பாரதியாரின் சரித்திர அலசல்

IMG_3419

Article No. 2061

Written by S NAGARAJAN

Swami_48@yahoo.com

Date : 11 August  2015

Time uploaded in London :– 6-01

 

மதமாற்றம் செய்து சகோதர ஹிந்துக்களிடமிருந்து பிரித்த எதிரிகள்! – 1

By .நாகராஜன்

 

 

பாரதியாரின் சரித்திர அலசல்

ஹிந்து தேச சரித்திரத்தை மஹாகவி பாரதியாரிடமிருந்தே தெரிந்து கொள்ள வேண்டும். அதி அற்புதமாக பகுப்பாய்வு செய்யும் திறமை கொண்ட மேதை அவர்.

இந்தியர்களில் ஜாதீய ஐக்கியம் எங்ஙனம் உண்டாகும்?’ என்ற அற்புதமான நீண்ட கட்டுரையை ஒரு சிறு நூலாக புதுவையிலிருந்து அவர் வெளியிட்டுள்ளார். இதன் விலை பை 3 (3 பைசாக்கள்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதுவை சூரியோதயத்தினின்று பெயர்த்தெழுதப்பட்டது என்ற குறிப்புடன் இது பிரசுரிக்கப்பட்டுள்ளதுஇது அனைத்து ஹிந்துக்களாலும் படிக்கப்பட வேண்டிய ஒரு கட்டுரை.

 

 

அனைவரும் இந்தியரே

கட்டுரையில் உள்ள மிக முக்கியமான சில பாராக்களை மட்டும் இங்கு பார்ப்போம்:-

 

கிரேக்கர்கள் முதலியவர்கள் இந்தியாவின் மேல் படையெடுத்து வந்த காலத்திலும் இந்தியாவாஸிகளுக்கு இந்தியர்களென்னும் நாமங்கொடுத்து வியவஹரித்து வந்தவர்களேயொழிய வேறில்லை.

 

பின்னும் சில மொகலாயர்கள் படையெடுத்து வந்த காலத்திலும் இந்தியாவின் புத்திரர்களுக்கு இந்தியரென்னும் பொது நாமம் சூட்டியே வியவஹரித்ததாகத் தெரிகிறது. அக்காலத்தில் இந்தியா முழுமைக்கும் ஒரே விதமான வேதாந்த மதம் பரவியிருந்திருக்க வேண்டும், அல்லது ஒருகால் வேறு வித மதங்களிருப்பினும் ஒரு ஜாதியின் பெயரை அவர்களது ஜன்ம தேசத்தைக் கொண்டு கூப்பிடும்பொழுது வழக்கத்தையனுசரித்து இந்தியர்களென்னும் ஒரே நாமம் சூட்டியிருக்க வேண்டும். மதங்கள் பலவகையுள்ள இதர தேசங்களின் சுதேசிகளைப் பல ஜாதியினராகப் பிரிவினை செய்து கூப்பிடவில்லை. இங்கிலாண்டு, சீனா, ஜப்பான், அமெரிக்கா முதலிய இடங்களின் சுதேசிகளாகிய இங்கிலீஷ்காரர்களிலும், ஜப்பானியர்களிலும், சீனாக்காரர்களிலும், அமெரிக்கர்களிலும் சிலர் கிறிஸ்து மதத்தையும், சிலர் மகம்மதீய மதத்தையும், இன்னும் பலவித மதங்களையும் அவலம்பித்தபோதிலும், ஹிந்து மதத்தையவலம்பித்த ஆங்கிலேயன் தன்னை ஹிந்து ஜாதியென்று சொல்லிக் கொள்ளவில்லை, மஹம்மதீய மதத்தையவலம்பித்த ஓர் அமெரிக்கன் தன்னை மஹம்மதீய ஜாதிக்குச் சேர்ந்ததாக ஒப்புக்கொள்ளவில்லை. அவ்வத் தேசங்களிலுள்ள ஜாதீயாரெல்லாரும் தத்தம் அபிப்ராயத்துக்குத் தக்கன மனத்தையும் இஷ்ட தேவதையையும் வைத்துக் கொண்டார்களேயொழியத் தங்கள் ஜாதியை விட்டு நீங்கவில்லை

