இலக்கியப் பணியில் கண்ணதாசன்!-1

Art-350

Written by ச.நாகராஜன்

Research Article No.1874; Dated 19 May 2015.

Uploaded in London at காலை 8-19

ச.நாகராஜன்

கண்ணதாசனின் பல் பரிமாணங்கள்!

தமிழ் இலக்கியம் அகன்றது, விரிந்தது, ஆழமானது, அதிசயமானது! காலத்திற்கேற்றவாறு கவிஞர்கள் தோன்றி தமிழுக்கு அளித்த காணிக்கைகளைப் பார்த்தால் அவை பல்வேறு சுவையைக் கொண்டிருப்பதோடு சம காலத்தில் வாழ்ந்த மனிதர்களை உத்வேகப்படுத்தியதோடு அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் அவை ஏற்றவையாகவும் ஏற்றம் பெற்றவையாகவும் இருப்பதைக் காணலாம்.

 

கண்ணதாசன் என்ற கவிஞனும் இதற்கு விதி விலக்கல்ல!

கவியரசர் கண்ணதாசன் வாழ்ந்த ஆண்டுகள் 54 ஆண்டுகள் தான். என்றாலும் கூட அவர் பல பரிமாணங்கள் கொண்டு ஒளிர்ந்தார். அவர் ஒரு கவிஞர். கட்டுரையாளர். நாவல் ஆசிரியர். பத்திரிக்கை ஆசிரியர். திரைப்படப் பாடலாசிரியர். திரைக்கதை வசனகர்த்தா. மொழிபெயர்ப்பாளர். இப்படிப் பல பரிமாணங்கள்.

 

4000க்கும் மேற்பட்ட கவிதைகள், சுமார் 5000 திரைப்படப் பாடல்கள், சுவையான ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் என அவரின் படைப்புப் பட்டியல் நீளும்.

வாழ்ந்த ஆண்டுகளையும் படைத்த படைப்பின் எண்ணிக்கைகளையும் வைத்து பொதுவாக ஒருவன் வாழ்த்தப்படுவதில்லை; மதிக்கப்படுவதில்லை.

இருந்த காலத்தில் இருளை அகற்றி ஒளியையும், சோகத்தை அகற்றிச் சுகத்தையும்காலம் விதிக்கும் தடைகளுக்கு விடைகளையும் தந்தானா என்பதை வைத்தே காலம் ஒருவனை எடை போடுகிறது.

 

 

26 வயதே வாழ்ந்த ராஜம் ஐயர் (1872-1898) கமலாம்பாள் சரித்திரம் உள்ளிட்ட பேர் சொல்லும் படைப்புகளைப் படைத்தவர். 39 வயதே வாழ்ந்து மறைந்த உலக மஹாகவி பாரதியார் (1882-1921) தமிழில் பல்வேறு பரிமாணங்களைக் காட்டியவர். காலத்தை வென்ற கவிதைச் சித்திரங்களைத் தீட்டியவர். 29 வயதே ஆன பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரைப்படப் பாடல்கள் மூலமாக ஒரு தனி தாக்கத்தை ஏற்படுத்தியவர். இப்படிப் பலரையும் சுட்டிக் காட்டலாம்.

 images

 

அனைவருக்கும் ஒரு பாட்டு!

கர்ப்பத்தில் இருந்து ஆரம்பித்து காடு சென்று முடிபவர் வரை அனைவருக்கும் அனைத்து சமயங்களுக்கும் ஏற்ற பாடல்களை வெகுஜன ஊடகம் மூலமாகத் தந்தவர்; சமகால அரசியலைகுறிப்பாக அதிலிருக்கும் சாக்கடை நாற்றத்தை அம்பலப்படுத்தியவர்; கவிதைகளில் தமிழை விளையாட விட்டு அனைவரையும் ரசிக்க வைத்தவர். ஆன்மீகப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு இந்து மதத்திற்கு ஒரு சுகமான அர்த்தத்தைத் தந்தவர். அனைவரும் திடுக்கிடும்படியான சுய விமரிசனத்தை உண்மை வழுவாது தந்து அனைவரையும் அதிசயக்க வைத்தவர். பல பலஹீனங்களுக்குமது, மாதுஉட்பட்டிருந்தாலும் கூட, அவற்றிலிருந்து விடுபட முயன்று, தமிழ் இலக்கிய பலத்தால் தன் வாழ்க்கையில் ஒரு அர்த்தம் காண முற்பட்டவர் . சுருக்கமாக இது தான் கண்ணதாசன்.

