Honey comb picture தேன் கூடு படம்
Compiled by London swaminathan
Article No. 1791 Date 10th April 2015
Uploaded from London at 8-43
ஒரு காட்டில் ஒரு சாமியார் இருந்தார். அவர் மிகவும் நல்லவர். இதனால் அவர் புகழ் பரவியது. ஒரு வியாபாரி அவரைக் காண வந்தார். அவர் மீது பக்தி பூண்டு, சுவாமிகளே, காட்டுக்குள் தனியாக வசிக்கிறீர்களே, தங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார். அவர் ஒன்றையும் வாங்கிக் கொள்ள மறுத்தவுடன் நான் உங்கள் பூஜைக்குத் தினமும் தேன் அனுப்புகிறேன், என்று சொல்லி தினமும் ஒரு சட்டித் தேனை அனுப்பி வைத்தார்.
அளவுக்கு அதிகமாக தேன் கிடைத்ததால் சாமியார் அதைப் பெரிய பானையில் கொட்டி உறி கட்டி, அதை மேலே தொங்க விட்டார். நாள் ஆக, ஆக தேன் சாப்பிட்டு அவர் உடம்பும் தினவெடுக்கத் துவங்கியது. கற்பனை வெள்ளத்தில் மிதக்க ஆரம்பித்தார்.
அட, இப்படியே நான் நிறைய தேன் சேகரித்தால் ஒரு நாள் அதை விற்று இரண்டு ஆடுகள் வாங்குவேன். அந்த ஆடுகள் சில ஆண்டுகளில் பெருகியவுடன் அதன் ரோமத்தில் கம்பளி நெய்வேன். அதை விற்றுப் பெரிய பணக்காரன் ஆவேன். பின்னர் ஒரு ராஜகுமாரியைத் திருமணம் செய்துகொள்வேன். எனக்கு குழந்தைகள் பிறக்கும்.
அந்தக் குழந்தைகளை மிகவும் கண்டிப்புடன் வளர்ப்பேன். டேய், மகனே இங்கே வா, இதைச் செய் – என்று கட்டளை இடுவேன். அவன் பணத் திமிரில் எனக்குக் கீழ்ப் படியாமல் இருந்தால், இந்தக் கம்பை வைத்து முதுகில் ஒரு அடி கொடுப்பேன் – என்று சொல்லியவாறே பக்கத்தில் இருந்த கம்பை எடுத்து சுழற்றினார். அது மேலே உள்ள தேன் பானையை கீழே தள்ளி சுக்கு நூறாக உடைத்தது. அவரது கனவெல்லாம் தேன் துளிகள் போலச் சிதறின.
ஆசைப் பட்டு மோசம் போனேனே என்று எண்ணி மீண்டும் தவம் செய்யத் துவங்கினார்.
பேராசை பெரு நஷ்டம்!
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் — என்பது பழமொழி. அளவுக்கு மிஞ்சினால் தேனும் விஷம் என்பது புது மொழி.
தேவைக்கு அதிகமாக எதையும் சேர்க்காதீர்கள்.
swami_48@yahoo.com

You must be logged in to post a comment.