சம்ஸ்கிருத பொன் மொழிகளும் இணையான தமிழ்ப் பழமொழிகளும்

தொகுத்தவர்—லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்: 1865; தேதி 14 மே 2015

லண்டனில் பதிவு ஏற்றப்பட்ட நேரம்: 20-29

1.அஞ்ஞாத குல சீலஸ்ய வாஸோ தேயோ ந கஸ்யசித் – ஹிதோபதேசம்

குல ஒழுக்கங்களை அறியாமல் எந்த ஒருவருக்கும் இடம் தரக்கூடாது.

“குலத்து அளவே ஆகும் குணம்”- அவ்வையார்/மூதுரை

“ஆழம் தெரியாமல் காலை விடாதே”

2.அதரே பயசா தக்தே தக்ரம் பிபதி ப்பூத்க்ருத்ய

பாலால் சுடப்பட்ட பின்னால், மோரைக் கண்டால் கூட பூ.. பூ.. அன்று ஆற்றிக் குடிப்போம்.

“பட்டால்தான் தெரியும் பார்ப்பானுக்கு”

“சூடு கண்ட பூனை”

3.அதிகஸ்யாதிகம் பலம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமோ அவ்வளவுக்கு அவ்வளவு பலன்.

முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் – குறள்

“அடிக்க அடிக்க அம்மியும் நகரும்”

“எறும்பூரக் கல்லும் தேயும்”

4.அத்ருவாத் துருவம் வரம்

நிச்சயமில்லாமல் இருப்பதைவிட நிச்சயமாக இருப்பதே சிறந்தது

“துணிந்தவனுக்கே உலகம் கிடைக்கும்”

“வெட்டு ஒன்று, துண்டு இரண்டு!”

5.அனதிக்ரமணீயானி ஸ்ரேயாம்சி- அபிக்ஞான சாகுந்தலம்

உயர்ந்த விஷயங்களை மீறக்கூடாது

பெரியவாள் சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி

மூத்தோர் சொல்லைத் தட்டாதே

வழியே ஏகுக, வழியே மீளுக—வெற்றி வேற்கை

6.அனார்யஜுஷ்டேன பதா ப்ரவ்ருத்தானாம் சிவம் குத: -கதா சரித் சாகரம்/கதைக்கடல்

பண்படற்றவர்களால் வழிநடத்தப்படுவோருக்கு நற்கதி ஏது?

“தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே” – அவ்வையாரின் முதுரை

7.அநார்யப் பரதார வ்யவஹார: – அபிக்ஞான சாகுந்தலம்

பிறர் மனைவியுடன் தொடர்பு வைத்திருப்பது அநாகரீகமாகும் (ஆரியர் அற்றவர்/ பண்பாடாதல்லவர் வழக்கு)

“பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன்”– குறள்

8.அந்யாயம் குருதே யதி க்ஷிதிபதி: கஸ்தம் ந்ரோத்தம் க்ஷம: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

அரசனே தவறு செய்தால் அதைத் தடுக்க யாருக்கு சக்தி உண்டு?

“வேலியே பயிரை மேய்ந்தால்?”

9.அபி சாஸ்த்ரேஷு குசலா லோகாசார விவர்ஜிதா:  சர்வே தே ஹாஸ்யதாம் யாந்தி – பஞ்சதந்திரம்

சாத்திரங்களில் எவ்வளவு கெட்டிக்காரனாக இருந்தாலும், உலக விவகாரம் தெரியாவிட்டால் பிறரின் நகைப்புக்கு உள்ளாக நேரிடும்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவில்லாதார் – குறள்

படகு உடைந்தபோது நீந்தத் தெரியாத சந்யாசிக்கு நேர்ந்த கதி—ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை

10அபூஜ்யா யத்ர பூஜ்யந்தே பூஜ்யாம் து விமானனா

த்ரீணி யத்ர ப்ரவர்த்தந்தே துர்பிக்ஷம் மரணம் பயம் – –பஞ்சதந்திரம்

மதிக்கப்படக் கூடாதோர் எங்கு மதிக்கப்படுகிறார்களோ, மதிக்கப்பட வேண்டியவர்கள் எங்கு அவமதிக்கப்படு கிறார்களோ அங்கே மூன்று வரும்: வறுமை, சாவு, பயம்.

வேங்கை வரிப்புலி  நோய் தீர்த்த விடகாரி

ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால் போல் – பாங்கு அறியாப்

புல் அறிவாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின் மேல் இட்ட கலம் – மூதுரை/அவ்வையார்

நிரில் தத்தளித்த தேளைக் காப்பாற்றினாலும் அது கொட்டதான் செய்யும் – ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை

Leave a comment

1 Comment

  1. hariharanark's avatar

    மதிக்கப்பட வேண்டியவர்கள் எங்கு அவமதிக்கப்படு கிறார்களோ அங்கே மூன்று வரும்: வறுமை, சாவு, பயம்.

Leave a comment