Written by லண்டன் சுவாமிநாதன்
Research Article No. 1690; Dated 4 March 2015.
நாங்கள் தஞ்சாவூர்க்காரர்கள். நான் பிறந்தது நாகப்பட்டிணம் அருகிலுள்ள கீழ்வளூர். வளர்ந்தது மதுரையில். பெண்ணை மணந்தது நெல்லையில். ஆகையால் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” —என்று மூன்று மாவட்டத்தில் சொந்தம் கொண்டாடுவது வழக்கம்!
(கேளிர்= சொந்தக்காரர்கள்)
என் (தஞ்சைப்) பாட்டி முதலியோர் சொல்லிக் கேட்ட பழமொழி “மாசி நிலா பாசி படரும்” — என்பது. ஆனால் பழமொழி அகராதியில் அந்தப் பழமொழி இல்லை. “மாசிச் சரடு அல்லது மாசிக் கயிறு பாசி படரும்” என்று மாசி மாத இறுதியில் வரும் காரடையான் நோன்பைச் சிறப்பிக்கும் பழமொழியையும் காணோம். எது எப்படியாகிலும் அனுபவ உண்மை ஒன்றே போதும். கிராமப் புறங்களில் வசிப்போருக்குத் தெரியும் மாசி மாத பௌர்ணமியன்று நிலவு வெளிச்சம் மிகவும் பளிச்சென்று இருக்கும் என்பது — குளத்தில் உள்ள பாசியில் — வீட்டின் கொல்லைப் புறத்தில் உள்ள பாசியில் கூட — நிலவொளி பட்டுப் பளபளக்கும் – அதன் மீது படரும் — என்பது.
கும்பகோண மஹாமக குளம்
எல்லா மாத பௌர்ணமிகளையும் விட அதிக வெளிச்சம் உடையது மாசி நிலவு. ஆகையால்தான் பெரும்பாலான கோவில் தெப்ப உற்சவங்களையும், ரத உற்சவங்களையும் இந்த நாளில் வைத்தனர் இந்துப் பெரியோர்கள். மாசி மாதம் உற்சவம் இல்லாத கோவில்களே இராது.
இந்துக்கள் மிகவும் புத்திசாலிகள். மின்சார விளக்கு இல்லாத காலத்தில் எப்படிப் பெரிய பண்டிகளைக் கொண்டாடுவது என்று யோசித்தார்கள். பக்கத்து கிராமங்கள் எல்லாவற்றிலும் இருந்தும் கட்டை மாட்டு வண்டிகளிலும், பாத யாத்திரையாகவும் பல்லாயிரக் கணக்கான மக்கள் வர வேண்டுமே! அப்போதுதான் நமது சாது சந்யாசிகளுக்கு ஒரு யோஜனை பிறந்தது. எல்லா பௌர்ணமி நாட்களையும் பண்டிகைகளாகக் கொண்டாடுவோம் என்று.
ஒவ்வொரு மாத பௌர்ணமியும் இந்துக்களுக்கு பெரிய பண்டிகைதான். அப்போது ஒரு சிறிய பிரச்சனை எழுந்தது. நாட்டில் சில பகுதிகளில் வெவ்வேறு பருவங்களில் மழை பெய்யுமே! கேரளா, கர்நாடகம் என்றால் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்களுக்கு மழை கொட்டித் தீர்க்குமே. தமிழ் நாடானால் ஐப்பசி –கார்த்திகை அடைமழைக் காலம் என்று பழமொழி உள்ளதே. சந்திரனையே பார்க்க முடியாதே. அப்படியானால் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய ஐந்து மாதப் பௌர்ணமிகளைப் பெரிதாகக் கொண்டாடுவோம் என்று தீர்மானித்தனர். அப்பொழுதும் ஒரு பெரிய பிரச்சனை எழுந்தது. சித்திரை வைகாசியில் கோடை வெய்யில் கொளுத்தித் தள்ளுமே என்றனர். அப்படியானால் மாசி மாத பவுர்ணமியை, முக்கியமாக வைத்துக் கொள்வோம் என்றனர். பருவ நிலை மிகவும் சாதகமான பௌர்ணமி மாசி என்று கண்டதால் எல்லா கோவில்களிலும் மாசியைக் கொண்டாடுவோம் என்று தீர்மானித்தனர். தைப் பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், சித்திரா பௌர்ணமி, வைகாசி விசாகம் என மாதம் தோறும் பௌர்ணமி உற்சவங்களை அறிவித்து அதற்குத் தக நல்ல புராணக் கதைகளையும் கண்டுபிடித்து ஒட்டுப் போட்டனர்.அவை பொய்க்கதைகள் அல்ல. இருந்த கதைகளை அழகாக இணைத்தனர்!
