சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
Article No 1730; Date 19th March 2015
Written by S Nagarajan
லண்டன் நேரம் காலை 4-55 am
24. செம்மறி ஆட்டுக் கூட்டம்!
ச.நாகராஜன்
நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:
अपराह्नच्छायान्यायः
aparahnacchaya nyayah
அபராஹனச்சாயா நியாயம்
சாயா – நிழல்
மாலை நேர நிழல் பற்றிய நியாயம் இது
ஒருவனின் வாழ்க்கையில் வளம் குன்றிக் கொண்டே போகிறது. அல்லது பாசத்தின் அடிப்படையிலான நெருக்கம் தேய்பிறை போலக் குறைந்து கொண்டே வருகிறது. அப்போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும். மங்கும் செல்வம் அல்லது குறையும் உறவின் நெருக்கம் ஆகியவை மாலை நேர நிழலுக்கு ஒப்பிடப் படுகிறது. இருள் சூழும் போது நிழலும் இருக்காது. அது போல இன்னும் சிறிது காலத்தில் இப்போது இருப்பதும் போய் விடும்.
इषुवेगक्षयन्यायः
ishuvegaksaya nyayah
இஷுவேகக்ஷய நியாயம்
வில்லிலிருந்து விடுபட்ட அம்பு பற்றிய நியாயம் இது.
வில்லிலிருந்து ஒரு அம்பு எய்யப்பட்டவுடன் அது இலக்கை நோக்கி வேகமாகச் செல்லும். அது தனது இலக்கைத் தாக்கும் வரை ஓயாது. அது போல ஒரு இலட்சியத்தைக் கொண்டுள்ள ஒரு மனிதன் தன் இலட்சியத்தை அடையும் வரை ஓயமாட்டான். தன் இலட்சியத்தை அடைந்தவுடன் எப்படி அம்பை எய்தவுடன் ஒருவன் வில்லைக் கீழே வைக்கிறானோ அதே போல அவனும் தன் கருவிகளைக் கீழே வைத்து விட்டு ஓய்வு எடுப்பான்.
கருமமே கண்ணான ஒருவன் பற்றிய செய்யுளை ஏற்கனவே பார்த்துள்ளோம்:-
குமரகுருபரர் இயற்றியுள்ள நீதிநெறி விளக்கம் நூலில் 52வது பாடலாக அமைந்துள்ளது இது.
மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணாயினார்
செவ்வி அருமை – காலத்தின் அருமை
गड्डरिकाप्रवाहन्यायः
gaddarikapravaha nyayah
கட்டரிகா ப்ரவாஹ நியாயம்
தொடர்ந்த ப்ரவாஹத்தைக் குறிக்கும் நியாயம் இது.
நாம் அனைவரும் அறிந்த செம்மறியாட்டுக் கூட்டம் பற்றிய நியாயம் இது. ஒரு செம்மறி ஆட்டுக் கூட்டத்தில் ஒரு ஆடு கிணறில் தவறி வீழ்ந்து விட்டால், அனைத்து ஆடுகளும் கிணற்றில் விழும்.
ஒரு செயல் சரியா, தவறா என்பதையெல்லாம் பாராது, குருட்டுத்தனமாக ஒருவன் செய்யும் செயலையே அனைவரும் செய்ய ஆரம்பித்தால் செம்மறி ஆட்டுக் கூட்டம் போல என்ற இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும். சாய்ஞ்சா சாயற பக்கமே சாயற செம்மறி ஆடுகளா என்று திரைப்படப் பாடல் ஒன்று கூட இதைச் சுட்டிக் காட்டுவதை நோக்கலாம்.
घुणाक्षरन्यायः
ghunaksara nyayah
குணாக்ஷர நியாயம்
பூச்சி ஒன்று மரத்தில் எழுத்தைப் பொறித்தது பற்றிய நியாயம் இது. மரத்தில் பூச்சி ஊர்ந்து ஏற்படுத்தியவை எழுத்துக்கள் போல தற்செயலாக அமைந்திருப்பதைப் பார்த்து விட்டு வியக்கிறோம். பழைய புத்தகத்தைப் பிரித்துப் பார்க்கும் போது உள்ளே பூச்சி அரித்ததால் ஏற்பட்ட அரிப்பு எழுத்துப் போல இருப்பதைப் பார்த்து வியக்கிறோம்.
தற்செயலாக அல்லது அதிர்ஷ்டவசமாக ஏற்படுவனவற்றைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படும்.
तदागमे हि तद दृश्यते
tadagame hi tad drisyate
ததாகமே ஹி தத் த்ரிஷ்யதே நியாயம்
ஒரு அரிய குணம் இயல்பாக வராமல் வேறு இடத்திலிருந்து அடையப்பட்டிருப்பதை இந்த நியாயம் சுட்டிக் காட்டும்.
தீ மூட்டப்பட்டு அதனால் ஏற்படும் வெப்பத்தின் காரணமாகவே எண்ணெய் கொதிக்கிறது. ஆகவே வெப்பம் என்பது எண்ணெயினால் ஏற்பட்ட ஒன்றில்லை; அது தீயினால் ஏற்பட்ட ஒன்று. இன்னொருவன் மூலம் அடையப்பட்ட குணத்தை அல்லது சக்தியை அல்லது ஒரு பேறை ஒருவனுக்குரியதாக எண்ணி விடக் கூடாது அடுத்தவனிடம் கடன் வாங்கிப் பெற்று மகுடம் சூடிக் கொள்வதை இந்த நியாயம் எடுத்துக் காட்டுகிறது.
*************





You must be logged in to post a comment.