 

 

காப்பியம் செய்ய, தமிழ் மட்டும் போதாதே!

கவிஞர் நாஞ்சில் ஷா, சென்னை – 48 அவரை இப்படி ஒரு கேள்வி கேட்கிறார்:-

மலை போன்ற தத்துவத்தை                                                                     

மலை வாழைப் பழமே யாக்கி                                                        

நிலையான தமிழ்த்தேன் பாகில்                                                    

நியமமுடன் சேர்த்து நல்கும்                                                           

கலைஞானக் கவிதை வேந்தே!                                                   

காப்பியங்கள் ஆர்த்து ஞாலத்                                                           

தலைமேலே அமரப் போகும்                                                          

சாதனை தான் எப்போ தென்பீர்?

காப்பியங்கள் பல செய்து புவித் தலமை கொள்ளப் போவது எப்போது என்பதற்கு அவரது பதில் இது:-

நோகாத மனம் வேண்டும் காலம் வேண்டும்                                

நோயில்லா உடல் வேண்டும் சூழல் வேண்டும்                                     

ஆகாத தொடர்பெல்லாம் அறுதல் வேண்டும்                                       

அன்றாடச் செலவுக்குப் பணமும் வேண்டும்                                       

சாகாத காப்பியங்கள் செய்வதென்றால்                                               

தமிழ் மட்டும் போதாதே! என்ன செய்ய?                                         

வாகான தெய்வத்தை வரங் கேட்கின்றேன்                                        

வளமான உடல்வாழ்க்கை வழங்கு மாறே!

ஜனவரி 1978, கண்ணதாசன் இதழில் வெளி வந்தஐயம் அகற்று’ (கேள்விபதில்) பகுதியில் கேள்வி ஒன்றும் அதற்கான பதிலும் தான் இது!

இவற்றில் பல இல்லாத போதும் கூட அவர் கவிதை யாத்தார்; காப்பியங்கள் செய்தார்.

 

 Kannadasan birth chart south indian type

தனக்கு ஆகாத தொடர்பெல்லாம் அறுதலை அவர் விரும்பினாலும், அந்தத் தொடர்புகள் இவரைச் சுற்றி வந்து கும்மாளம் போட்டன! நோயுள்ள உடல், நொந்த மனம், கலி காலம், வெறுப்பான சூழல் இவையெல்லாம் அவரைப் பரந்த அளவில் இலக்கியப் பணி செய்யவிடாமல் எதிரில் வந்து குறுக்கிட்ட தடைகளாய் அமைந்தன.

விதி சதி செய்தாலும் சாதித்தது ஏராளம்! 

 

காலத்தை வீணாக்கி விட்டேன்!

பேராம்பட்டு கே.சந்திரசேகரன் கேட்கிறார் (இதே கண்ணதாசன் ஜனவரி 1978 இதழில்) இப்படி:-

தாங்கள் இப்பொழுது துவங்கியிருக்கும் எழுத்துப் பணியை சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியிருந்தால், இன்னும் நிறைய சேவை செய்திருக்கலாமே!”

அதற்கு கண்ணதாசனின் பதில் இது:-

கடவுள் இந்த புத்தியை அப்போது எனக்குக் கொடுக்கவில்லையே! இதை நீங்கள் நினைத்துப் பார்க்கிறீர்கள்; நானோ எண்ணி எண்ணி அழுகிறேன். காலங்களை வீணாக்கி விட்டேன். பத்து ஆண்டுகளுக்கு முன்னே இந்தப் பணியை நான் துவக்கியிருந்தால், என் பிள்ளைகளுக்கு  வேறு சொத்து எதற்கு?”

காலம் கடந்த புத்தி! கடவுள் செய்த ஜாலம்! இதில் வரும்என் பிள்ளைகள்என்பதை அவரது சொந்தக் குழந்தைகள் என்று எடுத்துக் கொள்ளாமல் தமிழ்ப் பிள்ளைகள் என்று அகண்ட அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்!

தமிழுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய பெரிய சொத்து, சுருங்கிய சொத்தாகவே வந்தது!

  • தொடரும்

 

 

Leave a comment

Leave a comment