கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1389; தேதி நவம்பர் 4, 2014.
தமிழ் என்னும் விந்தை!
சதுரங்க பந்தம் – 7
யாழ்ப்பாணம் மயில்வாகனப் பிள்ளை என்னும் இலங்கையைச் சேர்ந்த கவிஞர் 1911ஆம் ஆண்டு ஒரு அற்புதமான கவிப் பூங்கொத்தை வெளியிட்டுள்ளார்.
‘நகுலேச்சுர விநோத விசித்திர கவிப் பூங்கொத்து’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்து வலிகாமம் வடக்குப் பகுதிப் பிரசித்த நொத்தாரி மயிலிட்டி க.மயில்வாகனப் பிள்ளை இயற்றின’ என்று இயற்றியவரின் பெயரைக் குறிப்பிட்டு 1911ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ‘நாவலம்’ அச்சுக்கூடத்தில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இவர் 1906ஆம் ஆண்டு Notaryயாக வலிகாமம் மேற்குப் பகுதியில் பணியாற்றி வந்துள்ளார்.1907ஆம் ஆண்டு நகுலேச்சுரரைத் துதி செய்து இந்த நூலை எழுதியதாக அவர் குறிப்பிடுகிறார். ஏராளமான சித்திரக் கவிகளைக் கொண்டுள்ள இந்த நூலை 2004ஆம் ஆண்டு மறு பதிப்பாக சென்னை மேடவாக்கம் தேன் புத்தக நிலையம் வெளியிட்டுத் இந்த நூல் மறையாமல் காத்து தமிழுக்குப் பெரும் சேவையைப் புரிந்துள்ளது.
நூலில் இடம் பெற்ற சதுரங்க பந்தத்தை மட்டும் இங்கு காண்போம்:
நீதா சதாபயனே நீபலர்க்குஞ் சாலமயற்
றீதார் மனமகற்றச் சீர்நகுலை – யேகலாற்கொன்
னீடார் மிடற்றகலா நீலா கமலபதா
நீதா பலமகலா நீ
இதன் பதவுரையும் நூலில் தரப்பட்டுள்ளது:
கொள் நீடு ஆர் மிடற்று அகலா நீலா – பெருமை நீடுதல் பொருந்திய கண்டத்தினிடத்தே. நீங்காத நஞ்சக் கறையை உடையவரே!
கமலபதா – தாமரை மலர் போன்ற பாதங்களை உடையவரே!
நீதா – நீதியை உடையவரே!
நீ பலர்க்கும் சால மயல் தீது ஆர் மனம் அகற்றச் சீர் நகுலை ஏகலால் – தேவரீர் பலர்க்கும் (அவர்களுடைய) மனத்திற் பொருந்திய மயக்கமாகிய தீமையை மிகவும் நீக்கும் பொருட்டுச் சிறப்பாகிய
நகுலேச்சுரத்தின் கண் எழுந்தருளுதலால்,
பலம் அகலா நீ – பேறு நீங்காத தேவரீரே!
நீ சதா பயனே தா – தேவரீர் எப்பொழுதும் பேற்றினைத் தந்தருள்க.
இந்தப் பாடலை சதுரங்க பந்தமாக அமைக்கும் விதம் பற்றிய குறிப்பைப் பின் வருமாறு கவிஞர் தருகிறார் :
சதுரங்க பந்தம்
“அது நிரைக்கு எவ்வெட்டாக எட்டு நிரை கொண்ட அறுபத்து நான்கு அறைகளிலே, நான்கு பக்கத்து ஈற்று நிரைகளிலும் நான்காம் அடி தோன்ற, எழுத்துகள் பொதுவின்றி அமையப் பாடுவது”
இந்தக் குறிப்பில் நாம் அறிவது : 64 எழுத்துக்கள் 8 x 8 கட்டங்களில் அமைக்கப்படும் போது ஒவ்வொரு பக்கத்திலும் கடைசி அறைகளில் நான்காம் அடியாகிய ‘நீதா பலமகலா நீ’ என்பது தோன்றும் என்பதே!
இனி பாடலை சதுரங்கக் கட்டங்களில் அமைத்துப் பார்ப்போம்:
இந்தப் பாடலை எப்படிப் படிப்பது?
பாடல் செல்லும் கட்டங்களின் வழியைக் காண்போம்: 1,2,10,9,17,18,19,11,3,4,12,20.28.27.26.25.33,34,35,36,37,29,21,13,5,6,14,22,30,38,46,45,44,43,42,41, 49,50,51,52,53,54,55,47,39,31,23,15,7,8,16,24,32,40,48,56,64
பாடல் முழுதுமாக அமைந்து விட்டது. அத்துடன் நான்கு பக்கங்களிலும் “நீதா பலமகலா நீ” என்ற கடைசி அடியும் அமைந்து விட்டது. (ஈற்றடி மேலே சதுரங்க அறைகளில் மஞ்சள் வண்ணத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது). ஈற்றடி மேலே இடமிருந்து வலமாகவும் கீழே வலமிருந்து இடமாகவும் அமைந்திருக்கிறது. அதே போல வலப்பக்கம் மேலிருந்து கீழாகவும் இடப்பக்கம் கீழிருந்து மேலாகவும் அமைந்துள்ளது.

பாடலை அமைத்த கவிஞரின் கவிதைத் திறன் கண்டதால் ஏற்பட்ட வியப்புடன் தமிழ் காட்டும் விந்தை ஒன்றை அறிந்ததால் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது!
Written by my brother S Nagarajan for nilachara.com:– swami
*****************


You must be logged in to post a comment.