றையாக பிரதிபலிக்கும் அபூர்வ ஆயுதங்களைப் பற்றியும் மகாபாரதம் குறிப்பிடுகிறது. எதன் மீது அந்த ஒளிக்கற்றை செலுத்தப்பட்டாலும் அந்த பொருள் அதே கணம் பஸ்மமாக ஆகி விடும்!
இந்த விவரங்களை எல்லாம் அறிந்து கொண்ட மேலை உலகம் விசித்திரமான இந்த ஆயுதம் தங்களின் எதிர்காலப் போர்களுக்கு உதவும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆகவே அமெரிக்க அரசும் ஐரோப்பிய நாடுகளும் இதன் மீது கவனம் செலுத்தின. இரகசியமாக தங்கள் நாட்டு நிபுணர்களை அனுப்பி அமெரிக்கர்கள் காணாமல் போன மர்மத்தை ஆராயுமாறு அவர்களுக்குக் கட்டளை பிறப்பித்துள்ளன.
பறக்கும் தட்டுகளைப் பற்றி ஆராயும் அமெரிக்க விஞ்ஞானியான டாக்டர் ஃப்ராங்க்ளின் ரூஹெல் தான் மேற்கொண்ட விரிவான ஆராய்ச்சிகள் மூலமாக இந்திய இதிஹாஸங்களான ராமாயணமும் மஹாபாரதமும் அணு ஆயுதங்களைப் பற்றியும் பறக்கும் தட்டுகளைப் பற்றியும் விரிவாக விளக்குகின்றன என்கிறார். பல அறிவியல் தொலைக்காட்சி தொடர்களுக்கும் திரைப்படங்களுக்கும் ஆலோசகராகப் பணியாற்றிய இவரது புத்தகங்கள் பல்லாயிரக்கணக்கில் உலகெங்கும் பரபரப்புடன் விற்பனையாகியுள்ளன.
“இந்திரனுடைய விமானங்களைப் பற்றி 32 விளக்கங்கள் உள்ளன. விமானம் இயக்கும் விதம், அதன் வடிவமைப்பு, ஒளி விளக்குகள் போன்றவை விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சூரியனுடைய ஆற்றலால் இயங்கும் விமானங்கள் இவை. லேசர் ஒளி ஆயுதங்கள், ராடார் திரைகள் ஆகியவை இந்த விமானங்களில் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது” என்று அவர் வியந்து கூறுகிறார்.
டாக்டர் ரூஹெல்லைப் போன்றே பிரம்ம ஞான சபையைச் சேர்ந்த கர்னல் ஆல்காட், பிரிட்டனைச் சேர்ந்த டபிள்யூ..ரேமாண்ட் ட்ரேக், பரத்வாஜ ரிஷியின் விமான சாஸ்திரத்தை ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் வெளியிட்ட மைசூரைச் சேர்ந்த ஜி,ஆர், ஜோஸ்யர், சமிபத்தில் இது பற்றி ஆராய்ந்த கிருஷ்ண குமார், உள்ளிட்ட ஏராளமானோர் பழங்கால இந்திய விமானங் களைப் பற்றிக் குறிப்பிட்டு விரிவாக விளக்கியுள்ளனர்.
இதன் கடைசி அத்தியாயமாக ஆப்கானிஸ்தானத்தில் இந்திய விமானத்தை எடுத்து வரச் சென்ற அமெரிக்கர்கள் மாயமான மர்மம் உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது!
அறிவியல் அறிஞர் வாழ்வில் .. .
விடோல்ட் ஹ்யூர்விஸ் (Witold Hurewicz) என்பவர் பிரபலமான போலந்தைச் சேர்ந்த கணித மேதை. (தோற்றம்: 29-6-1904 மறைவு 6-9-1956) டோபாலஜி என்ற கணிதப் பிரிவில் பல அரிய கண்டுபிடிப்புகளைச் செய்தவர். ஆனால் பெரிய மறதிப் பேராசிரியர்.
பென்ஸில்வேனியாவில் ஒரு முறை சொற்பொழிவு நிகழ்த்த அவர் சென்றிருந்தார். போஸ்டனில் அவருடன் படித்திருந்த அவரது சகாக்கள் பலரும் அதைக் கேட்க ஆவல் கொண்டிருந்தனர். ஆகவே அனைவரும் ஒரு புகைவண்டியில் ஏறி பயணப்பட்டனர். சொற்பொழிவைக் கேட்டு ஆனந்தித்து, பின்னர் டின்னரையும் முடித்துக் கொண்டு அனைவரும் மகிழ்ச்சியுடன் புகைவண்டியில் ஏறி ஊருக்குத் திரும்பினர். ஸ்டேஷனுக்கு அவர்களை வழியனுப்ப வந்திருந்த ஹ்யூர்விஸ் தனது காரைக் காணாமல் திகைத்தார். ஆகவே போலீஸாரிடம் தன் காரை யாரோ திருடி விட்டதாகப் புகாரும் கொடுத்தார்.
சில நாட்கள் சென்ற பின் போலீசார் அவரிடம் வந்து அவரை கார் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விட்டதாகக் கூறினர். கார் அவரது கார் ஷெட்டிலேயே பிலடெல்பியாவில் இருந்தது!
1956ஆம் ஆண்டு இண்டர்நேஷனல் சிம்போஸியம் ஆன் அல்ஜிப்ரெய்க் டோபாலஜி என்ற கருத்தரங்கம் மெக்ஸிகோவில் உக்ஸ்மல் என்ற இடத்தில் நடை பெற்றது அதில் கலந்து கொள்ளச் சென்றார் ஹ்யூர்விஸ். ஒரு நாள் பழைய கால நாகரிகமான மாயா நாகரித்தினர் அமைத்த பிரமிட் ஒன்றின் உச்சியில் ஏறினார். தான் எங்கிருக்கிறோம் என்பது அவருக்கு மறந்து விட்டது. கால் தவறி காலை எங்கோ வைக்க அவர் மேலிருந்து விழுந்து இறந்து போனார். அவரது மறதியே அவர் உயிரைப் பலி வாங்கி விட்ட்து என்கின்றனர் விஞ்ஞானிகள்!
My brother S Nagarajan wrote this article for Tamil Magazine “Bhagya”:swami
Pictures are taken from other websites;not related to this article; thanks.




You must be logged in to post a comment.