ஆராய்ச்சிக் கட்டுரை எண்– 1933
எழுதுபவர் – லண்டன் சுவாமிநாதன்
தேதி:- 15 ஜூன் 2015
லண்டனில் பதிவேற்றப்பட்ட நேரம்- காலை 10-30
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் ஐரோப்பியர்கள் நுழைந்தனர். போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர், பிரெஞ்சுகாரர்கள், ஹாலந்து நாட்டு டச்சுக்காரர்கள் ஆகிய நான்கு இனத்தினர் பல இடங்களைப் பிடித்து ஆண்டனர். அவர்களை இப்பொழுது விரட்டி அடித்து வெற்றிவாகை சூடிவிட்டோம். ஆயினும் அவர்கள் இருந்த காலத்தில் எப்படியாவது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும், எப்படியாவது இந்து மதத்தின் அஸ்திவாரத்தை அசைத்துவிட்டால் பின்னர் கிறிஸ்தவ மதத்தைப் பரப்பலாம், அதன் மூலம் ஆட்சி நீடிக்க அதிக வாய்ப்புகள் கிட்டும் என்று கணக்குப் போட்டார்கள் – அது அது தப்புக் கணக்காகிவிட்டது. இதற்காக இந்து மதத்தின் மூல வேரான வேதங்களைத் தகர்க்க வேண்டும் என்று திட்டமிட்டனர். உடனே இதில் தீவிரமாக இறங்கினர் சுமார் 35 பேர்.
ஆட்சி அஸ்தமனமானபோதும், அவர்கள் அப்போது ஊன்றிய விஷ வித்து மட்டும் செடியாகி மரமாகி பழுத்தும் விட்டது. அதுதான் ஆரிய-திராவிட இனவெறி வாதம். இப்பொழுது அந்த மரம் ஆடத் துவங்கிவிட்டது. விரைவில் அழியும் அறிகுறிகள் தென்படுகின்றன. தமிழ்நாட்டில் கிடைக்கும் பழைய கல்வெட்டுகளில் எல்லாம் சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பதாலும் அது வடக்கத்திய பிராமியில் இருப்பதாலும் போலி திராவிடங்களின் வாதங்களும் பிசுபிசுத்துப் போய்விட்டது. பழனியில் கிடைத்த மிகப்பெரிய கல்வெட்டில் வஜ்ரம் என்ற சம்ஸ்கிருதச் சொல் இருந்தவுடன் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயன்றனர். முடியவில்லை. எல்லா பழைய கல்வெட்டுகளிலும் இப்படி சம்ஸ்கிருதச் சொற்கள்!
அட, தமிழின் பழம்பெரும் நூலான தொல்காப்பியத்தை வைத்தாவது பூச்சாண்டி காட்டலாம் என்று எண்ணும் திராவிடங்களின் வாயில் பனம்பாரனாரும் தொல்காப்பியரும் மண்ணைப் போட்டுவிட்டனர். நான்கு வேதங்களையும் படித்த பிராமணன், அதங்கோட்டு ஆச்சார்யார்தான் தொல்காப்பியத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று அரங்கேற்ற ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்து இருக்கிறார். தொல்காப்பியரோ நூலில் பல இடங்களில் வேதங்களையும் வேத வழக்குகளையும், வேத கால தெய்வங்களையும் பாடிப் பரவிப் போற்றியுள்ளார். இது எல்லாம் போலி திராவிடங்களின் வாதங்களைத் தகர்த்துவிட்டது.
இது தவிர வெள்ளைக்காரன் சூழ்ச்சியாலும், காந்தி போன்றவர்களின் பலவீனத்தாலும் இந்தியா இருக்கும் வரை நிரந்தர தொல்லை கொடுப்பதற்காக பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டு குடையுதே குடையுதே என்னும் பழமொழி போல ஆகிவிட்டது. இதற்கு முடிவுகட்டுவது வலுவான இந்திய அரசால்தான் முடியும்.
