தமிழ் என்னும் விந்தைக் கடல்!

tamil kadal2

தமிழ் என்னும் விந்தை! -27

 

Research article written by ச.நாகராஜன்

Article No. 1560; posted on 9th January 2015

 

தமிழ் என்னும் விந்தைக் கடல்!

 

தமிழ் என்னும் பிரம்மாண்டமான கடலை நீந்திக் கடந்தாரில்லை. அதில் பிரம்மாண்டமான பனிப்பாறையின் ஒரு முனையைச் சிறிது பார்ப்பது போல சில சித்திரக் கவிகளை இது வரை கண்டோம். இன்னும் ஆயிரக்கணக்கில் பல்வேறு பந்தங்களில் தமிழ் பாடல்கள் மலர்ந்துள்ளன. இவற்றை ஒருங்கு சேர்ந்து சித்திரக் களஞ்சியமாக்க வேண்டுவது நமது கடமை. இறைவன் அருள் இருப்பின் பல பாகங்களில் இதைச் செய்து முடிக்க எண்ணம் உள்ளது.

 

தமிழ் இறைவனின் மொழி. செம்மொழி.மந்திர மொழி.அருள் மொழி. நுணுக்கமான மொழி. இயற்கையின் அடிப்படையிலும், மனித உடல்கூறின் அடிப்படையிலும் பேசுவதற்கு எழுந்த மொழி. பல ரகசிய கலைகளை சொற்களிலும் அதன் ஒலிகளிலும் அடக்கிய மொழி. அதைப் பேசுபவர்களுக்கு இனிமையை அருளும் மொழி. பேசும் போது உபயோகிக்கும் சொற்களால் பல் வேறு நலங்களைத் தரும் மொழி. இறை அருளாளர்கள் அற்புதமான சொற்சேர்க்கை களால் பாக்களை அருளி அனைவரையும் உத்வேகமூட்டி எழ வைக்கும் மொழி. இன்னும் தமிழ் விடு தூது போன்ற நூல்களில் விவரிக்கப்பட்ட அரும் நலன்களையும் குணங்களையும் கொண்ட மொழி. சுருக்கமாகச் சொல்லப் போனால் அறம். பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளையும் சுலபமாக அருளும் மொழி!

tamil kadal 1

இலக்கணக் கட்டமைப்பு வாய்ந்த பழம் பெரும் மொழி என்பதால் இதில் கவிதை எழுதுவது என்பது சுலபமல்ல. பல்வேறு கலைகளையும் இயற்கை ரகசியங்களையும் கற்றுத் தேர்ந்து மொழிப் புலமை பெற்று இறைவனின் அருளைப் பெற்றவரே நின்று நிலைக்கும் கவிதைகளை அருள முடியும்.

 

கவி என்பார் நான்கு வகைப் படுவர். 1)ஆசு கவி 2) மதுர கவி 3) சித்திர கவி 4) வித்தார கவி.

 

இன்னொரு வகையாகப் பிரிப்போர் 1)கடுங்கவி 2) இன்கவி 3) அருங்கவி 4) பெருங்கவி என்பர்.

 

ஆசு கவி என்போர் தொடுத்த பொருளும், தொழுத்த சூழலும், அடுத்த தொடையும் வழுவாமற் கடுத்துப் பாடுவர்.

மதுர கவி என்போர் சொற் செல்வமும் பொருள் பெருமையும் கொண்டதாய், தொடையும் தொடை விகற்பமும் கொண்டு உருவக முதலாகிய அலங்காரங்களையும் கொண்டு ஓசைப் பொலிவு உடையதாய் உய்த்துணரும் புலவருக்கு ஒலிக் கடல் அமிழ்தம் போன்று இன்பம் பயக்கப் பாடுவோர் ஆவர்.

 

சித்திர கவி என்போர் மாலைமாற்று முதலாகிய அரும் கவிகளைப் பாடும் திறன் உடையவர் ஆவர்.

வித்தார கவி என்போர் மும்மணிக் கோவை, பன்மணி மாலை, மறம், கலிவெண்பா மடலூர்ச்சி ஆகியவற்றோடு நெடும்பாட்டும், கோவையும், பாசண்டமும், கூத்தும், விருத்தமும், கதையும் உள்ளிட்ட செய்யுளும் இயல் இசை நாடகம் ஆகியவற்றோடு  கூடிய கலை நூல்களோடு பொருந்தப் பாடும் பெருங் கவி ஆவர்.

இந்த நாற்வகைப்பட்ட கவிஞர்கள் ஆயிரமாயிரம் பேர் லட்சக் கணக்கான தமிழ் பாடல்களைப் பாடியுள்ளனர். இவற்றைக் கற்றலே, அவை காட்டும் மெய்ப்பொருள் படி நிற்றலே உண்மை இன்பம்.வாழ் நாள் முழுவதும் கற்க வேண்டிய தமிழ்க் கடலில் நீந்துவதே ஒரு சுகானுபவம்.

tamil kadal 3

தமிழ் என்னும் விந்தையின் இந்த முதல் பாகத்தில் சில சித்திர பந்தங்களைப் பார்த்தோம். இன்னும் சுவைக்க வேண்டியவை ஏராளம். விரைவில் அடுத்த பாகத்தில் விந்தையைத் தொடருவோம்.

 

இந்தத் தொடரை வெளியிட்ட நிலாச்சாரல் ஆசிரியர் திருமதி நிர்மலா ராஜுவுக்கும், நிலாச்சாரல் குழுவினருக்கும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் வாழ்க! வெல்க!!

                        முற்றும்

This series (27 parts) was written by my brother Santanam Nagarajan for nilacharal.com magazine. This is the final part.

tiruchendur1

contact swami_48@yahoo.com

Leave a comment

Leave a comment