‘நோகாது உண்பவர் கல்வியை நோற்பவர்’: சுவையான கதை!

gurukulam

குரு குல முறையில் வேதாத்யயனம்

Article written by London swaminathan

Post No. 1780; Date 6th April 2015

Uploaded from London at  காலை 9-22

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் 
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி 
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் 
கருமமே கண்ணாயி னார்நீதி நெறி விளக்கம்

 

ஒரு செயலில் முனைப்பாக இருப்பவர் உடலுக்கு வரும் வருத்தம், நோய் நொடிகளைப் பொருட்படுத்த மாட்டார். பசித்தாலும் கவலைப்படமாட்டார். தூங்க மாட்டார். யாரேனும் கெடுதல் செய்தாலும் அதையும் மனதிற் கொள்ளார். காலம் பற்றியும் கவலைப்படமாட்டார். தனக்கு வரும் அவமதிப்பையும் எடுத்துக்கொள்ளார்.

கற்றவனுக்கு அடையாளம் என்ன?

ஒரு சுவையான கதை கேளுங்கள். ஒரு படிக்காத இளைஞனை நன்றாகப் படித்த பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தனர். நாளாக ஆக இருவருக்கும் சரிப்பட்டு வரவில்லை. அவளும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் ‘வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல’ இவனை குத்திக் காட்டினாள். இவன் ஒரு முடிவுக்கு வந்தான். நன்கு கல்வி கற்ற பின்னரே வீட்டுக்கு வருவேன் என்று சொல்லி விட்டுப் புறப்பட்டான்.

ganapati2

நல்ல மாணவர்கள் பசி நோக்கார்

அந்தக் காலத்தில் காசி என்ற தலமே கற்றோர் நிறைந்த ஊர். ஆகையால் பெரிய அறிவாளிகள் எல்லாம் காசிக்குச் சென்று கற்று வருவர். இவனும் காசிக்குப் போனான். அங்கே ஒரு வயதான ஆசிரியரைக் கண்டான். தனது சோகக் கதையைச் சொல்லி தனக்கு கல்வி புகட்டும்படி மன்றாடினான். அவரும் இவனை சிஷ்யனாக ஏற்றார்.

இரண்டு மூன்று ஆண்டுகள் ஓடின. நல்ல சீடனாகவே இருந்து எல்லாவற்றையும் ஆர்வத்தோடு கற்றான். குரு, ஒரு நாள் தனது மனைவியை அழைத்து, நாலை முதல் இவனுக்குப் பரிமாறும் உணவில் ஒரு உத்தரணி (ஸ்பூன்) அளவுக்கு வேப்ப எண்ணையைக் கலந்து பரிமாறு என்றார். ஆனால் அவன் அதைக் கண்டுபிடித்துவிட்டால் அந்த நாளைன்றே என்னிடம் சொல்லிவிடு என்றார்.

குருவின் மனைவிக்கு ஏன் என்று புரியவில்லை. இருந்தாலும் கணவன் இட்ட கட்டளையை மீறாத பத்தினி அவள். அந்த சிஷ்யனும் முகம் கோணாது சாப்பிட்டு வந்தான். குருவின் மனைவிக்குக் கூட கொஞ்சம் பரிதாபம் மனதில் ஏற்பட்டது. வேப்ப எண்ணையைக் கலக்காமல் விட்டுவிடலாமா என்று எண்ணிணாள். ஆயினும் அவளுக்கு அந்தத் துணிவு வரவில்லை.

dhanus

மெய் வருத்தம் பாரார்

இவ்வாறு வேப்ப எண்ணை கலந்த சாப்பாடு மூன்று மாதம் பரிமாறப்பட்டது. ஒரு நாளைக்கு சிஷ்யன், குருவின் மனைவியைப் பார்த்து, “அம்மையே, உங்களுடைய சாப்பாடு எப்போதும் அமிர்தமயமாகவே இருக்கும். கடந்த சில நாட்களாகக் கொஞ்சம் வேறுபாடு தெரிகிறது. ஏதோ வேப்பெண்ணை வாசனை அடிக்கிறது” என்றான். குருவின் மனைவியும் சமாளித்துக் கொண்டு, “அப்படியா? என்ன காரணம் என்று கண்டுபிடிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

ரகசியமாக கணவனிடம் விஷயத்தைச் சொன்னாள், “உங்கள் சீடனுக்குத் தெரிந்துவிட்டது. அவன் வேப்பெண்ணை வாசனையைக் கண்டுபிடித்துவிட்டான்” என்றாள். குரு சிரித்துக் கொண்டே, சிஷ்யனைக் கூப்பிட்டார்.

“சிஷ்யா! நீ நல்ல மாணவன். மூன்று ஆண்டுகளாக எல்லாவற்றையும் உண்மையான ஆர்வத்தோடு பயின்றாய். நீ எல்லாவற்றையும் கற்றுமுடித்த அறிகுறிகள் தென்படுகின்றன. நாளை காலை நீ உன் சொந்த ஊருக்குத் திரும்பலாம். உனக்கு என்னுடைய பரிபூரண ஆசீர்வாதம்” என்றார். சீடனுக்கு மிகவும் சந்தோஷம். மறுநாள் காலையில் தக்க குரு தட்சிணை கொடுத்து, நமஸ்கரித்துவிட்டுப் புறப்பட்டான்.

குருவின் மனைவி வியப்புடன் கேட்டாள், “நாதா! வேப்பெண்ணைக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு விளங்கவில்லையே!”

குரு சொன்னார், “அன்பே, நோகாது உண்பவர் கல்வியை நோற்பவர் என்ற ஆன்றோர் வாக்கை நீ கேட்டது இல்லையா? ஒருவனுக்கு கல்வியில் நாட்டம் உள்ளவரை வேறு எதிலும் சுவை இருக்காது. சொல்லப்போனால் சுவையே தெரியாது. அவனுக்கு கல்வியில் முழு கவனம் இருக்கும் வரை அவனுக்கு ருசியே தெரியவில்லை. அந்த நாட்டம் குறைந்தவுடன் அவனுக்கு ருசி தெரிந்துவிட்டது. ஆகையால்தான் அவனை ஊருக்கு அனுப்பிவைத்தேன். அவன் இனிமேல் பிழைத்துக் கொள்வான்” என்றார்.

children,mumbai

கருமமே கண்ணாயினார்

–சுபம்

Leave a comment

Leave a comment