Written by London swaminathan
Research Article No.1866; Dated 15 May 2015.
Uploaded in London at 10-21
உலகின் மிகப் பழைய நகரம் எது?
காசி என்றும் வாரணாசி என்றும் அழைக்கப்படும் இந்துக்களின் புனித நகரமே உலகின் மிகப் பழைய நகரம் ஆகும். இதுவரை கிடைத்த தொல் பொருட் துறை கி.மு.900 வரையே இந்த நகரின் பழமையைக் காட்டும். ஆனால் கங்கைச் சமவெளியில் கி.மு 1200 வரை பழமையான பானை ஓடுகள் கிடைத்துள்ளன. சிலர் இதை 1400 வரை கொண்டு செல்வர். ஆயினும் இலக்கியச் சான்றுகள் இதுதான் உலகின் மிகப் பழைய நகரம் என்று காட்டும்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் கேதார்நாத் கோவில் சேதமானதையும், நேபாள பூகம்பத்தில் முக்திநாத் கோவில் சேதமானதையும் கண்டோம். தனுஷ்கோடி கோவில் கொஞ்சம் கொஞ்சமாகக் கடலுக்குள் போகவே, எங்கு கரை இருக்கிறதோ அதை தனுஷ்கோடி என்று சொல்லுகிறோம். இந்தியாவின் பருவக்காற்றும், வெய்யிலும் மாறி மாறி அடிப்பதால் கட்டிடச் சின்னங்கள் அழிந்துவிட்டன. முஸ்லீம்படை எடுப்பாளர்கள் அவர்களால் முடிந்த மட்டும் அழித்துவிட்டுச் சென்றனர். இதற்குப் பின் எஞ்சியுள்ள சின்னங்களையே நாம் இன்று காண்கிறோம்.
1).இந்துக்கள் நம்பிக்கை
மஹாபாரத யுத்தம் முடிந்த பின்னர் கலியுகம் துவங்கியதாக (கி.மு.3102) இந்துக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நம்பிவருவதை பஞ்சாங்கங்களும் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன. அந்த மஹாபாரத காலத்தில் பீஷ்மர் என்னும் நித்திய பிரம்மச்சாரி, பாண்டவர் குலம் தழைக்க பெண்களைத் தேடிக்கொண்டிருந்தார். காசி மகாராஜன் அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று புதல்விகளுக்கும் ஸ்வயம்வரம் ஏற்பாடு செய்தான். அதில் பீஷ்மர் தோன்றி, மூன்று பெண்களையும் கடத்தி வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அப்போதே காசி சாம்ராஜ்யம் மிகவும் புகழ் பெற்றிருந்தது.
கலியுகத்தை நம்பாதவர்கள் கூட மஹாபாரத யுத்தம் கி.மு.1500 வாக்கில் நடந்திருக்கும் என்று ஒப்புக் கொள்வர். கல்ஹணரோ மாபாரத காலத்தை கி.மு.2500 வாக்கில் வைக்கிறார். எப்படியாகிலும் காசியின் பழைய வரலாறு உறுதியாகிறது.
2).பௌத்தர்களும் சமணர்களும் கூறுவது என்ன?
பௌத்தர்களும் சமணர்களும்கூட காசியே பழைய நகரம் என்பதை எழுதி வைத்துள்ளனர். நேபாளத்தில் உள்ள கபிலவஸ்துவில் பிறந்து பீஹாரில் உள்ள புத்த கயாவில் ஞானோதயம் அடைந்த புத்தர், ஏன் உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசிக்கு வந்து முதல் சொற்பொழிவை நடத்தினார்? அவர் உபதேசம் செய்த சாரநாத், காசியின் புறநகர்ப் பகுதியாகும். ஏன் என்றால் காசிதான் நாட்டின் புனித, பழைய தலம்.
அந்தக் காலத்தில் யாரேனும் புதிய தத்துவம்/கொள்கை கண்டு பிடித்தால் அதை காசிக்குச் சென்று நிரூபிக்கவேண்டும். அங்கே தெரு மூலைகளில் அறிஞர்கள் நிற்பார்கள். அவர்கள் எல்லோரையும் வாதத்துக்கு அழைப்பார்கள். அதில் வென்றால் அவர்கள் சித்தாந்தம் அங்கீகாரம் பெறும். அதாவது அந்த நகரமே ஒரு பல்கலைக் கழகம்!
