அப்பரின் ஹஹ்ஹஹ்ஹா சிரிப்பு!

IMG_3255

Written by Santanam Nagarajan

Date : 8 September  2015

Post No. 2136

Time uploaded in London: – 6-10 AM

 

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

 

தேவார சுகம்

.நாகராஜன்

 

 

சிரிப்பில் இருக்குது நூறு வகை!

மனித குலத்துக்கே சொந்தமானது சிரிப்பு. சிரிப்பை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? ஒன்று, இரண்டு? அட பத்து விதமாகப் பிரிக்கலாமா?

ஹூம்!

தத்துவ என்சைக்ளோபீடியா ஒன்று நூறு வகையாகச் சிரிப்பு சம்பந்தமான கொள்கைகள் பிரிக்கப்படுகிறது என்கிறது. ஃப்ராய்ட் வகைப்படுத்திய சிரிப்பு ரிலீஃப் தியரி (Relief Theroy) எனச் சொல்லப்படுகிறது. இன்னும் பல்வேறு சிரிப்பு ஆராய்ச்சியாளர்கள் (Thomas Hobbes- இன்) சுபீரியாரிடி சிரிப்பு, (Robert Solomon—இன்)  இன்ஃபீரியாரிடி சிரிப்பு என்றெல்லாம் சிரிப்பை வகைப்படுத்துகிறார்கள்.

சிரிப்பதை விட்டு விட்டுச் சிரிப்பு பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால் சிரிப்பு வருமா, என்ன!

பகலும் இருள் தான் சிரிக்காதவர்களுக்கு

தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிரிக்கத் தெரியாதவர்களுக்கு இந்தப் பெரிய உலகம் பகல் பொழுதிலும் கூட இருளில் மூழ்கிக் கிடப்பதாகவே தோன்றும் என்கிறார் இப்படி:-

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் 

பகலும்பாற் பட்டன்று இருள் (குறள் 999)

யாரைப் பார்த்துச் சிரிக்க வேண்டும் என்பதை எபிக்டெடஸ் என்ற அறிஞர் இப்படிச் சொல்லி விட்டார் தெளிவாக:-

“He who laughs at himself never runs out of things to laugh at.”

தன்னைப் பார்த்துச் சிரிப்பவனுக்கு சிரிக்க ஏராளமான விஷயங்கள் இருக்குமாம்!தமிழ் வரலாற்றில் தன்னைப் பார்த்துப் பொருள் பொதிந்து சிரித்ததோடு அதை அதிகாரபூர்வமாகப் பதிவு செய்தவர் யாராவது இருக்கிறார்களா?இருக்கிறார்கள்!

IMG_3253

முதலாமவர் அப்பர்! இரண்டாமவர் ஒரு ஆழ்வார்!

அப்பரின் சிரிப்பு

அப்பர் ஒரே ஒரு வேலையைத் தான் முழு நேர வேலையாகக் கொண்டிருந்தார். அது தான் – இறைவனை அறிவது.

வால் அறிவனை அறிந்து விட்டால் மற்ற அறிவெல்லாம் வந்து விடாதா என்ன?

காட்டிலே, மேட்டிலே, கழனியிலே, கோவிலிலே என அங்கிங்கெனாதபடி கடவுளைத் தேடியவர் அவரைக் கண்டே விட்டார்.

எவ்வளவு உழைப்பு; எத்தனை காலம்!

கடவுளின் இருப்பிடத்தை அறிந்தவுடன் அவருக்கு சிரிப்புத் தான் வந்தது. அதை அப்படியே தமிழில் பாடலாகப் பதிவு செய்து விட்டார்.

பாடல் இது தான்:-

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்

தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்

உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று

வெள்கினேன் வெள்கி நானும் விலா இறச் சிரித்திட்டேனே!

கள்ளத் தொண்டில் நெடுங்காலத்தை அங்கும் இங்குமாய் அதிலும் இதிலுமாய்ப் போக்கினார் அப்பர். கள்ளத் தன்மை போய் தெளிவுற்றவன் ஆனார். அந்த நல்ல நிலையில் அவர் நாடியதைக் கண்டே விட்டார்.

நினைப்பவர்களில் உள்ளே இருந்து அவர்கள் நினைப்பதை எல்லாம் (உடனுக்குடன்) நீ அறிவாய் என்பதை கண்டு கொண்டேன் என்கிறார் அப்பர். இதை நினைத்தவுடன் அவருக்குச் சிரிப்பு தான் வந்தது. ஹஹ்ஹஹ்ஹாவென்று விலாப் புடைக்கச் சிரித்தாராம்.

உள்ளே இருப்பவனை வெளியில் தேடியதற்கு ஒரு சிரிப்பு; உள்ளே இருந்து ஒவ்வொரு கணமும் எண்ணுவதை அறிந்தவனை கள்ள மனத்துடன் யாரும் இதை அறிய மாட்டார்கள் என்று அனைத்தையும் செய்ததற்கு ஒரு சிரிப்பு…..

பாடலைப் படித்து சற்று சிந்தனையுடன் ஆழ்ந்து யோசித்தால் நம் சிரிப்பின் கொள்கை வகைகள் நூறையும் தாண்டி விடும்.

கஸ்தூரி மான் ஒன்று கஸ்தூரி வாசனை தன்னிடமிருந்தே வருகிறது என்பதை அறியாது வாசனையைத் தேடி ஒரு அடி முன்னே வைக்கும். அதன் உடலில் இருக்கும் வாசனையும் ஒரு அடி முன்னேறும். இப்படி அடி அடியாய்ப் பாய்ச்சல் பாய்ச்சலாய் அது கஸ்தூரியைத் தேடுமாம் – வாழ்நாள் முழுதும்!

அப்படி கஸ்தூரி மான் போல நெடுங்காலம் உத்தமனைத் தேடிய அப்பர், இறுதியில் இறைவன் அருளால் உள்ளேயே கண்டு கொண்டார் உத்தமனை! அப்போது தான் ஹஹ்ஹஹ்ஹா என்ற விலா எலும்பு ஒடியும்படியான சிரிப்பு வந்தது!

haha-logo

உடம்பு என்னும் மனை அகத்து

உள்ளமே தகளி ஆக

மடம்படும் உணர் நெய் அட்டி

உயிர் எனும் திரி மயக்கி

இடம் படு ஞானத்தீயால்

எரிகொள இருந்து நோக்கில்

கடம்பு அமர் காளை தந்தை

கழல் அடி காணல் ஆமே

இதை விடத் தெளிவாக இறையைக் காணும் வழியை உரைக்க முடியுமா?

“உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையான

உள்கினேன் நானும் காண்பான் உருகினேன்”

என்று நமக்காகத் தம் அனுபவத்தை அப்பர் இப்படி பதிவு செய்கிறார்.

அப்பரின் ஹஹ்ஹஹ்ஹா சிரிப்பைப் போல அதே சிரிப்பைச் சிரித்தவர் ஒரு ஆழ்வாரும் கூட!

haha

ஆழ்வாரின் சிரிப்பு

அவர் தான் ‘திருமாலை’யைப் படைத்த  தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

அவர் அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்:-

உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வொன்றில்லா

கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு

உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறிதியென்று

வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே

அப்பரின் வார்த்தைகள் பல அப்படியே வருவதைப் பார்க்கலாம். அனுபவம் ஒன்று தானே!

அப்பர் கண்டது சிவனை; ஆழ்வார் கண்டது ஹரியை.

அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு.

அனுபவம் ஒண்ணு; விளைந்த ஹஹ்ஹஹ்ஹாவும் ஒண்ணு தான்!

******************

Leave a comment

Leave a comment