
Compiled by S NAGARAJAN
Date: 22 April 2015; Post No: 1820
Uploaded in London 9–35 am
சம்ஸ்கிருதச் செல்வம் – பாகம் 3
1. மான் விழியாளுக்கு எது ஆபரணம் ?
ச.நாகராஜன்
சம்ஸ்கிருதம் என்னும் பெருங்கடலில் கவிதைப் புதிர்கள் சுவாரசியமான ஒரு பகுதி.
ஆயிரக்கணக்கான புதிர்களை நூற்றுக் கணக்கான கவிஞர்கள் இயற்றியுள்ளனர்.
இந்தப் புதிர்களில் பல வகை உண்டு.
சமஸ்யா என்னும் விடுகதைப் புதிர்களில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டு அதில் உள்ள புதிரை விடுவிக்க அறைகூவல் விடப்படும். சாமர்த்தியசாலிகள் அந்தப் புதிரை அவிழ்த்து அனைவரின் பாராட்டையும் பெறுவர்.
இன்னொரு விதம், ஒரு கவிதையில் புதிர் போடப்பட்டிருக்கும்; விடையும் அதே கவிதையில் இருக்கும். இதை “அந்தர் ஆலாப” வகை என்று கூறுவர்.
இன்னொரு விதக் கவிதையில் புதிர் போடப்பட்டிருக்கும்; ஆனால் விடை அந்தக் கவிதையில் இருக்காது; நாம் தான் கண்டு பிடிக்க வேண்டும். இந்த வகையை “பஹிர்-ஆலாப” வகை என்று கூறுவர்.
முதலில் அந்தர் ஆலாப வகை புதிர் கவிதை ஒன்றைப் பார்ப்போம்:-
கிம் பூஷணம் வா ம்ருகலோசனாயா:
கா சுந்தரி யௌவனதுக்கபாரா I
தாதா லிபி வா விததாதி குத்ர
சிந்தூரபிந்துவிதவாலலாடே II
ம்ருகலோசனி – மான்விழியாள்
இந்த்ரவ்ரஜா என்ற சந்தத்தில் அமைந்துள்ள இந்தக் கவிதைப் புதிரின் பொருள் இது தான்:-
மான் விழியாளுக்கு எது ஆபரணம்? – சிந்தூரபிந்து (அதாவது நெற்றியில் இடும் சிந்தூரப் பொட்டு)
எந்த அழகிய பெண்ணுக்கு அவள் இளமையில் துக்கம் ஏற்பட்டு விட்டது? – விதவா (அழகிய இளம் பெண்ணுக்கு)
விதி தலை எழுத்தை எங்கே எழுதியுள்ளது? – லலாடே (நெற்றியில்)

இந்த மூன்று கேள்விகளுக்கும் கடைசி வரி விடையைத் தருகிறது.
சிந்தூர பிந்து விதவா லலாடே! ஆனால் இந்த வரியின் அர்த்தமோ அபத்தம்!
விதவையின் நெற்றியில் இடப்பட்டுள்ள சிந்தூர பிந்து என்பது இதன் பொருள்!
மிதிலையைச் சேர்ந்த வித்யாகர மிஸ்ரா என்பவர் தொகுத்துள்ள வித்யாகர சஹஸ்ரகா என்ற நூலில் இடம் பெற்றுள்ள புதிர் கவிதை இது.
இதையே சற்று மாற்றி இன்னொரு கவிதையும் காணக் கிடைக்கிறது.
கிம் பூஷணம் சுந்தர சுந்தரீணாம்
கிம் தூஷணம் பாந்தஜனஸ்ய நித்யம் I
கஸ்மின் விதாவா லிகிதம் ஜனானாம்
சிந்தூரபிந்துவிதவாலலாடே II
இதன் பொருள் : மிக அழகிய பெண்களுக்கு (சுந்தர சுந்தரி) எது ஆபரணம் – சிந்தூர பிந்து (நெற்றியில் இடப்படும் சிந்தூரப் பொட்டு)
வெளியில் கிளம்பும் ஒருவருக்கு சகுனத் தடை எது? – விதவா – ஒரு விதவையைப் பார்ப்பது!
ப்ரம்மா விதியின் தலையெழுத்தை எங்கே எழுதியுள்ளார் – லலாடே – நெற்றியில்!
கடைசிவரியில் விடை உள்ளது. ஆனால் அது தரும் அர்த்தமோ அனர்த்தம்! – (விதவையின் நெற்றியில் இடப்பட்டுள்ள சிந்தூர பிந்து!)

