தமிழர்கள் இழந்த நாடுகளும் நூல்களும்

sangam-map1

தமிழ் பூமி- தமிழ் நாடு

Research Paper written by London swaminathan

Research Article No.1652; Dated 15th February 2015.

தமிழ் நாட்டுக்குத் தெற்கே இப்பொழுதுள்ள கன்யாகுமரியைத் தாண்டி ஒரு பெரிய நிலப்பரப்பு இருந்ததும், அது அடுத்தடுத்து வந்த இரண்டு சுனாமி கடல் எழுச்சியால் அழிந்து போனதும் மறுக்க முடியாத உண்மைகள். இதற்கு இலக்கியச் சான்றுகள் இருப்பதோடு கடலியல், பூகர்ப்பவியல் சான்றுகளும் உள.

இந்து மகாசமுத்திர கடலுக்கடியில் உள்ள மலைகள் படத்தை நேஷனல் ஜியாக்ரபிக் மேகசின் (மாத இதழ்) சில ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டது. அதிலும் ஒரு புறம் லட்சத் தீவுகள் வரையிலும் மறுபுறம் அந்தமான் நிகோபர் தீவுகள் – இந்தோ நேஷியத் தீவுகள் வரையும் கடலடி மலைகள் இருப்பதைக் காண முடிகிறது. மிகவும் பழங்காலத்தில் ஆஸ்திரேலியா வரை நிலமும் கடலும் விட்டு விட்டு இருந்திருக்கலாம். ஆனால் இதெல்லாம்- ஒருவேளை நாகரீகம் மிக்க மனித இனமே தோன்றாத காலத்து இருந்திருக்கலாம்.

நாம் அறிந்த – தென் தமிழ் நாட்டை மூழ்கடித்த சுனாமி எல்லாம் 2300 அல்லது 2500 ஆண்டுகளுக்கு முன் நடந்தவையே. இதை மொழி இயலும் மெய்ப்பிக்கிறது.

மூன்று தமிழ் சங்கங்களும் சுமார் 300 அல்லது 500 ஆண்டுகளுக்குள்தான் இருந்திருக்க முடியும் என்பதை எனது மூன்று தமிழ் சங்கம் பற்றிய கட்டுரையில் எழுதிவிட்டேன். அதாவது இரண்டாவது தமிழ் சங்க காலப் பாடல்கள் என்று நாம் எதை எதை அறிந்திருக்கிறோமா அவை எல்லாம் அதிக மொழி வேற்றுமை உடையன அல்ல. ஆகவே ஏறத்தாழ ஒரே காலத்தில் உருவானவையே.

south_east_asia_map

தமிழ்க் கொடி பறந்த நாடுகள்

சிலப்பதிகாரமும் கலித்தொகையும்

தென் மதுரை, கபாடபுரம் ஆகிய பாண்டியத் தலைநகர்களை கடல் அழித்தது பற்றி சிலம்பும் கலியும் செப்புவது என்ன?

“வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை;

ஊழிதோறு ஊழி உலகம் காக்க;

அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி

வடிவேல் எறிந்த வான்பகை பொறாது

பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்

குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள

வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு

தென்  திசை ஆண்ட தென்னவன் வாழி!

(காடுகாண் காதை,சிலப்பதிகாரம்)

—இளங்கோ தந்த இதே செய்தியை முல்லைக் கலியில் சோழன் நல்லுருத்திரனும் (கலித் தொகை) சொல்கிறார்:

map-5

கர்நாடக பிரதேசம்

மலிதிரையூர்ந்து தன் மண்கடல் வௌவலின்

மெலிவின்றி மேல் சென்று மேவார் நாட்டு இடம்படப்

புலியொடு வில்நீக்கிப் புகழ் பொறித்த புகழ் கெண்டை

வலியினான் வணக்கிய வாடாச் சீர்த் தென்னவன்

(முல்லைக் கலி, கலித்தொகை)