3.வேத இலக்கியங்களிலும் காசியின் பெயர் உள்ளது. காசி என்பது பன்மைப் பொருளில் அதர்வண வேதத்தில் பயிலப்படுகிறது. ஆதிகாலத்தில் அந்தந்த குழுக்களின் பெயரே அந்த தேசத்தின் பெயராகக் கொள்ளப்பட்டது. சோழர் வாழ்ந்த இடம் சோழநாடு. தமிழர் இருப்பிடம் தமிழ்நாடு; ஆங்கிலோ-சாக்ஸன் இனம் இருந்த இடம் ஆங்கிலாந்து (இங்கிலாந்து). இந்த காசி இனத்தாலேயே காசி என்றழைக்கப்பட்டது.
வருண, அஸ்ஸி என்ற கங்கையின் இரண்டு உபநதிகளுக்கு இடைப் பட்ட நகரம் என்பதால் வாரணாசி என்று பெயர் பெற்றது. உலகம் முழுதும் உள்ள பெயர்களை உருக்குலைக்கும் ஐரோப்பிய இனத்தால் வாரணாசி என்னும் பெயர், பனாரஸ் என்று உருமாறிப்போனது.
4.பாபிலோனியாவில் காசி இன மக்கள்
4காசி இனமக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவினர். பாபிலோனியாவில் கி.மு.1800 முதல் காசைட் இன மக்கள் காணப்படுகின்றனர். இவர்களை அடுத்து கி.மு.1400 முதல் மிடன்னிய இனம் துருக்கி-சிரியாவில், ஆட்சியைப் பிடித்தது. அவர்கள் தூய சம்ஸ்கிருதப் பெயர்களுடன் ரிக்வேத மந்திரத்தின் மேல் சத்தியம் செய்து உடன் படிக்கை செய்த கி.மு.1400 கல்வெட்டும் கிடைத்திருக்கிறது. காசைட் இன மக்களும் சம்ஸ்க்ருதம் தொடர்பான மொழையையே பேசினர். இவ்வளவையும் ஒப்புக் கொள்ளும் வெள்ளைக்காரகள் இன்றுவரை அவர்களுடைய “ஆரிஜின்” (மூலம்) தெரியவில்லை என்று புத்தகம் எழுதி மழுப்பி வருகின்றனர். இவர்கள் அனைவரும் கங்கைச் சமவெளியில் இருந்து வெற்றி விஜயம் மேற்கொண்ட இந்துக்களாவர்.
சௌராஷ்டிரர் என்பவர் (ஜொராஸ்தர்) ஈரான் வரை சென்று வேதத்துக்கு ஏட்டிக்குப் பூட்டியாக ஒரு மதம் தாபித்தார்.அவர் குஜராத்தில் உள்ள சௌராஷ்டிர பிரதேசத்தில் இருந்து சென்றவர். அதை ஈரானியர்கள் “ஜொராஸ்தர்” என்று எழுதிவிட்டனர். இதை காஞ்சிப் பெரியவர் (1894-1994) தனது உபந்யாசங்களில் கூறியுள்ளார். அதே குஜராத்தில் உள்ள கிருஷ்ணரின் துவாரகை கடலுக்கடியில் கண்டு பிடிக்கப்பட்டதும், கிருஷ்ணர் மறைந்த பின்னர் அது கடலில் மூழ்கியதை பாகவத புராணம் உறுதி செய்வதும் கலியுகத்தையும் மஹாபாரத காலத்தையும் உண்மையாக்குகின்றன.
6.பௌத்ததில் காசி
புத்த மதத்தினர் ஜாதகக் கதைகள் என்ற பெயரில் பாலி மொழியில் நிறைய பழைய கதைகளைத் தொகுத்து வைத்துள்ளனர். இது எழுதப்பட்டது 2300 ஆண்டுகளுக்கு முன். அதில் புத்தரின் பூர்வ ஜன்ம அவதாரங்களைப் பற்றிப் பேசுகையில் “முன்னொரு காலத்தில் காசியில் பிரம்மதத்தன் அரசாளுகையில், போதிசத்துவர் …………….” என்று எழுதுகின்னர். 2300 ஆண்டுகளுக்கு முன் கதை எழுதியவர்கள் “முன் ஒரு காலத்தில் “என்று சொன்னால் அதற்கும் முன்னர் ஒரு ஆயிரம் ஆண்டுகளாவது ஆகியிருத்தல் வேண்டும்.