வடலூர் தைப்பூசம், மதுரை சித்திரா பௌர்ணமி போன்ற பண்டிகைகளுக்கு லட்சக் கணக்கில் மக்கள் வந்தாலும் சிரமமின்றி. குளிக்கவும் குடிக்கவும் – தண்ணீர் பிரச்சனை இன்றி கொண்டாடும் காலம் என்பதால் மாசி மாதத்திலேயே அதிகமான பெரிய பண்டிகைகள் வருகின்றன.
சிவன் மீதே காமக் கணைகள தொடுத்த மன்மதனை எரித்த காமதகனம் (காமன் பண்டிகை), வசந்த காலம் வரப் போவதை எண்ணி வண்ணப் பொடிகளை வீசி மகிழும் ஹோலி பண்டிகை, குழந்தைகளைக் கொன்று வந்த பிரஹலாதன் சகோதரி ஹோலிகாவை சம்ஹாரம் செய்த ஹோலிகா சம்ஹாரம், அவள் உருவ பொம்மையை எரித்தல், அத்தோடு “பழையன கழிதலும் புதியன புகுதலும்” முறையே என்று பழைய பொருள்களை சொக்கப் பனை கொளுத்தல் ஆகிய எல்லாம் சேர்ந்து மாசி மாத பௌர்ணமியைன் மகிமையை உயர்த்தியது.
மாசி மாத பௌர்ணமியில் சந்திரனும் மக நடசத்திரமும் உச்சமாகும்போது சந்திரனுக்குத் தெற்கில் ஒரு நட்சத்திரம் தள்ளில் காற்பங்கு நாசம், இரண்டு தள்ளில் அரைப்பங்கு நாசம், மூன்று தள்ளில் முக்காற்பங்கு நாசம், சந்திரனுக்கு வடக்கு தள்ளில் மிகவுஞ் சவுக்கியம் என்று அபிதான சிந்தாமணி எனும் தமிழ் கலைக்களஞ்சியம் செப்பும்:–
திருச் செந்தூர் கோவில் ( திருச் சீரலைவாய்)
காணு மாசிக்கலை மதியை கருது மக மீனான்கதனில்
பேணும்தென்பான் மீன் சேரிற் பெரிதாமஃ கந்தானென்ப
பூணில் இரண்டு முக்காலாம், பொருந்து மூன்றிற் பாதியதாம்
சேணில் வடபால் மீன் சேரிற் செகத்திலன்னம் சிறிதாமே
என்றும் சிந்தாமணி செப்புகிறது.
மாசி மாதத்தில் பௌர்ணமி ஏற்படுகையில் நிலவு மக நட்சத்திரத்திற்கு அருகில் இருப்பது போலத் தென்படுவதால் மாசி மகம் என்ற பெயரும் ஏற்பட்டது (வான சாத்திரப் படி சந்திரன் (நிலவு) என்பது பூமியில் இருந்து இரண்டரை லட்சம் மைல் தொலைவில் உள்ளது. ஆனால் ‘ரெகுலஸ்’ என்று அழைக்கப்டும் மக நட்சத்திரமோ கோடி கோடி கோடி மைல்கள் தள்ளி இருக்கிறது)
மஹாமகம்
இதோடு கும்பகோணத்தில் உள்ள ஆறு ஏக்கர் பரப்புடைய மஹா மக குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கங்கை, யமுனை, சரஸ்வதி உள்பட எல்லா புனித நதிகளும் சங்கமம் ஆவதாக நம்பிக்கை இருப்பதால் புனித நீராடலும் நடைபெறுகிறது. அடுத்த மஹாமகம் 2016-ல் நடைபெறும். சிம்ம ராசியில் குரு பிரவேசிக்கும் போது குடந்தையில் உள்ள எல்லா கோவில் கடவுளரும் மக்களுடன் சேர்ந்து நீராடி நம் பாவங்கள் அனைத்தையும் கழுவுவர்.
மாசி மாத பண்டிகைகள்: ஹோலி, காரடையான் நோன்பு, காமதகனம், நடராஜர் அபிஷேகம், மாசி மகம், பல கோவில்களில் தேரோட்டம், தெப்ப உற்சவம், திரு மோகூரில் கஜேந்திர மோட்ச லீலை, பிரம்ம ஸாவர்ணி மன்வாதி, தீர்த்தவாரி, பால்குடம். திருச்செந்தூர், கோயம்புத்தூர், பெருவயல் தேரோட்டம், திருக்கண்ணபுரம், குடந்தை கோவில்களில் விழா.மதுரை, திருப்பரங்குன்றம் கோவில் விழாக்கள், நடராஜர் உள்ள கோவில்களில் அபிஷேகம். சுருஙகச் சொன்னால் கோவில் எங்கும் விழாக்கள். இன்னும் ஒரு சிறப்பு: — வைஷ்ணவர்களும், சைவர்களும், சாக்தர்களும், கௌமாரர்களும் (குமரன் எனும் முருகனை வழிபடுவோர்) விழா எடுக்கும் ஒரே நாள்—மாசி மகத் திரு நாள்!
–சுபம்–





You must be logged in to post a comment.