தமிழகத்தின் விச்சுளி வித்தை!

rope1
Famous Indian Rope Trick

கட்டுரையை எழுதியவர் :– S Nagarajan
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1505; தேதி 22 டிசம்பர், 2014.

“ ஒரு கயிறு செங்குத்தாக நிற்க அதில் ஒரு பையன் ஏறிக் காட்டும் இந்தியக் கயிறு வித்தையை என் கண்களால் நானே பார்த்தேன்” – முகலாய சக்கரவர்த்தி ஜிஹாங்கீர்

அறிவியல் வியந்து ஆராயும் கலைகளுள் முக்கியமானது இந்தியாவில் தோன்றிய யோகா. இந்தியாவிலும் தமிழகத்தைச் சேர்ந்த சித்தர்கள் ஆற்றிய, ஆற்றி வரும் அற்புதங்கள் ஏராளம். அத்தோடு தமிழகத்தில் பழைய நாட்களில் பெரும் கலைஞர்கள் ஜல ஸ்தம்பனம், வாயு ஸ்தம்பனம் ஆகியவற்றுள் தேர்ச்சி பெற்று அவற்றின் அடிப்படையிலான வித்தைகளைச் செய்து காட்டி உலகோரை வியக்க வைத்தனர்.

நல்ல வேளையாக இப்படிப்பட்ட வித்தைகளில் சிலவற்றைத் தமிழ் இலக்கியம் பதிவு செய்திருக்கிறது. அவற்றில் ஒன்று வியக்க வைக்கும் விச்சுளி வித்தை.

rope4

விச்சுளி வித்தை என்றால் என்ன? கூத்தாடுகின்றவள் கழை மீது ஏறி அதிலிருந்தபடியே பல வித்தைகளைச் செய்து காட்டுவாள். திடீரென தன் மூக்கில் இருந்த ரத்தின மூக்குத்தியைக் கழற்றி நழுவ விடுவாள். அது கீழே சற்று தூரம் இறங்கு முன், “விச்சுளி” என்னும் பறவை போலக் கழை மேலிருந்து கீழே பாய்ந்து, அதனைக் கையினால் தொடாமலேயே, பாய்ச்சலிலேயே மூக்கில் கோர்த்துக் கொண்டு கீழே குதிக்காமல், அந்தரத்தில் இருந்தபடியே பின்னும் மேலே பாய்ந்து கழை மேல் ஏறிக் கொள்வாள்.

நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கும் இந்த விச்சுளி வித்தையைச் செய்து காட்டுபவர்கள் பலர் தமிழகத்தில் இருந்தார்கள் என்றால் பிரமிப்பாயில்லை?!

இதைப் பற்றிய வரலாறு ஒன்றை தொண்டை மண்டலத்துச் சதகம் கூறுகிறது.

தொண்டைமண்டலத்தில் இருந்த 24 கோட்டங்களில் ஒன்றான புழற் கோட்டத்தின் அருகில், “அயன்றை” என்னும் சிற்றூரில் பெரும் பிரபுவும், சிறந்த தியாகியும், வேளாண்குடியில் பிறந்தவருமான சடையநாத வள்ளல் என்பவர் விறலியர் வகுப்பினரை ஆதரித்து வந்தார். அந்த வகுப்பைச் சேர்ந்த பாணக்கூத்தி ஒருத்தி பாண்டிய மன்னனின் அரண்மனையில் கழைக்கூத்து வகையில், “விச்சுளி வித்தையைச்” செய்து காட்டினாள்.

ndian-rope-trick-set-1127-p

அந்தக் கூத்தியின் அழகையும் வித்தையின் நேர்த்தியையும் பார்த்த பாண்டியனின் மனைவி , தனது சூழ்ச்சியால் அந்த வித்தையைப் பாண்டிய மன்னன், பார்க்காதவாறு செய்து விட்டாள். ஆனால் எல்லோரும் புகழ்வதைக் கேட்ட பாண்டியன், அந்த வித்தையைத் தனக்காக மீண்டும் ஒருமுறை செய்து காட்டுமாறு கூத்தியை வேண்டினான். ஆனால் கூத்தியோ,” ஆறு மாத கால அளவு, சுவாச பந்தனம் என்னும் மூச்சை அடக்கிப் பழகும் பயிற்சியைச் செய்து தேகத்தைப் பலப்படுத்திய பின்னரே இந்த வித்தையை மீண்டும் செய்ய முடியும். அதை மீறி உடனடியாகச் செய்தால் நான் இறந்து படுவது உறுதி” என்று பதில் கூறினாள். ஆனால் அரசனோ விளைவைச் சரியாக ஆராயாமல் உடனடியாகச் செய்து காட்டுமாறு கூத்தியைப் பணித்தான்.

