தமிழ் திரைப்படங்களில் ராமர் – 3

rojaraja

Post No 1641; Dated 11th February 2015

written by Santanam Nagarajan

by ச.நாகராஜன்

Part 2 is published under the Title:– ஒரு வில், ஒரு சொல், ஒரு இல்!(தமிழ் திரைப்படங்களில் ராமர் – 2 (Post No 1635; Dated 9th February 2015)

கம்பனின் கவினுறு பாடல்கள்

மாபெரும் கற்புக்கரசியாகவும், பேரழகியாகவும், திருவுடைச் செல்வியாகவும் விளங்கிய சீதையையும் ராமனையும் கம்பனைப் போல ரசித்து, வணங்கித் தொழுது புகழ்ந்தவ வேறு யாரும் இல்லை.

 

அவனிடம் ராமருக்ர்கும் சீதைக்கும் எல்லாமும் இருப்பதாகப் புகழ்கிறீர்களே, அவர்களுக்கு இல்லாதது ஒன்றுமே இல்லையா என்று கேட்ட போது, உடனே, பளிச்சென்று இருக்கிறதே, “ஐயனுக்கு வசையில்லை; அன்னைக்கு இடையே இல்லை” என்று பதில் அளித்தானாம்!

அவனது பெண் பார்க்கும் படலத்தின் சிறப்பை பல நூறு பாடல்கள் காட்டினாலும் எடுத்துக் காட்டிற்கு இங்கு மூன்றே மூன்று பாடல்களை மட்டும் பார்க்கலாம்:

 

“எண் அரும் நலத்தினாள் இனையள் நின்றுழி,

கண் ஒடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று

உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட,

அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள் – மிதிலைக் காட்சிப் படலம்  பாடல் 35

அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள் – இந்த வரி உலக இலக்கியத்தில் ஏற்படுத்திய, ஏற்படுத்தும் தாக்கம் பற்றி எழுத ஒரு தனி நூல் அல்லவா வேண்டும்!

 

மருங்கு இலா நங்கையும், வசை இல் ஐயனும்,

ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்,

கருங் கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ!   – பாடல் 38

நங்கைக்கு இல்லாதது இடை; நம்பிக்கு இல்லாதது வசை!கண்ணோடு கண் நோக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல! விஷ்ணு லோகத்தில் பாற்கடலிலிருந்து பிரிந்து வந்து மீண்டும் ஒருவரை ஒருவர் மீண்டும் பார்த்தவர்கள் பேசவும் வேண்டுமோ!

rama green

சீதையின் அழகு!

 

அடுத்து சீதையின் அழகு எப்படி இருந்தது? ஒரே ஒரு பாடலை மட்டும் இங்கு காணலாம். கோலங்காண் படலத்தில் 28வது பாடலாக மலர்கிறது இது:

பொன்னின் ஒளி,

பூவின் வெறி,

சாந்து பொதி சீதம்,

மின்னின் நிழல் – அன்னவள் தன் மேனி ஒளி மான,

அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழுதும் நாண,

மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள்

இதைப் படித்தோருக்கு கம்பனை முழுவதுமாகக் கற்கும் ஆசை எழுவது இயல்பே அல்லவா!

கவிஞன் கம்பனைத் திட்ட வேண்டும் என்று அவனது காவியத்தில் குதித்து அதிலிருந்தும் அதன் சுவையிலிருந்தும் மீள வழி தெரியாமல் திகைத்து பெரும் ஆத்திகனாக மாறி பல ஆயிரம் பாடல்களைப் பாடினார் கண்ணதாசன் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்!

ஆகவே தான் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் தான் அனுபவித்து மகிழ்ந்த கம்பனைத் தமிழ் மக்களுக்குத் தன் பாடல்கள் மூலம் இனம் காட்டி மகிழ்ந்தார்

அவர்.


rama sudhai

‘ஜனகனின் மகளைபாடல்

கண்ணதாசன் பாடல் எழுத எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைக்க பி.சுசீலா பாடிய இன்னொரு பெண் பார்க்கும் படலப் பாடல் 1976ஆம் ஆண்டு வெளியான ரோஜாவின் ராஜா படத்தில் இடம் பெற்றது. இயக்குநர் கே.விஜயன்.

சிவாஜிகணேசன், ஏ.வி.எம்.ராஜன், வாணிஸ்ரீ, மேஜர் சுந்தரராஜன் என பிரபல நடிகர்கள் நடித்து வெளியான படம் இது. கதையின் நிலைக்களனுக்கு ஏற்ப இந்தப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது. வாணிஸ்ரீ பாடலைப் பாட சிவாஜிகணேசனும் ஏ.வி.எம்.ராஜனும் அதைக் கேட்க சிவாஜி தன் முகபாவங்களினாலேயே வேதனையைத் தெரிவிக்கும் காட்சி இது.பாடலைப் பார்ப்போம்:

ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான்

ராஜாராமன் நினைத்திருந்தான்

அவள் சுயம்வரம் கொள்ள மன்னவர் சிலரும் மிதிலைக்கு வந்திருந்தார் –

மிதிலைக்கு வந்திருந்தார் .

மணிமுத்து மாணிக்க மாடத்தில் இருந்து ஜானகி பார்த்திருந்தாள்

இரு மைவிழி சிவக்க மலரடி கொதிக்க ராமனைத் தேடி நின்றாள்

நாணம் ஒருபுறம் ஆசை ஒருபுறம் கவலை மறுபுறம்

அவள் நிலைமை திரிபுறம்

கொதிக்கின்ற மூச்சு மாலையில் விழுந்து மணியும் கருகியதே

அவள் கூந்தலில் இருந்த மலரும் ஜானகி நிலைமைக்கு உருகியதே

 

நெஞ்சை மறைத்தாள் நினைவை மறைத்தாள் கண்களை மறைக்கவில்லை

அவள் மஞ்சள் முகத்தில் ஓடிய கண்ணீ ர் மறைத்தும் மறையவில்லை


rama garland

முனிவன் முன்புறம் ஸ்ரீராமன் பின்புறம்

சீதை தனியிடம் அவள் சிந்தை அவனிடம்

 

மன்னவர் எல்லாம் சுயம்வரம் நாடி மண்டபம் வந்து விட்டார்.

ஒரு மன்னவன் யாரோ வில்லை எடுத்தான் ஜானகி கலங்கி விட்டாள்

ஜானகி கலங்கி விட்டாள்.

 

ஜானகி கலங்க கதாநாயகியும் கண்களில் நீர் விழ எழுந்து செல்கிறாள்.பாடல் முடிகிறது. பாடலின் பின்னணியில் அழகிய சித்திரக்காட்சிகளாக சீதையின் படமும் பல்லக்கும் பல்லக்கின் முன்புறமும் பின்புறமும் பலரும் செல்வதும் சித்தரிக்கப்படுகிறது.

ராமரின் கதை எந்தச் சூழ்நிலைக்கும்  ஏற்பக் கையாளப்பட முடியும் என்பதைச் சுட்டிக் காட்டும் பாடல் இது. நேயரின் விருப்பமாக இது இன்றும் கேட்கப்பட்டு ரசிக்கப்படுகிறது.

சுயம்வரத்தில் சீதை வரும் காட்சியை அமைத்த கம்பரின் காவிய வரிகளை முதலில் மேலே பார்த்தோம். திரைப்படக் காட்சிக்கேற்ப கண்ணதாசன் அமைத்த வரிகளையும் மேலே பார்க்கிறோம். ஒப்பிட்டு மகிழலாம்.

ராமரின் பெருமையே பெருமை!

 

– தொடரும்

Leave a comment

Leave a comment