
புல், ஊசி, கண்ணாடி, முள் உவமைகள்
கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 1495; தேதி 18 டிசம்பர், 2014.
சூரியனையும், சந்திரனையும், தாமரையையும், ரோஜாவையும் உவமையாகக் கையாள எந்தக் கவிஞராலும் முடியும். ஆனால் முள், புல், ஊசி, கண்ணாடி முதலிய உவமைகளை அதிகம் காண முடியாது. மஹாபாரதத்தில் உள்ள மூவாயிரத்துக்கும் மேலான உவமைகளில் எள்ளும் முள்ளும் புல்லும் இடம் பெறுகின்றன.
எள் என்பது தானியங்களில் சிறியது ஆகையால் சின்னப் பொருட்களை ஒப்பிடவும், பிறரை சிறுமைப் படுத்தி மட்டம் தட்டவும் எள் உவமை பயன்படுகிறது. தமிழில்கூட அவனை ‘’எள்’’ளி நகையாடினர் என்று இளப்பமாகக் கூறுவதுண்டு. இதே போல கடுகு, வெண் கடுகு ஆகியவற்றையும் ஒப்பிடுவர்.
சீதையைப் பற்றிக் கூறும் இராட்சசர்கள், அவளை எள் அளவுக்குக் கிழித்து விழுங்குவோம் என்று பயமுறுத்துகின்றனர் (3-231-5).
மஹாபாரதத்தில் ராமர், சீதை கதைகள் உண்டு. ஆனால் ராமாயணத்தில் மாபாரத கதபாத்திரங்களின் பெயர்கள் வாரா.
சகுந்தலை ஆகாய மார்கமாகவும் அரசன் துஷ்யந்தன் தரை மார்கமாகவும் பயணம் செய்வது மஹா மேருவுக்கும் கடுகுக்கும் உள்ள அளவுக்குப் பெரிய வித்தியாசம் ஆகும் என்பது இன்னும் ஒரு உவமை (1-69-3)
புல்
எலும்பும் தோலுமாக இருந்த சாணக்கியனைப் பார்த்து நந்த வம்ச அரசர்கள் சிரித்தனர். அதற்குக் காரணம் அவர் ஒரு புல் தடுக்கி விழுந்ததாகும். உடனே அவர் அந்தப் புல்லைப் பிடுங்கி இது போல உன் வம்சத்தையும் வேரறுப்பேன் என்று சபதம் செய்தார். தனது உச்சுக் குடுமியை அவிழ்த்து சபதம் செய்த அவர், நந்த வம்சத்தை வேருடன் சாய்க்கும் வரை குடுமியை முடியேன் என்றும் சபதம் செய்ததாக வரலாறு. இறுதியில் சொன்னபடியே நந்த வம்சத்தை ஒழித்து மௌரிய வம்சத்தைப் பதவியில் அமர்த்தினார்.
பாரதியாரும் கூட காலா! என் காலருகே வாடா! உன்னை சிறு புல் என மதிக்கிறேன் – என்று புல் பற்றிப் பாடுவார்.
மாபாரதப் போர் நிகழாமல் தடுக்கும் முயற்சியை ஒரு கை அளவு புல் கொண்டு இமயமலையை மறைப்பதற்குச் சமம் என்று பீமன் யுதிஷ்டிரனிடம் சொல்லுவதாக ஒரு உவமை 3-36-22
சீதையுடன் ராவணன் பேச வந்தபோது அவள் —- இருவர் இடையேயும் ஒரு புல்லைப் போட்டாள். ராவணனை சிறு புல் என என மதிப்பதாகப் பொருள். இது வால்மீகி, துளசி, அத்யாத்ம ராமாயணங்களிலும் வருகிறது.
தொல்லை கொடுப்போரையும், தொல்லைகளையும் முள்ளுக்கு ஒப்பிடுவது வழக்கம். இடும்பி என்பவளை ஒழிக்க சூளுரைக்கும் பீமன், அந்தக் காட்டையே முள்கள் இல்லாமல் செய்வதாகக் (3-12-72) கூறுகிறான். தமிழில்கூட முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும் என்ற பழமொழி உண்டு.

ஊசி
மஹாபாரதத்தில் முக்கிய மேற்கோள் பஞ்ச பாண்டவர்களுக்கு ‘’ஊசி முனை இடத்தைக் கூட கொடுக்க முடியாது’’ — என்று துரியோதணன் கூறுகிறான்.
யயாதி என்னும் மன்னன் சர்மிஷ்டையின் அழகைப் பாராட்டும் போது ஊசி அளவுக்குக் கூட மாசு மருவற்ற அழகி அவள் என்று புகழ்கிறான்(1-77-14).
கண்ணாடி உவமை
கண்ணாடி உவமை எல்லா மொழி இலக்கியங்களிலும் இருக்கும். மஹாபாரதத்தில் சகுந்தலை அதைப் பயன்படுத்துகிறாள். தன்னை மறந்துவிட்ட துஷ்யந்தனைக் கண்டிக்கும்போது, ஒவ்வொருவனும் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்க்கும் வரை தானே உலக அழகன் என்று நினைக்கிறான் என்று சொல்லி ஒரு இடி இடிக்கிறாள்.
இவ்வாறு மாபாரதத்தில் 232 பொருட்கள் பல இடங்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.
(உவமை வரும் ஸ்லோகங்கள் வேண்டுவோர் எனது ஆங்கிலக் கட்டுரையில் அவற்றைக் காண்க)

You must be logged in to post a comment.