அரசன் ஆணையினால் சாகத் துணிந்த அந்தக் கூத்தியரின் தலைவி கழையேறி, “விச்சுளி” பாயும் போது, ஆகாயத்தில் பறந்து போகும் பறவைகளைப் பார்த்து, “பறவைகளே பாண்டியனின் மனைவி, என் மேல் பொறாமை கொண்டு பாண்டியனைத் தன் பக்கம் திருப்பி, எனது அரிய வித்தையைப் பாராமல் இருக்கச் செய்து விட்டான். அதனால் நான் மீண்டும் அந்த வித்தையை இப்போது செய்து காட்டிச் சாகப் போகிறேன். நீங்கள் தொண்டை மண்டலத்தின் புழல் கோட்டத்திற்குப் போவீர்களானால், அயன்றை நகரில் வாழ்பவனும், எத்தகைய பொருள் கேட்டாலும் இல்லை என்னாது கொடுப்பவனுமாகிய சடையநாதப் பிரபுவைக் கண்டு இங்கு நடந்த இந்தச் செய்தியைச் சொல்லுங்கள்” என்ற கருத்தை அடங்கிய கீழ்க்கண்ட செய்யுளைச் சொன்னாள்”

INDIAN ROPE TRICK

“மாகுன்றவாய பொற்றோளான் வழுதிமன் வான்கரும்பின் பாகொன்று சொல்லியைப் பார்த்தென்னைப் பார்த்திலன் பையப் பையப் போகின்ற புள்ளினங்காள்! புழற்கோட்டம் புகுவதுண்டேல் சாகின்றனளென்று சொல்வீர் அயன்றைச் சடையனுக்கே”

இப்படிப் பாடி விட்டு வித்தையைச் செய்து காட்டி விட்டு அவள் இறந்து போனாள்.

ஆக வாயு ஸ்தமபனத்தில் வல்லவர்கள் தமிழகத்தில் இருந்து பெரும் புகழ் பெற்றிருந்தனர் என்பதை வரலாறு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

இந்தச் செய்தியை தொண்டை மண்டலச் சதகம் கீழ்க்கண்ட பாடல் மூலம் தெரிவிக்கிறது:-

“பாகொன்று சொல்லியைப் பார்த்தமை
யாலன்று பாண்டியன்முன்

நோகின்ற சிற்றிடை வேழம்

கூத்தி கொடிவரையில்

சாகின்றபோது தமிழ் சேர்

அயன்றைச் சடையன்றன்மேல்

மாகுன்றெனச் சொன்ன பாமாலை
யுந் தொண்டை மண்டலமே”

தொண்டை மண்டலத்தின் பெருமைகளைக் கூறும் நூறு பாடல்களில் முக்கியமான விச்சுளி வித்தையை விளக்கும் பாடல் 33வது பாடலாக அமைகிறது.

இந்த வித்தையை மனக்கண்ணால் ஒரு முறை கற்பனை செய்து பார்த்தால் எவ்வளவு பெரிய அரிய செயலைத் தமிழ்ப் பெண் ஒருத்தி செய்து காண்பித்திருக்கிறாள் என்பதை உணரலாம்.

மனித சக்தி எவ்வளவு எல்லையற்ற ஆற்றல் உடையது என்பதைக் காண்பிக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக விச்சுளி வித்தை அமையும் போது அதைச் செய்து காண்பித்த தமிழ்ப் பெண்மணியை சூப்பர் பவர் கொண்டுள்ள அதிசயப் பெண் என்று கூறுவதில் தவறில்லையே!

Indian-Rope-Trick

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..
மிகுந்த கூச்ச சுபாவம் உடைய பால் டிராக் (Paul Dirac) பற்றி ஏராளமான சுவையான சம்பவங்கள் உள்ளன. இவரது நண்பர் வெர்னர் ஹெய்ஸன்பர்க்கும் ஒரு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி தான். 1929ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு மகாநாட்டில் கலந்து கொள்ள இருவரும் ஒரு கப்பலில் பயணம் மேற்கொண்டனர். இருவருமே மிகவும் இளவயதினர். மணமாகாதவர்கள். ஹெய்ஸன்பர்க்கோ எப்போதும் இளம்பெண்களுடன் நடனம், அரட்டை என நேரத்தைப் போக்குபவர். பால் டிராக்கோ தனியே மௌனமாக இருப்பவர். “ஏன் இப்படி நடனம் ஆடுகிறீர்கள்?” என்று ஹெய்ஸன்பர்க்கிடம் பால் டிராக் கேட்டார். “அவர்கள் நைஸ் கேர்ள்ஸ் (nice girls). அவர்களுடன் நடனம் ஆடுவதே ஒரு ஆனந்தம்” என்று பதில் சொன்னார் ஹெய்ஸன்பர்க்.

“நடனம் ஆடுவதற்கு முன்பேயே அவர்கள் நைஸ் கேர்ள்ஸ் என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டார் பால் டிராக்!

kingfisher

விக்னர் என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியின் சகோதரியான மார்ஜிட் என்பவரை பால் டிராக் மணந்தார். மார்ஜிட் விவாகரத்து ஆனவர். ஒரு முறை ஒரு நண்பர் டிராக்கின் வீட்டிற்கு வந்த போது மார்ஜிட்டைக் கண்டு திகைத்தார். ஒரு பெண்மணி டிராக்குடன் இருப்பதை அவரால் நம்பவே முடியவில்லை. ஒரு அழகிய பெண்மணி தன்னுடன் இருப்பதைப் பார்த்து வியக்கும் நண்பரைப் பார்த்த பால் டிராக்,”இவர் விக்னரின் சகோதரி. இப்போது என்னுடைய மனைவி” என்று கூச்சத்துடன் கூறினார்.மார்ஜிட்டுடனான டிராக்கின் வாழ்க்கையில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகள் இன்னும் ஏராளம் உண்டு!

Contact swami_48@yahoo.com

king2

Vichuli=King Fisher Bird
*******************

Leave a comment

Leave a comment