Compiled by London swaminathan
Date : 1 செப்டம்பர் 2015
Post No. 2113
Time uploaded in London: காலை 8-45
பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது பழமொழி. ஆனால் பெண் என்றால் பேயும் அஞ்சும் – என்ற ஒரு பேய்க் கதையைக் கேளுங்கள். இது நமது கிராமப்புற மக்கள் சொல்லும் கதை. மனைவியை அடிக்கும் கணவன் பற்றியே படித்துப் பழக்கப் பட்டுவிட்டோம். ஆனால் கணவர்களைக் கொடுமைப்படுத்தும் மனைவிமார்களும் உண்டு. வெளியே சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு கணவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்!
ஒரு ஊரில் ஒரு பிராமணன் இருந்தான். அவன் மனைவி அந்தப் பிராமணனை தினமும் அடிப்பாள். கிட்டத்தட்ட அது ஒரு தினசரி பூஜை போல ஆய்விட்டது அந்தப் பெண்மணிக்கு. இதற்கு அவரது வறுமையும் ஒரு காரணம். வெளியே போய்ச் சம்பாதித்து வாரும் என்று சொல்லி அடிப்பாள். கொஞ்சம் காலம் கழித்து அவருக்கு அலுத்துப் போகவே, “அன்பே! ஆருயிரே! அடுத்த ஊரில் இருந்து எனக்கு பூஜைக்கு அழைப்பு வந்துள்ளது. அங்கு போனால் நல்ல வரும்படி வரும் என்று சொல்லிவிட்டுப் புறப்பாட்டார்.
அவளோ, ஐயய்யோ, இனி நான் யாரை தினமும் அடிப்பேன்? யார் எனக்கு அரிசி,மளிகை சாமான்கள் வாங்க காசு கொடுப்பார்கள்? என்றாள். அவர் சொன்னார், “ கவலையே படாதே. அதோ, சாலையின் ஓரத்தில் புளிய மரம் இருக்கிறதல்லவா? அதனிடம் எல்லாம் சொல்லிவிட்டேன். தினனும் அதைப் போய் அடி”, என்றார்.
அவரும் புறப்பட்டார்; அவளும் தினசரி யாருக்கும் தெரியாமல் புளியமரத்தை அடித்தாள். ஆனால் பணமே கிடைக்கவில்லை. அந்தப் புளிய மரத்தில் ஒரு பேய் வசித்துவந்தது. அது இந்தப் பெண்மணியின் அடி தாங்காமல் கஷ்டப்பட்டுவந்தது.
பத்து நாட்களுக்குப் பின்னர் கணவர் திரும்பிவந்தவுடன், “வாருங்கள் இந்தப் புளிய மரத்தைத்தானே அடிக்கச் சொன்னீர்; அது பணமே தரவில்லை” என்று சொல்லி அந்த மரத்தைக் காட்டினாள். அவர் சொன்னார், நீ வீட்டுக்குப் போ. நான் இரண்டு அடி கொடுத்து விசாரிக்கிறேன் – என்று சொல்லி மனைவியை அனுப்பிவைத்தார். இவர் அடிக்கப் போகிறேன் என்று சொன்னவுடன் அந்தப் பேயே வெளியே வநு, ஏ பிராமணா! நான் பத்து நாட்களுக்கே உன் மனைவியின் அடியைத் தாங்க முடியவில்லை. நீ தினமும் அடிபடுவது எனக்குத் தெரியும். எப்படித் தாங்கினாய்? உன்னைக் காப்பாற்ற ஒரு வழி வைத்துள்ளேன். நான் மஹாராணியைப் போய்ப் பிடித்துக் கொள்கிறேன். உடனே மஹாராஜா பெரிய பெரிய மந்திரவாதிகளை அழைத்து பேய் ஓட்ட முயற்சி செய்வார். நான் போகவே மாட்டேன். நீ வந்த பின்னர் ஓடிப் போய்விடுகிறேன். உனக்கு நிறைய சன்மானம் கிடைக்கும்; நீ சுகமாக வாழ். ஆனால் ஒரு எச்சரிக்கை! நான் வேறு யாரையாவது பிடிக்கும்போது நீ உதவி செய்ய மீண்டும் வராதே; எச்சரிக்கை! – என்று பேய் சொன்னது.
பிராமணனுக்கு மிகவும் சந்தோஷம். பேய், அரசன் மனைவியைப் பிடித்துக் கொள்ளவே அரசன் தண்டோரா போட்டு நாட்டின் மிகப் பெரிய மந்திரவாதிகளை அழைத்தான். பலனே இல்லை. உடனே இந்தப் பிராமணன் போய், என்னிடமுள்ள மந்திர சக்த்தியை வைத்து ஓட்டுகிறேன் என்று சொன்னார். அரசனும் சம்ம்மதித்தான். பிராமணனைப் பார்த்தவுடன் பேய் ஓட்டம் பிடித்தது. அரசன், அந்தப் பிராமணனுக்கு பெரிய பரிசுகள் கொடுத்து அனுப்பினான்.
பிராமணன் மனைவிக்கு ரொம்ப சந்தோஷம். அந்தப் பேய் இப்பொழுது மந்திரியின் மனைவியைப் பிடித்துக்கொண்டது. அரசன், வேறு யாரையும் அழைக்காமல் , பிராமணனை அழைத்துவர ஆள் அனுப்பினான். மனைவிக்கு மேலும் பொருள் கிடைக்கும் என்று ஆசை. உடனே பிராமணனைப் பார்த்து, ஓய்! போய்வாரும் என்று கெஞ்சினாள். அவரும் ராஜா சொல்லைத் தட்ட முடியாதே என்று எண்ணி, அங்கே போனார். உடனே அந்தப் பேய், ஏ, பிராமணா! வேறு யாரைப் பிடித்தாலும் வரக்கூடாது என்று சொன்னேனே! உனக்கு எவ்வளவு ஆசை? ஏன் வந்தாய்? என்று கேட்டது.
அதற்கு அந்தப் பிராமணன் சொன்னான், “ எனக்கும் வரப் பிடிக்கவில்லை. என் மனைவி தான் அனுப்பி வைத்தாள் என்றான். அதைக்கேட்டவுடன் பேய்க்கு உடம்பெல்லாம் நடுங்கியது. மனைவியா? அவள் இப்பொழுது எங்கே இருக்கிறாள்? என்று கேட்டது. அவனும், நான் புறப்பட்டபோது அவளும் புறப்பட்டாள். மெதுவாக நடந்தாள். இப்பொழுது இந்த வீட்டு வாசலுக்கு வந்திருக்கவேண்டும் – என்றான். அதைக் கேட்டவுடன், முன்னர் வாங்கிய அடிகள் நினைவுக்கு வரவே, பேய் ஓட்டம்பிடித்தது!
இந்த முறை மன்னனும் மந்திரியும் நிறைய பணமுடிப்புகள், அதோடு சேவகர்களின் பாதுகாப்பு எல்லாம் கொடுத்து பிராமணனை வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். அப்புறம் அவன் மனைவி அந்தப் பிராமணனை அடிக்கவேயில்லை.
-இது ஒரு நாட்டுப்புற கதை


You must be logged in to post a comment.