இனி பஹிர்–ஆலாப வகை புதிர் கவிதை ஒன்றைப் பார்ப்போம்.
கிம் ஸ்யாத் வர்ணசதுஷ்டயேன வனஜம் வர்ணேஸ்த்ரிமிர் பூஷணம்
ஸ்யாதாத்தேன மஹி த்ரயேன து பலம் மத்யம் த்வயம் ப்ராணதம் I
வ்யஸ்தே கோத்ரதுரங்ககாஸகுஸுமான்யந்தே ச சம்ப்ரேஷணம்
யே ஜானந்தி விசக்ஷணா:க்ஷிதிதலே தேஷாமஹம் சேவக: II
கஷ்டமான இந்த கவிதைப் புதிர் ஒரு வார்த்தை விளையாட்டு!
தாமரை என்ற பொருளைத் தரும் நான்கு எழுத்து வார்த்தை எது?
விடை : குவலய(ம்)
அதன் எந்த மூன்று எழுத்துக்கள் ஆபரணத்தைக் குறிக்கும்?
விடை: வலய(ம்) ( a bracelet)
அதன் முதல் எழுத்து பூமியைக் குறிக்கும்! விடை : கு (பூமி)
முதல் மூன்று எழுத்துக்கள் பழத்தைக் குறிக்கும். விடை : குவல
இரண்டு எழுத்துக்கள் சேர்ந்தால் வலிமை என்ற பொருள். (பலம்)

தனித் தனியே பார்த்தால் குடும்பம், குதிரையின் உணவு, பூ, கடைசியில் பார்த்தால் அனுப்புதல் என்ற பொருளைத் தரும்.
இந்தப் புதிருக்கான விடையை அறிந்திருக்கும் சாமர்த்தியசாலிகளுக்கு நான் சேவகன்! – என்று இப்படி கவிஞர் முடிக்கிறார்
சார்த்தூல விக்ரிதம் என்ற சந்தத்தில் அமைந்துள்ள பாடல் இது.
குவலய என்ற ஒரு வார்த்தையை வைத்து கவிஞர் இப்படி ஒரு வார்த்தை சித்து விளையாட்டை விளையாடி விட்டார்!
சம்ஸ்கிருதத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு பொருள் உண்டு என்பதையும் சில எழுத்துக்களின் சேர்க்கை பல பொருள்களைத் தரும் என்பதையும் இதை வைத்துக் கவிஞர்கள் புதிர் போடுவர் என்பதையும் அறிய இது ஒரு அழகிய உதாரணம்.
****************
R Nanjappa
/ April 22, 2015Poets at times go to absurd lengths to establish a point, just to announce
their learning. But what is the use of vain.learning if it does not enrich
our mind or ennoble our character? It is always held by great minds that it
is character which imparts beauty- Sri Tyagaraja says of Rama: *Sujana
jeevana suguna bhushana! : his great character was his ornament! Which gold
ornament can equal the innocent smile? *
*It is also generally believed that especially young people who are endowed
with natural beauty do not need much of ornaments to enhance it! It is
only those past their prime who try to recapture some of the lost charm by
artificial means. Oliver Goldsmith states this so well:*
*As some fair female, unadorned and plain,*
*Secure to please while youth confirms her reign,*
*Slights every borrow’d charm that dress supplies,*
*Nor shares with art the triumph of her eyes;*
*But when these charms are pass’d, for charms are frail,*
*When time advances, and when lovers fail,*
*She then shines forth, solicitous to bless,*
*In all the glaring impotence of dress.*
*From: The Deserted Village, lines 287-294.*