Compiled by S NAGARAJAN
Article No.1929
Date :13th June 2015
Time uploaded in London: 20-34
By ச.நாகராஜன்
பிரார்த்தனையின் சிறப்பு
பிரார்த்தனை மனிதனுக்கே உள்ள தனி உரிமை. தனிச் சிறப்பு. ஈ, எறும்பு, சிலந்தி, யானை போன்றவை இறைவனை அழைத்து உயர்ந்ததை புராண வாயிலாகப் படிக்கிறோம். என்றாலும் நூலறிவாலும் பட்டறிவாலும் இறைவனின் பெருமையை அறிந்து அவனைத் துதித்துப் போற்றுவது மனிதனுக்கே உரியதாகும்.
ஆகவே தான் அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என ஔவையாரும் ஜந்தூனாம் நர ஜன்ம துர்லபம் என ஆதி சங்கரரும் மனிதப் பிறப்பைச் சிறப்பித்தனர்.
மனிதர்களில் நாத்திகரைத் தவிர அனைவரும் பிரார்த்தனை புரிகின்றனர். பல்வேறு காரணங்களுக்காக. சி.ல பலிக்கின்றன. சில பலிப்பதில்லை.
அரவிந்தரின் அருளுரை
மஹரிஷி அரவிந்தர் இது பற்றிக் கூறியுள்ளதைப் பார்ப்போம். அவரது சீடராக இருந்தவர் இசை விற்பன்னர் திலிப் குமார் ராய்
“Sri Aurobindo came to me” என்ற நூலில் அரவிந்தருடனான தனது அனுபவங்களைச் சுவைபடத் தெரிவித்துள்ளார். அதில் ஒரு இடத்தில் பிரார்த்தனையின் பலிதம் பற்றி அரவிந்தரின் கருத்து தெரிவிக்கப்படுகிறது.
அரவிந்தரின் தாய்வழி மாமன் ஶ்ரீ கிருஷ்ண குமார் மித்ராவின் மூத்த பெண் டாக்டர்களால் கை விடப்பட்டு விட்ட நிலை. அவர் தந்தை கூறினார்: “கடவுள் ஒருவர் தான் இனி துணை; பிரார்த்தனை செய்வோம்” அவர் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தவுடன் குணம் தெரிய ஆரம்பித்தது. டைபாய்ட் ஜூரம் போயே போனது. நோயாளி பிழைத்தார். சில பிரார்த்தனை பலிக்கும். சில பலிக்காது. அனைத்து பிரார்த்தனைகளையும் ஏற்று பலிக்க வைத்தால் கடவுள் மிக மோசமான நிலையில் தள்ளப்படுவார்.
அரவிந்தரின் எழுத்துக்களில் இவை சொல்லப்படுகிறது இப்படி:-
“As for prayer, no hard and fast rule can be laid down. Some prayers are answered, all are not. The eldest daughter of my maternal uncle, Sri Krishna Kumar Mitra (the editor of Sanjivani – not by any means a romantic, occult, supra-physical or even an imaginative person) was abandoned by the doctors after using every resource, all medicines stopped as useless. The father said: ‘There is only God now, let us pray.’
He did and from that moment the girl began to recover, the typhoid fever and all symptoms fled, death also.
I know any number of cases like that. Well? You may ask why should not then all prayers be answered. But why should they? It is not a machinery; put a prayer in the slot and get your asking. Besides, considering all the contradictory things mankind is praying for at the same moment, God would be in a rather awkward hole if he had to grant all of them; it would not do.”
மிகத் தெளிவாக விளக்கப்படுகிறது. ஒரே சமயத்தில் இருவர் இரு வேறான நிலைகளில் எதிரும் புதிருமாக பிரார்த்தித்தால் கடவுள் யாருக்கு அருள்வார்?
இறைவனின் வழிகள் தனி. விளக்கத்திற்கு அப்பாற்பட்டவை. (ஏடிஎம் மெஷினில் கார்டை செருகி வேண்டியதை எடுப்பது போல அல்ல பிரார்த்தனை!)
லண்டனிலொரு நிகழ்ச்சியில் திருமதி சீதா வெங்கட்ராமன், திரு.கல்யாண குருக்கள் பிரார்த்தனை
வள்ளுவர், மணிவாசகர், தாயுமானவர் ஆகியோரின் அருளுரைகள்
“வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல” என்ற வள்ளுவர் குறளில் (குறள் 4) இறைவன் இரண்டு நிலைகளுக்கும் அப்பாற்பட்டவன் என்பது தெரிகிறது.
வேண்டத்தக்கது அறிவோய் நீ;
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன் மாற்கு அரியோய்
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன்தன் விருப்பன்றே” என்கிறார் மாணிக்கவாசகர்.
எனக்கு நல்லது எது என்பது உனக்கே தெரியும்; அதை அருள்வது உனது பொறுப்பு என்ற அவரது அருளுரை மனித குலத்திற்கே ஒரு வழி காட்டுதலாக அமைகிறது.
தாயமானவரின்,
எனக்கெனச் செயல் வேறிலை யாவும் இங்கு ஒரு நின் தனக்கெனத் தகும் உடல் பொருள் ஆவியும் தந்தேன் மனத்தகத்து உள அழுக்கெலாம் மாற்றி எம்பிரான் நீ நினைத்தது எப்படி அப்படி அருளுதல் நீதம்
(நீதம் – முறை)
என்ற பிரார்த்தனை அருமையான பிரார்த்தனை. என் மன அழுக்கை மாற்றி, நீ நினைத்ததை எனக்கு அருள் என்று இறைவனிடம் பொறுப்பை அவர் ஒப்படைக்கிறார்.
பிரார்த்தனை பற்றிய தெளிவு மகான்களின் வாக்கால் பிறக்கிறது.
***************


You must be logged in to post a comment.