இன்றும் இந்த வெளிநாட்டுச் சதி நீடிக்கிறது. வெண்டி டோனேகர் போன்ற எழுத்தாளர்களை விட்டு, இந்து மதம் பற்றி வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல விஷத்தை ஏற்றுவது — எங்கோ கொட்டாம்பட்டியிலும், ஈரோட்டிலும் எவனாவது ஒரு தமிழ் எழுத்தாளன் இந்து மதத்துக்கு எதிராக கதை எழுதினால் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை வெளி நாட்டு பல்கலைக் கழகங்களில் பாடப் புத்தகமாக வைத்து அவன் பாங்குக் கணக்கில் பல லட்சங்களைச் சேர்ப்பது — இதற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட்களை ஏவிவிடுவது — இப்படி எவ்வளவோ சதி நடக்கிறது. எங்களைப் போன்ற 40 ஆண்டு அனுபவ ‘ஜர்னலிஸ்டுகள்’ அந்தச் செய்தியைப் படித்த மாத்திரத்தில் சூட்சுமம் புரிந்துவிடும்.
நிற்க. வேதங்களை உருக்குலைக்க வெளிநாட்டினர் சதி பற்றிப் பார்ப்போம்.
வேதங்களை ஆராயவந்த வெளிநாட்டினரில் மூன்று வகையினர் உண்டு. முதல் வகை சூரியனைக் கண்டு குலைக்கும் நாய் வகை. அதாவது வேதம் முழுவதையும் திட்டித் தீர்ப்பது. சாயணர் என்பவர் 700 ஆண்டுகளுக்கு முன் எழுதிய உரை முழுவதையும் குதறிக் கிழிப்பது – இந்த வகை
இரண்டாவது வகை: நடுவழி. குற்றமும் சொல்ல வேண்டாம்- புகழவும் வேண்டாம். சாயணர் சொன்னதை ஒட்டியும் வெட்டியும் வாதாடுவது.
மூன்றாவது வகை: சாயணர் சொன்னதை அப்படியே ஏற்பது வேதங்களைக் கொஞ்சம் பாராட்டுவது.
ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரகள், ஜெர்மானியர்கள் ஆகிய மூவரும் இத் “திருப் பணியில்” இறங்கினர். ஜெர்மானியர்கள் இந்தியாவை ஆளவில்லையே. அவர்களுக்கு இதில் என்ன உள் நோக்கம்? என்று நீங்கள் வியக்கலாம். சம்ஸ்கிருதத்துக்கு மிகவும் நெருங்கிய மொழி அது என்பதாலும், இந்திய சம்ஸ்கிருதச் சுவடிகளில் பல ரகசியங்கள் இருந்ததால் அதை எடுத்துச் செல்லும் நோக்கத்தாலும் அவர்களும் களத்தில் இறங்கினர்.
இப்படி இறங்கிய பலரில் ஒருவர்தான் மாக்ஸ் முல்லர். அவர் ஒரு ஜெர்மானியர். அவரை இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனிக் காரர்கள் வேதங்களை மொழிபெயர்க்க கூலி வேலையில் அமர்த்தினர். முதலில் கைக்கூலி வேலை பார்த்த அவர் கொஞ்சம் கொஞ்சமாக வேதக்கடலில் மூழ்கிப் போனார். திட்ட முடியவில்லை. கொஞ்சம் பாராட்டியும் கூடப் பேசிவிட்டார்.
எப்படி தமிழ் கூறு நல்லுலகத்தில் கிறிஸ்தவ மததைப் பரப்ப வந்த ஜி.யூ. போப் என்ற பாதிரியார் திருவாசகம் என்னும் கடலில் மூழ்கி தமிழ் அமுதத்தைப் பருகுவதே தன் பிறவிப்பயன் எடுத்ததன் நோக்கம் என்று கருதினாரோ அது போலவே மாக்ஸ்முல்லர் என்னும் உப்பு பொம்மையும் வேதக் கடலின் ஆழத்தைக் காணப்போய், அதன் ஆழத்தை அறிய முடியாமல் அதில் கலந்து விட்டது. நாற்பது ஆண்டுக்காலம் அவர் வேதக் கடலில் நீச்சல் அடித்ததால் அவரை லண்டனில் சந்தித்த பிறகு சுவாமி விவேகாநந்தர், அவரை சாயணரின் மறு அவதாரம் என்று புகழ்ந்தார். ஆனால் மக்ஸ்முல்லர் இந்தியா வராமலேயே உயிர்நீத்தார். இதன் மர்மம் இன்று வரை புரியவில்லை! இந்திய வேதங்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்த மாக்ஸ்முல்லர் இந்தியா வர பயந்தது ஏன்? இன்னொரு நாள் விடை காண்போம்.