7.சமணத்தில் காசி
சமணமதத்தைச் சேர்ந்த 24 தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரரான மாஹாவீரர், புத்தருக்கும் சிறிது முந்தையவர். அவர்களில் ஏழாவது தீர்த்தங்கரர் பிறந்தது காசியில்! 23ஆவது தீர்த்தங்கரரான பார்ஸ்வநாதர், கிருஷ்ணர் காலத்தில் வசித்தவர். இதையெல்லாம் கணக்கில் சேர்த்தால் ஏழாவது தீர்த்தங்கரர் மஹாவீரருக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வசித்திருக்க வேண்டும்!! காசியின் கதையும் அவருடன் பின்னால் போகும்!
8.வேதத்தில் காசி
பௌத்த, சமண மத இலக்கியங்களுக்கு எல்லாம் முந்தையது வேத கால இலக்கியம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. அதர்வண வேதத்தில் (5-22-14) காசி மக்கள் இடம் பெறுகின்றனர். வருணாவதி என்னும் ஆறும் (4-7-1) இடம்பெறுகிறது. இதுவே பின்ன வருண+ அஸ்ஸி= வாரணாசி ஆயிற்று. சதபத பிராமணத்திலும் உபநிஷதங்களிலும் காசியை ஆண்ட தார்தராஷ்ட்ர, அஜாத சத்ரு போன்ற பழங்கால மன்னர்கள் பெயர் இடம் பெறுகின்றன.

9.காசி-கௌசல்ய, காசி- விதேக முதலிய சொற்றொடர்கள் பிராமணங்களில் இடம் பெற்றுள்ளன. அக்காலத்தில் சாம் ராஜ்யங்களுக்கு இடையில் நிலவிய நட்புறவுக்கு இவை சான்று தரும். கௌசல்ய என்பது கோசல நாட்டின் அடியாகப் பிறந்த உரிச்சொல். கோசலத்தின் தலைநகரான அயோத்தியில், முதல் சமண மத தீர்த்தங்கரர் பிறந்ததும், ராமனுக்கு எல்லாம் மூத்த இக்ஷ்வாகு வம்சத்தினர் ஆண்டதும் அயோத்தியின் பழமையையும் பறை சாற்றும்
10.கபல என்னும் பானை ஓடுகள் பற்றி ஆஸ்வலாயன கிருஹ்ய சூத்திரம் ( 4-3-5) முதலிய வேத கால இலக்கியங்களில் வருகின்றன. இதை இறந்தோர் சடங்குகளில் பயன்படுத்துவர். மஸ்கி என்னும் கங்கைச் சமவெளி ஊரில் ஒரு குழந்தையின் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இந்துக்கள் குழந்தைகள் இறந்தால் எரிக்க மாட்டார்கள். அந்தக் குழந்தையின் சடலத்தின் மீது ஒரு கபல பானை ஓடு இருந்தது. இது அந்தக் குழந்தையின் விளையாட்டுச் சாமான் என்று ஆங்கிலம் படித்த “அறிஞர்கள்” எழுதினர். பின்னர் வேதம் படித்த அறிஞர் இது விளையாட்டுச் சொப்பு அல்ல, கபல என்னும் ஈம ஓடு என்று எடுத்துக் காட்டினர். நமது கலாசாரமே தெரியாமல் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுவோர் என்ன என்ன கேடுகளை விளைவிக்க முடியும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு!!
காசி வாழ்க! வாரணாசியின் புகழ் வளர்க!



hariharanark
/ May 17, 2015நமது கலாசாரமே தெரியாமல் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுவோர் என்ன என்ன கேடுகளை விளைவிக்க முடியும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு.
hariharanark
/ May 17, 2015sir,how to i follow your post in facebook.Iam also follow your blog sir.by (Hariharan,SALEM)