கட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1487; தேதி 15 டிசம்பர், 2014.
தமிழ் என்னும் விந்தை! -12
சருப்பதோபத்திரம் – 1
சதுரங்க பந்த விந்தையைத் தொடர்ந்து இன்னொரு விசித்திரமான சித்திர கவி சருப்பதோபத்திரம். இதைப் பற்றி அழகுற தனது ‘சித்திர கவி விளக்கம்’ நூலில் பேரறிஞர் பரிதிமால் கலைஞர் விளக்குவதைப் பார்ப்போம்:
சருப்பதோபத்திரம் என்பது, நான்கு புறத்தும் வாயில்களை உடையதாய் ,நினைத்த வழியால் செல்லத் தக்கதாய்ச் சமைக்கப்படும் ஒரு வீடு. அது போல எப்பக்கத்திலே தொடங்கிப் படித்தாலும் அச்செய்யுளே ஆகும் படி எவ்வெட்டெழுத்து உடைய நான்கு அடிகள் உடையதாய் அறுபத்து நான்கு அறைகளிலே முதல் அறை தொடங்கி ஒரு முறையும், இறுதி அறை தொடங்கி ஒரு முறையுமாக இரு முறை எழுதி இயையுமாறு பாடப்படும் செய்யுள் சருப்பதோபத்திரம் என்னப்படும்.
‘ஸர்வதோபத்ரம்’ என்பது சருப்பதோபத்திரம் எனத் தற்பவமாய் நின்றது. ஸர்வதஸ் – எப்பக்கத்தும்
பத்ரம் – வாயில் என்பது அவயவப் பொருள்
இதன் இலக்கணத்தை,
“இரு திறத் தெழுதலு மெண்ணான் கெழுத்துடை
யொருசெய்யு ளெண்ணென் ணரங்கினு ளொருங்கமைத்
தீரிரு முகத்தினு மாலை மாற்றாய்ச்
சார்தரு மாறியுஞ் சருப்பதோ பத்திரம்”
என்னும் மாறனலங்காரச் சூத்திரத்தால் உணர்க.
சர்ப்பதோபத்திரத்தின் உதாரணமாக பரிதிமால் கலைஞர் தரும் செய்யுள் இது:-
“மாவா நீதா தாநீ வாமா
வாயா வாமே மேவா யாவா
நீவா ராமா மாரா வாநீ
தாமே மாரா ராமா மேதா”
இதன் பொருள் :- மாவா – பெருமையை உடையவனே! நீதா – நீதியை உடையவனே! தா நீவா மாவா – வலிமை நீங்காத செல்வம் உடையவனே! யாவாமே மேவா யாவா (மே வாயாவா யா ஆமே) – சேரக் கடவாய் வாயாதனவாக எவை தாம் ஆகும்? நீ வா – நீ வருதி ராமா மாரா – இராமனை ஒப்பவனே; மன்மதனை ஒப்பவனே! ஆ – காமதேனுவை ஒப்பவனே! (அன்றி இடபம் போன்றவனே!) ஆமா – ஒழுங்குடையவனே! மேதா – நல்லுணர்வு உடையவனே! மே மார் ஆர் – மேன்மை பொருந்திய நின் மார்பில் உள்ள ஆத்தி மாலையை நீ தா – நீ தருதி
ஆமன் – ஒழுங்குடையவன்; மேதன் – அறிவுடையவன்; நீதன் – நீதியை உடையவன்; தா – வலிமை; மார் – மார்பு என்பதன் கடைக்குறை விகாரம்
இனி செய்யுளை 64 அறை கட்டங்களில் அடைத்துப் பார்ப்போம்:
இந்தச் செய்யுள் ஒரு அற்புதமான செய்யுள். இதை எட்டு விதமாகப் படிக்க முடியும். எழுத்துக்கள் அப்படி அமைந்து நிற்கின்றன.
1) நான்கு நான்கு வரிகளாக முதல் அறையிலிருந்து வலப்பக்கமாக வாசித்தல்
2) வாசித்தவாறே இறுதியிலிருந்து முதல் வர வாசித்தல்
3) முதல் அறையிலிருந்து மேலிருந்து கீழாக வாசித்தல்
4) வாசித்தவாறே கீழிருந்து மேலாக வாசித்தல்
5) முதல் வரியின் இறுதிக் கட்டத்திலிருந்து மேலிருந்து கீழாக வாசித்தல்
6) வாசித்தவாறே கீழிருந்து மேலாக வாசித்தல்
7) இறுதி வரியின் முதல் தொடங்கி இடப்பக்கமாக வாசித்தல்
8) அப்படியே இறுதியிலிருந்து முதல் வரை வாசித்து முடித்தல்
ஆக இப்படி எட்டு விதமாக எந்தப் பக்கம் வாசித்தாலும் பாடல் அமைகிறது. வாயிலாக எதைக் கொண்டு நுழைந்தாலும் செய்யுளைப் படிக்க முடியும்.
இந்த எட்டு வழி வாயில் கவிதை தமிழின் விந்தைகளில் ஒன்று அல்லவா!
மேலும் சில சருப்பதோபத்திரச் செய்யுள்களைக் காண்போம்.
– தொடரும்



Parameswaraiyer Ambikapathy
/ December 15, 2014What a wonderful composition.
Thank you from the bottom of my heart for providing us with such valyable wealth in Tamil & Vedas….pl continue……..will read with great genuine interest
Ambi
Dr P Ambikapathy
Date: Mon, 15 Dec 2014 06:12:13 +0000
To: aonedoctor@hotmail.com