அதாவது கடல் கொண்ட பகுதிகளுக்கு நஷ்ட ஈடு கோருவதுபோல இமயம் வரை உள்ள பூமியை வென்றான் தென்னவன் (பாண்டியன்). சுனாமிக்கும், வட இமய விஜயத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லாவிடினும் புகழ்ச்சிக்காக இப்படிப் பாடுவதுண்டு. வட திசையை வென்றதும் உண்மை- தென் திசையை கடலுக்குப் பலி கொடுத்ததும் உண்மைதான். கவிஞர்கள் இணைத்துப் பாடுவது மட்டுமே செயற்கையானது.

பரசுராமன் கேரள பூமியைக் கடலில் இருந்து மீட்டுக் கொடுத்ததால் மலையாள பூமிக்குப் ‘’பரசுராம க்ஷேத்திரம்’’ — என்ற பெயர் உண்டு. இதுவும் பழைய சுனாமியின் போது கடல் பின்னாலுக்குப் போனவுடன் வெளிவந்த பூமியாக இருக்கலாம். ஆயினும் இதை நிரூபிக்க நமக்கு உறுதியான சான்றுகள் வேண்டும்.

Chola_dynasty_map_-_Tamil

தமிழர்கள் இழந்த பூமி பற்றி அடியார்க்கு நல்லார் , தனது சிலப்பதிகார உரையில் நமக்குத் தெரியாத செய்திகளைச் செப்புகிறார்:

“அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடஎல்லை ஆகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவதவாறும் இவற்றின் நீர்மலிவான் என மலிந்த ஏழ் தெங்க நாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ் முன் பாலை நாடும், ஏழ் பின்பாலை நாடும், ஏழ்குன்ற நாடும், ஏழ்குணகரை நாடும், ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிந்தது”.

அடியார்க்கு நல்லார் பொய் சொல்லவோ எட்டுக்கட்டி கதை எழுதவோ தேவை இல்லை. அவர் சொல்வது எல்லாம் உண்மை என்பது அர்த்தசாஸ்திரத்தில் (கி.மு.300) பாண்டிய கவாடம் என்னும் முத்து பற்றிக் குறிப்பதாலும், வால்மீகி ராமாயணம் கபாடபுரம் என்னும் இரண்டாம் தமிழ் சங்க ஊர் பற்றிக் குறிப்பிடுவதாலும், ராமனுக்கு நினவுப் பரிசாக இலங்கை அரசன் விபீஷணன் ஏழு தங்கப் பனைமர பொம்மைகளைக் (ஏழ்குறும் பனைநாடு) கொடுத்ததாலும், பரசுராமன் காலத்தில் கேரள பூமி கடலுக்கு மேலே வந்ததாலும் உண்மை என்று உறுதியாகிறது.

அடியார்க்கு நல்லார் 700 காதம் என்பதை சிலர் 7000 சதுர மைல் என்பர். அது மிகப் பெரிய நிலப்பரப்பு. அவ்வளவு இருக்க முடியாது. இரண்டு முறை அடுத்தடுத்து சுனாமிப் பேரலைகள் தாக்கியதால் பாண்டிய மன்னன் இருமுறை தலை நகர்களை மாற்றினான். ஆகவே 700 சதுர மைல்களாவது கடலுக்குள் போயிருக்கலாம்.

2000px-India_Tamil_Nadu_locator_map.svg

பஃறுளி என்ற ஆறு வட எல்லையாக இருந்தது. குமரி ஆறு தென் எல்லையாக இருந்தது. இதன் இடையே இருந்த தென் மதுரையைக் கடல் விழுங்கியதால் முதல் தமிழ் சங்கத்தை இழந்தோம். அதன் பிறகு கபாடபுரம் தலை நகரமானது. 200 அல்லது 300 ஆண்டுகளுக்குள் அதையும் கடல்கொண்டது. பின்னர் தற்போதைய மதுரையில் மூன்றாம் தமிழ் சங்கம் நிறுவப்பட்டது. தலைநகர் மாற்றம் பற்றி ரோமானிய யாத்ரீகர்களும் சொல்லுவதால் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்த கபாட புரம் அதற்குப் பின் கடலுக்குள் போனதாகவும் ஊகிக்கலாம்.

