Article No.1746; Date:- 24 March, 2015
Written by S.NAGARAJAN
Uploaded at London time காலை 10-47
சம்ஸ்கிருதச் செல்வம் – இரண்டாம் பாகம்
26. வசந்த கால வருகையும் புண்ணிய பலனும்!
ச.நாகராஜன்
நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:
तृणजालुकन्यायः
trnajalauka nyayah
த்ருணஜாலுக நியாயம்
புழு பற்றிய நியாயம் இது.
ஒரு புழுவானது தான் இருக்கும் இலையை விட்டு இன்னொறு பற்றுக்கோடு இல்லாமல் அகல்வதில்லை. இது போலவே ஒருவன் இன்னொரு நல்ல வேலை கிடைக்காமல் இருக்கும் போது கையிலிருக்கும் வேலையை விட்டு விடக் கூடாது. இன்னொரு வருவாய்க்கான வழி இல்லாமல் இருக்கும் போது கையில் இருக்கும் வேலையை விடலாமா?
ஆங்கிலப் பழமொழியான ‘A bird in hand is worth two in the bush’ என்ற பழமொழியை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
द्राविडप्राणायामन्यायः
dravidapranayama nyayah
த்ராவிட ப்ராணாயாம நியாயம்
ப்ராணாயாமத்தை செய்ய வேண்டிய முறையில் செய்யாமல் மிகவும் கஷ்டமான முறையில் செய்வது பற்றிய நியாயம் இது.
பிராணாயாமம் செய்வதற்கான வழி முறைகள் உள்ளன. மூக்கை கைவிரல்களால் பிடித்து மூச்சை உள்ளிழுத்து, நிறுத்தி, பின்னர் வெளியே விடுவதற்கு உரிய முறையை குருவிடமிருந்து கற்க வேண்டும். ஆனால் இப்படிச் செய்யாமல் கையைக் கழுத்தைச் சுற்றி வளைத்து மூக்கைத் தொட்டால் அது எப்படி இருக்கும்?
சுலபமாகச் செய்ய வேண்டிய ஒரு காரியத்தை அப்படிச் செய்யாமல் சுற்றி வளைத்துக் மிகவும்கஷ்டப்பட்டுச் செய்யும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.
धर्मवसन्तागमन्यायः
dharmavasantagama nyayah
தர்ம வசந்தாகம நியாயம்
செய்த தர்ம காரியங்கள் பற்றி – அதாவது புண்ணியம் பற்றியும் வசந்தகால வருகையையும் பற்றிய நியாயம் இது.
வசந்த காலம் வரும் போது இயற்கையின் மலர்ந்த சூழ்நிலை மனதைக் கவரும் ஒன்று. மரங்கள் செழிக்கும். புஷ்பங்கள் பூத்துக் குலுங்கும். மனோரம்யமான சூழ்நிலை உருவாகும். அனைவரின் மனதிலும் ஆனந்தம் ஏற்படும். இது போல தர்ம காரியகளினால் ஏற்படும் புண்ணியம் சேர்ந்தவுடன் செல்வமும் ஆனந்தமும் தானே தொடர்ந்து வரும்.
தர்மம் செய்ய வேண்டுவதன் அவசியத்தை இந்த நியாயம் வலியுறுத்துகிறது.
धान्यपलालन्यायः
dhanyapalala nyayah
தான்யபலால நியாயம்
நெல்லும் களையும் பற்றிய நியாயம் இது.
நெல்லை விதைக்கும் போது சரியாக விதைக்க வேண்டும். இல்லையேல் களையாக மாறி விடும். இதே போல ஞானம், பக்தி ஆகிய விதைகள் மனதில் சரியாக விதைக்கப் பட வேண்டும். தேவையற்ற களை போன்ற எண்ணங்களை விளைவிக்க வழி வகுத்து விடக் கூடாது. கவனம் தேவை என்கிறது இந்த நியாயம்.
नष्टाश्वदग्धरथन्यायः
nastasvadagdharatha nyayah
நஷ்டாஸ்வதக்த ரத நியாயம்
அஸ்வம் – குதிரை; ரதம் – வண்டி
சேதம் அடைந்த வண்டியையும் குதிரையையும் பற்றிய நியாயம் இது.
இந்த நியாயம் எழுந்ததற்கான கதை இது தான்:- ஒருநாள் இரண்டு பேர்கள் தங்கள் தங்கள் வண்டியில் அயலூருக்குப் புறப்பட்டுச் சென்றனர். செல்லும் வழியில் ஒருவனது குதிரை தொலைந்து விட்டது. இன்னொருவனுடைய வண்டியோ இரவில், கிராமத்தில் வண்டியை நிறுத்தி இருந்த சமயத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் எரிந்து விட்டது. இருவரும் சேர்ந்து குதிரையை இருக்கின்ற வண்டியில் பூட்டி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். ஒற்றுமையே பலம் என்பதை உணர்த்த வந்த நியாயம் இது. ஒருவருக்கொருவர் உதவினால் அனைவருமே பயன் பெற முடியும்!
Pictures are used from face book and other sites;thanks.
*************






You must be logged in to post a comment.