பாரதி நினைவுகள்: மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! -2

bharathi_ninaivukal_copy

Article No. 2095

Written by ச. நாகராஜன்
Date : 24 August  2015
Time uploaded in London :– 10-10

ச.நாகராஜன்

  1. பாரதி நினைவுகள்

பாரதி பற்றிய இந்த நூலை எழுதியவர் யதுகிரி அம்மாள். இதன் முதற் பதிப்பு 1954 செப்டம்பர் மாதம் அமுத நிலையம் பிரைவேட் லிமிடட்-ஆல் வெளியிடப்பட்டது. நூலின் அன்றைய விலை 30 காசுகள் மட்டுமே! 87 பக்கங்கள் அடங்கிய இந்த நூலை “பாரதியின் தோழராக விளங்கிய என் பிதா ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீநிவாஸாச்சாரியாரின் திருவடித் தாமரைகளில் இச் சிறு நூலை அன்புக் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்” என்று சமர்ப்பணம் செய்துள்ளார் யதுகிரி அம்மாள்.

அறிமுகம் என்ற உரையில் ரா.அ.பத்மநாபன் கூறுவது:-

“வாசகர்கள் முன் உள்ள இந்த “பாரதி நினைவுகள்” நூலை எழுதிய ஶ்ரீமதி யதுகிரி அம்மாள் மண்டயம் ஶ்ரீ ஶ்ரீநிவாஸாச்சாரியாரின் மூத்த புதல்வி. புதுவையில் பாரதியார் இருந்த சமயம் சிறுமியாக இருந்தவர். பாரதியாருடன் பல்லாண்டுகள் நெருங்கிப் பழகி, அவரது அன்புக்குப் பாத்திரமாகும் பேறு பெற்றிருந்தவர். தமது சிறு வயதில் பாரதியாரைத் தாம் அறிந்த வகையில் கவிஞரை நமக்கு விவரிக்கிறார் ஶ்ரீமதி யதுகிரி அம்மாள்”         (ரா.அ.பத்மநாபன், சென்னை, 3—9-54இல் எழுதியது)

“பாரதியாரைப் பற்றி எனக்குத் தெரிந்ததைப் பிறரும் அறியச் செய்யலாம் என்று ஏதோ எழுத முன் வந்தேன். இக்குறிப்புகள் 1938-39-ல் எழுதப்பட்டவை. இன்ரு அச்சேறுகின்றன” என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் யதுகிரி (28-7-1954இல் எழுதப்பட்டது முன்னுரை)

நூலில் 26 அத்தியாயங்கள் உள்ளன.

பாரதி நினைவுகள் - யதுகிரி

உலையில் போடுவதற்காக வைத்திருந்த அரிசியில் கால் பங்கு கூட இல்லை என்று செல்லம்மா தவிக்கையில், பாரதியார், “வா, செல்லம்மா, இந்தக் குருவிகளைப் பார்! எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றன” என்று கூறி அரிசியைக் குருவிகளுக்குப் போட்ட சம்பவம் விட்டு விடுதலையாகி என்ற அத்தியாயத்தில் விவரமாகத் தரப்பட்டுள்ளது.

பாம்பாட்டி பாடிய பாட்டில் ஒரு பாடலை எழுதித் தருவதாக பாரதியார் யதுகிரியிடம் கூறி விட்டு மறுநாள் “பாரத தேசமென்று பெயர் சொல்லுவார்” பாடலை எழுதிக் கொண்டு வந்து பாடிக் காட்டிய சம்பவம் பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் என்ற அத்தியாயத்தில் தரப்பட்டுள்ளது.

போட்டிக்கு எழுதப்பட்ட செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற பாடல் எழுந்த வரலாற்றையும் அதை வ.வெ.ஸு. ஐயர் வெகுவாகப் பாராட்டியதையும் செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற அத்தியாயம் சுவையாக விவரிக்கிறது.

காணி நிலம் வேண்டும் என்ற பாடல் எப்படி எழுந்தது? ஜப்பானில் புதிய சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன் படி அந்த ராஜ்யத்தை ஒரே சமனாகப் பிரித்து எல்லா ஜப்பானியருக்கும் ஆளுக்கு இவ்வளவு என்று பிரித்துக் கொடுத்து விடுவது, இனி பிச்சைக்காரர்களும், சோம்பேறிகளும் தங்கள் தேசத்தில் இருக்கக் கூடாது என்று செய்தார்கள். இதைப் பார்த்த புதுவை சுதேசியார் நம் நாட்டில் ஒரு குடும்பம் பிழைக்க எவ்வளவு நிலம் வேண்டும் என்று ஆராய்ந்தனர்.

அதற்கு விடையே காணி நிலம் வேண்டும் என்ற பாரதியாரின் பாட்டு,

ஏராளமான சம்பவங்கள். உள்ளத்தைத் தொடுபவை சில. உருக்குபவை சில. உணர்ச்சி ஊட்டுபவை பல.

பாரதி ஆர்வலர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

****

Leave a comment

Leave a comment