இந்துமத நூல்கள் 7 கடல், 7 மலை, 7 தீவுகள் என்று ரிக் வேத காலம் முதல் கூறிவருகிறது. இதே போல தமிழர்களும் ஏழு , ஏழாக நாடுகளைப் பிரித்திருப்பது பொருள் பொதிந்ததே. மேலும் கங்கை முதல் காவிரிவரையுள்ள 700 காதம் என்று ஒரு தமிழ் கல்வெட்டு கூறுவதால் நமக்கு அடியார்க்கு நல்லார் கூறும் “700 காவத” விஷயமும் உண்மையே எனக் காட்டும். (நாடு என்பது சங்க காலத்தில், ஒரு தாலுக்கா அல்லது ஜில்லா (வட்டம்/மாவட்டம்) அளவுடைய நிலப்பரப்புகள்).

historical_map_of_Tamil_Nadu

பழந்தமிழ் நாடு

தமிழர் இழந்த நூல்கள்

தமிழ் தாத்தா உ.வே சாமிநாத அய்யர் என்ற ஒருவர் மாட்டு வண்டியில் ஊர் ஊராகச் சென்று சுவடிகளைச் சேகரித்து, நமக்குக் கொடுத்திராவிடில் தமிழர்களின் வரலாறு முற்றிலும் அழிந்திருக்கும். பழைய உரைகளில் இருந்து இது வரை தமிழர்கள் இழந்த நூல்கள் என்ன என்ன என்பதை அறிய முடிகிறது. ஆனால் அடியார்க்கு நல்லார் சொல்லும் பாண்டிய மன்னன் பெயரும் (சயமா கீர்த்தி), கீழேயுள்ள பல நூல்களும் சம்ஸ்கிருதச் சொற்களுடன் இருப்பதையும் நோக்குதல் வேண்டும். தொல் பழங்காலத்தில் மொழிக் காழ்ப்புணர்ச்சி இல்லை என்பதை இது காட்டும்:

u-v-2

அகத்தியம், அவிநயம், இசை நுணுக்கம், மயேச்சுரம், மாபுராணம், பூதபுராணம் ( தமிழ் புலவர்கள் வேண்டுகோளை எல்லாம் புறக்கணித்து கணவன் சிதைத் தீயில் பாய்ந்து உயிர்நீத்த பாண்டியன் மனைவி “பூத”ப்பாண்டியன் தேவி என்று புறநானூறு சுட்டுவதையும் நினைவிற்கொள்க), பனம்பாரம், பல்காப்பியம், பன்னிருபடலம், முதுகுருகு, முதுநாரை, முறுவல், சயந்தம், பரதம், செயிற்றியம், பெருங்கலம், பஞ்சமரபு, இந்திரகாளியம், காக்கைபாடினியம், நற்றத்தம், வாய்ப்பியம், வியாழமாலை, பரத சேனாபதீயம், சிற்றடக்கம், பெரும்பொருள் விளக்கம், வெண்டாளி, களரியாவிரை, வாமனம், வையாபிகம், சிகண்டியம், பஞ்சபாரதீயம், குணநூல், மதிவாணம், கழாரம்பம், சங்கயாப்பு, துராலிங்கம் – முதலிய நூல்களின் பெயர்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

உரைகாரர்கள் மேற்கோள் காட்டியதன் பெயரில் இந்த நூல்களின் பெயர்களும் அவற்றில் உள்ள சில செய்யுட்களும் நமக்குக் கிடைத்துள்ளன.

வாழ்க தமிழ்! வாழ்க நற்றமிழர்!!

Leave a comment

Leave a comment