இரண்டு கடிகார முள் ஒரே நேரத்தைக் காட்டாது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதே போல வேதங்களை “மொழி பெயர்த்த” எல்லோரும் நவக் கிரகங்களாக ஆளுக்கொரு திசையைப் பார்த்தனர். ஆனால் இவர்கள் எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் – பெரும் சதிக் கும்பல் என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டு—இவர்கள் அனைவரும் “இந்தியர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள்” என்று ஆணித்தரமாக வாதாடினர். மேலும் பைபிள் பிரசாரகர்கள் சொல்லுவது போல உலகம் கி.மு.4004-ல் படைக்கப்பட்டது என்று நம்பினர். மேலும் இவ்வளவு தூரத்துக்கு குடைந்து குடைந்து வேதங்களை அக்கு வேறு ஆணி வேராக அலசியோர் தங்கள் ஆப்ரஹாமிக் (யூதம்,கிறிஸ்தவம், இஸ்லாம்) மதங்களை இப்படி ஆராயவுமில்லை; குறைகூற வுமில்லை.
கீழ்க் கண்ட பட்டியலில் உள்ள எல்லோரும் வேதங்களை ஆராய்ந்து கருத்து தெரிவித்தவர்கள் அல்லது கட்டுரை எழுதியவர்கள், பலர் மொழி பெயர்த்தனர்:–
மாக்ஸ்முல்லர் Max Muller Friedrich Max Muller (1823-1900),
ரால்ப் டி.எச்,கிரிப்பித் ( R T H Griffith),
பேராசிரியர் ராத் (Prof R Roth)
பிரெடெரிக் லுட்விக், Ludwig Geldner
பேராசிரியர் வீபர் Prof Weber
பேராசிரியர் கீத் (Prof.Arthur Berriedale Keith).
ஏ.ஏ.மக் டொனல் Prof A A MacDonnell,
வின்டர்நீட்ஸ் Winternitz ,
வில்சன், Prof H H Wilson
கோல்ட்ஸ்டக்கர் Prof Theodore Goldstucker
வில்லியம் ட்வைட் விட்னி William Dwight Whitney (1827-1894),
மோரீஸ் ப்ளூம் பீல்டு Maurice Bloomfield,
பேராசிரியர் ஆர்.பிஷெல் Prof. R Pischel
பேராசிரியர் சார்ல்ஸ் ராக்வெல் லான்மேன் Prof.Charles Rockwell Lanman
ஹெர்மன் ஜாகோபி Herman Jacobi,
ஏ.லாங்ல்வா A Langloi – French Translation
ஆல்ப்ரெட் வீபர் Albrecht Weber – Yajur Veda Vajasaneyi Samhita
ஜே.எக்லிங் J Eggeling
டாஸன் Deussen
கெல்ட்னர் Prof Karl Friedrich Geldner
டாக்டர் ஜார்ஜ் பூலர் Dr Gorge Buhler
பாட்லிங் Bohtlingk
பென்பே Theodore Benfey
கிராஸ்மேன் Grossman
ஆட்டோ Otto
பேராசிரியர் யூஜின் பர்னப் Prof Eugene Burnouf
கிறிஸ்டியன் லாசன் Christian Lassen
பிரெடெரிக் ரோசன் Friedrich Rosen
ஹெர்மன் ஓல்டன்பர்க் Herman Oldenburg – Sankyana Grhya sutra
சர் மோனியர் வில்லியம்ஸ் Sir Monier Williams
ராபர்ட் டி நொபிலி Jesuit Roberto De Nobilius cheated with fake Yajurveda
லிட்லி Lydley Bibliotheca Indica from 1847
டாக்டர் ரோயர் Dr Roer
டாக்டர் பிட்ஸ் எட்வர்ட் ஹால் 1877 Brhatdevata Dr Fitz Edward Hall
பேராசிரியர் மார்ட்டின் ஹாக் 1863 Prof Martin Haugh
பேராசிரியர் ஸ்டென்ஸ்லர் 1864-65 Prof Stenzler
சர் வில்லியம் ஜோன்ஸ் Sir William Jones
இவர்கள் ஒவ்வொருவர் பற்றியும் அடுத்த பகுதியில் சுருக்கமாகப் பார்ப்போம்.





dpriya
/ June 15, 2015நம் இந்தியர் ஒவொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.
நன்றி.
Balasubramanian Ammunni
/ June 17, 2015நன்றி. தொடர்ந்து ஆராய்ந்து எழுத வேண்டுகிறேன்.