 

இப்படி ஆணித்தரமாக தன் வாதத்தை மஹாகவி முன் வைக்கிறார். இதற்கான காரணம் என்ன? இந்த தேசத்தவர்களை ஒவ்வொரு மதத்தைச் சேர்ந்தவனையும் ஒவ்வொரு ஜாதியாக ஆங்கிலேயன் பிரிக்க நினைத்ததே காரணம். அதில் அவன் ஓரளவு வெற்றியும் பெற்று விட்டான் என்று இன்றைய (2015ஆம் ஆண்டு) நிலையை வைத்து வெட்கத்துடன் துக்கப்பட வேண்டியிருக்கிறது.

 

 IMG_3326

பிரித்தாளும் சூழ்ச்சி

இந்த பிரிவினை வாதத்தை ஆங்கிலேயன் விதைத்த போதே அதைக் கண்டனம் செய்கிறார் மஹாகவி பாரதியார்.

தொடர்ந்து அடுத்த பாராவைப் பார்ப்போம்:_

 

 

ஆனால் இந்தியாவில் மஹம்மதீயம், கிறிஸ்தவம் முதலிய நூதன மதங்களை நுழைத்த பரதேச மதப்பிரவசன கர்த்தர்களும், அவர்களுக்குச் சகாயமாக இருந்து வேலை செய்த பிற்காலத்திய அயல்நாட்டிலிருந்து வந்து இந்தியாவின் மேல் படையெடுத்த சத்துருக்களும், நூதன மதத்திற் சேர்ந்த இந்தியர்களுக்கு அப்பெயரைக் கொண்ட ஜாதியரென்று பெயர் கொடுத்து மறுபடியும் இவர்கள் தங்கள் தாய்நாட்டாருடன் கூடிக் கொள்வனை கொடுப்பனை செய்தும், உண்டு, உடுத்தி, உலாவியுமிருக்கவொட்டாமல் பிரித்து வைத்துக் காலக்கிரமத்தில் இவர்களது ஸஹோதர இந்தியர்கள் மீது பலத்த துவேஷத்தையும் விருத்தி செய்து விட்டார்கள். சுயநலத்தை நாடியே இப்பிரதேச பாதிரிகளும், மற்றுமுள்ள மதகுருமார்களும் இத்தகைய பேதத்தை உண்டு பண்ணி விட்டார்கள். இந்தப் பேதத்தை அவ்வக்காலத்திய அன்னிய ஜாதி இராஜாங்கங்களும் விருத்தி செய்து தங்கள் நிலைமையை உறுதிப்படுத்திக் கொண்டு வந்தன.”

இன்றைய ஹிந்துமுஸ்லீம் பிரச்சினைக்கு, மைனாரிட்டி மதத்தவர்கள் என்ற பிரச்சினைக்கு காரணம் தேசீய உணர்வு இல்லாமல் செய்ய வேண்டும் என்ற ஆங்கிலேயனின் சூழ்ச்சியே காரணம் என்பதை மஹாகவி இப்படி மிகத் தெளிவாகக் கூறுகிறார் .

 

 

அத்தோடு மட்டுமல்ல, பாபர் முதல் ஆங்கிலேயர் வரையுள்ள அனைவரும் இந்தியருக்குள் வேற்றுமை உணர்ச்சியை வித்திட்டு வளர்த்தனர் என்பதையும் அவர் தனது கட்டுரையில் விரிவாக எடுத்துரைக்கிறார்.

 

ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையை அவர் அப்படியே சுட்டிக் காட்டுகிறார். அவரது கூற்றை அப்படியே பார்ப்போம்:“’பிரித்தாளுவதுஎன்பது இக்காலத்திய ஆங்கிலேய இராஜதந்திரத்தில் மிக்க கௌரவமான முறையாகக் கையாளப்பட்டு வருகிறது

 

 அவரது கட்டுரையின் முக்கியமான பகுதியைத் தொடர்ந்து அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

                                                   –தொடரும்

Leave a comment

Leave a comment